Multi pin socket( பல இணைப்புச் சொருகி) | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 26

எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியில், அடுத்த கட்டுரையிலிருந்து லாஜிக் கதவுகள் தொடர்பாக ஒரு குறுந்தொடர் கட்டுரையை எழுதலாம் என முடிவு செய்திருக்கிறேன்.

அந்த கட்டுரையை தொடங்குவதற்காக, சிறிது காலம் தகவல்களை முறையாக திரட்டி வருகிறேன்.

இருந்த போதிலும், வாரந்தோறும் எழுதும் கட்டுரையை தொடர வேண்டும் எனும் நோக்கில் இன்றைக்கு எதைப்பற்றி எழுதலாமென நீண்ட நேரம் யோசித்துக் கொண்டிருந்தேன்.

அப்பொழுதுதான், பயன்படுத்தாமல் தூக்கிப்போட்டிருந்த ஒரு பழைய multi pin plug கிடைத்தது.

பொதுவாக, நம் அனைவரின் வீட்டிலும் பயன்படுத்தக்கூடிய ஒரு முக்கியமான பொருள். டிவி மற்றும் செட்டாப் பாக்ஸுக்கு வழங்க, ஒரே ஒரு மின் இணைப்பு சாக்கிட் மட்டுமே வீட்டில் இருக்கும். அந்த நேரங்களில், இது போன்ற ஒரு மல்டிபிளக்கை வாங்கி நடுவில் இருப்பதில் டிவியின் நினைப்பையும் மேற்புறமாக செட்டாப் பாக்ஸின் இணைப்பையும் வழங்கும் பல நபர்களையும் நான் பார்த்திருக்கிறேன்.

மேலும், ஒரே நேரத்தில் இரண்டு மொபைல் போன்களை சார்ஜ் செய்வதற்கு கூட இவற்றை பயன்படுத்த முடியும்.

எங்கள் வீட்டில் கூட கடந்த 40 ஆண்டுகளாக, இன்னும் செயல்படு வகையில் ஒரு மல்டிபிளக்ஸ் இருப்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.

அடிப்படையில், இவை எவ்வாறு வேலை செய்கின்றன. நம் அனைவர் வீட்டிலும் சுமார் 16 ஆம்பியர் வரை மின்சாரம் வருகிறது.

நாம் அனைவருக்கும் தெரியும், மின்னோட்டத்தின் அளவு தான் ஆம்பியர் .

நிறைய பேர் மின்னழுத்தம் மற்றும் மின்னோட்டத்திற்கு இடையே குழப்பம் அடைகிறார்கள்.

நான் கீழே குறிப்பிடுகிற வாசகத்தை சரியாக ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்! இனிமேல் குழப்பம் ஏற்படாது.

குறுக்கு வழியில் மின்னழுத்தம் சமமாக இருக்கும். நேர்வழியில் மின்னோட்டம் சமமாக இருக்கும்.

நேராக இருக்கக் கூடிய ஒரு கடத்தியில், மூன்று மின் விளக்குகள் தொடர்வரிசையாக இணைக்கப்பட்டிருப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள்.

முதலாவது, மின் விளக்கிற்கு அதிக மின் அழுத்தம் கிடைக்கும். அதுவே, மூன்றாவது மின் விளக்கிற்கு குறைவான மின் அழுத்தமே(potential drop)கிடைக்கும்.

காரணம், தொடர்பு வரிசையின் போது மின்னழுத்தம் பகிர்ந்து  வழங்கப்படுகிறது அல்லது போகப் போக குறைகிறது.

ஆனால், அதே நேரம் மூன்று மின் விளக்கிற்கும் ஒரே அளவிலான மின்னோட்டமே கிடைக்கும். இந்த செயல்பாடுகள் கொஞ்சம் குழப்புவதாக இருந்தால், நம்முடைய முதலாவது கட்டுரைகளை படித்துவிட்டு இந்த கட்டுரையை படியுங்கள்.

நம்முடைய, இன்ன பிற எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளின் இணைப்பு கீழே வழங்கப்பட்டுள்ளது.

kaniyam.com/category/basic-electronics/

அதேநேரம், இணை மின்சுற்றில் மூன்று மின்விளக்குகள் இணைக்கப்பட்டு இருக்கும் பட்சத்தில் அந்த மூன்று மின் விளக்குகளுக்கும் ஒரே அளவிலான மின் அழுத்தமே கிடைக்கும் அதே நேரம் மின்னோட்டமானது மூன்று பாகங்களாக பிரியும்.

இதை விளக்கும் விதமாக கீழே படங்களை இணைத்து இருக்கிறேன்.

இந்த அடிப்படையில் தான், நான் முன்பு குறிப்பிட்ட மல்டிபின் சாக்கட்டுகள் செயல்படுகின்றன. அதாவது, உதாரணத்திற்கு நீங்கள் இத்தகைய ஒரு மல்டிபின் சாக்கெட்டில் மூன்று தொலைக்காட்சி பெட்டிகளை இணைத்து இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.

உதாரணமாக, ஒவ்வொரு தொலைக்காட்சி பெட்டியும் சுமார் இரண்டு ஆம்பியர் மின்சாரத்தை பயன்படுத்துகிறது என்றால், எவ்வித பிரச்சனையும் கிடையாது.

மூன்று தொலைக்காட்சி பெட்டிகளையும் ஒரே நேரத்தில் ஒரே இணைப்பின் மூலம் பயன்படுத்திவிட முடியும்.

இங்கே மல்டி பின் பிளக் என்பது, இணை மின்தொடர் அடிப்படையில் செயல்படுகிறது.

எனவே, மூன்று தொலைக்காட்சி பெட்டிகளுக்கும் முறையை 220 வோல்டு அளவிலான மின்னழுத்தம் சமமாக கிடைக்கும். அதேநேரம், மூல இணைப்பில் இருந்து வரக்கூடிய 6 ஆம்பியர் மின்சாரமானது மூன்று தொலைக்காட்சி பெட்டிகளுக்கும், தலா இரண்டு ஆம்பியர் என பகிர்ந்து அளிக்கப்படும்.

ஆனால், நீங்கள் மூன்று தொலைக்காட்சி பெட்டிகளுக்கு பதிலாக, ஒன்றில் இன்டக்சன் அடுப்பையும், இன்னொன்றில் குளிர்சாதன பெட்டியையும், மூன்றாவது இணைப்பில் சலவை இயந்திரத்தையும் இணைத்தால் ஒட்டுமொத்தமாக தீபாவளி கொண்டாட வேண்டியதுதான்.

எப்பொழுது இணைப்பின் அளவானது பத்து ஆம்பியரை கடக்கிறதோ! அப்பொழுதே வெப்பம் அதிகமாக தொடங்கி விடும். உதாரணமாக, குளிர்சாதனப்பெட்டி மட்டுமே பத்து ஆம்பியர் அளவில் மின்சாரத்தை எடுத்துக் கொள்ளும். இத்தகைய, சூழலில் ஒட்டுமொத்தமாக தீ விபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

இது ஏதோ சாதாரண தவறு போல தெரியலாம். ஆனால், இதைத்தான் அறிந்தும்,அறியாமல் நம்மில் பலரும் செய்து வருகிறோம்.

அவசரத்திற்கு வேலை செய்வதாக நினைத்துக்கொண்டு, இதுபோன்ற மல்டிபின் சாக்கெட்டுகளை தவறாக பயன்படுத்துவது எப்பொழுதும் பிரச்சனையே கொடுக்கும்.

மேலும், இவற்றில் இரண்டிற்கும் மேற்பட்ட மின்சாதன கருவிகளை இணைக்கும் போதே, கம்பிகள் அதிகமாக வெப்பமடைய தொடங்கும். மேலும், பிளாஸ்டிக் மூலம் தயாரிக்கப்பட்டிருக்கும் இவை எளிதில் உருகி தீ விபத்து ஏற்படக்கூட அதிகப்படியான வாய்ப்பு இருக்கிறது.

மேலும், திடீரென்று அதிகப்படியான மின்னழுத்த வேறுபாடு ஏற்படும்போது உங்களுடைய மின்சார கருவிகள் ஒட்டுமொத்தமாக சேதம் அடைய வாய்ப்பு இருக்கிறது.

எனவே, சிறு சிறு தேவைகளுக்கு மட்டுமே மல்டிப் பின் பிளக்குகளை பயன்படுத்துங்கள்! மாறாக,  மிகப்பெரிய கருவிகளை இணைத்தால் கருகிப் போவதுதான் மிச்சம்.

மேற்படி, இந்த கட்டுரை குறித்து உங்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் இருப்பின் தயங்காமல் என்னுடைய மின்மடல் முகவரிக்கு மடல் இயற்றவும். உங்களுடைய கருத்துக்கள் எப்போதும் வரவேற்கப்படுகிறது.

கட்டுரையாளர்:-
ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
(தென் திருவிதாங்கூர் இந்து கல்லூரி, நாகர்கோவில் – 02)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின்மடல் முகவரி : srikaleeswarar@myyahoo.com
இணையம் : ssktamil.wordpress.com

%d bloggers like this: