“திறந்த மூலம் கல்லூரி வளாகத்துக்கு வருகிறது” என்ற ஒரு தொடர் நிகழ்வை ஓபன்ஹாட்ச் (OpenHatch) நடத்துகிறது. கல்லூரி மாணவர்களுக்கு திறந்த மூலக் கருவிகளையும், திட்டங்களையும் மற்றும் கலாச்சாரத்தையும் அறிமுகப்படுத்துவதே இதன் நோக்கம். இந்நிகழ்ச்சியில் எங்களுக்கு ஒரு புதிய கேள்வி கிடைத்தால், நாங்கள் அதைக் குறித்துக்கொண்டு எங்கள் வலைப்பதிவில் இன்னும் முழுமையாக அதற்கு பதில் தருகிறோம். இங்கே குறிப்பாக, திறந்த மூலத்துக்கு புதிதாக வருபவர்களுக்கு பொருத்தமானதாக இருக்கும் என்ற கேள்விகளைத் தொகுத்துத் தருகிறோம்.
கேள்வி: நான் கற்றுக்குட்டி என்பதால் திட்டத்துக்கு ஒரு பாரமாக இருப்பேனோ என்று கவலைப்படுகிறேன். திறந்த மூல சமூகத்தைக் கட்டியெழுப்ப ஒரு திட்டம் என்ன மாதிரி முயற்சிகள் செய்ய வேண்டும்?
பதில்: முதன் முதலாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுவது என்னவென்றால் லினஸ் டோர்வால்ட்ஸ் (Linus Torvalds) போன்ற திறந்த மூல சமுதாயத்தைக் கட்டியெழுப்பிய நிபுணர்களுக்கு இந்த பதற்றம் நன்கு புரிகிறது. திட்ட பராமரிப்பவர்கள் முக்கிய வேலைகளுக்கிடையே புதிய பங்களிப்பாளர்களுக்கு பயிற்சி கொடுக்க பொறுமையும் தேவை நேரமும் எடுக்கும். லினக்ஸ் உட்கருவை (kernel) உருவாக்கியவரும் மற்றும் அதை மேம்பாடு செய்வதில் முக்கிய பொறுப்பு வகிப்பவரும்தான் லினஸ். பகிர்வுப் பதிப்பு கட்டுப்பாடு அமைப்பு கிட் (Git) உருவாக்கியவரும் அவர்தான். லினக்ஸ் உட்கரு பற்றிய அஞ்சல் பட்டியலில் 2004 ல் அவர் இடுகையிட்ட இரண்டு பத்திகளை நான் ஒரு மேற்கோளாகக் காட்டுகிறேன்:
21 டிசம்பர் 2004 செவ்வாய்க்கிழமையன்று ஜெஸ்பர் ஜூல் (Jesper Juhl) எழுதினார்:
“சரிசெய்வது, திருத்துவது போன்ற இந்த சின்ன சீரமைப்பு வேலைகள் செய்யும் முயற்சியை நான் நிறுத்தி விடவா? இதில் பயனை விட கவனச் சிதறல் அதிகமாக உள்ளதா? சில நேரங்களில் மிகவும் அறியாமையால் நான் செய்யும் ஒட்டு வேலைகள் இன்னும் திறமையான நிரலாளர்களுக்கு பெரும் தொல்லையாக இருக்கிறதா? கிடைக்கும் பின்னூட்டத்திலிருந்து நான் கற்றுக் கொள்ள முயற்சி செய்கிறேன், மற்றும் என் சீரமைப்பு வேலைகள் படிப்படியாக முன்னேறுகின்றன என்று நம்புகிறேன். ஆனால் நான் செய்வது உதவியைக் காட்டிலும் தொந்தரவு அதிகம் என்றால் நான் இதை நிறுத்தி விடுகிறேன்.”
லினஸ் அளித்த பதில்:
“எனக்கு சிறிய சீரமைப்பு வேலைகளில் அந்த வேலை ஒரு பெரிய சங்கதியே அல்ல. அதைவிட முக்கியம் மக்களுக்கு தங்களால் உட்கருவை மாற்ற முடியும் என்ற எண்ணம் பழக்கத்தில் வந்து விடவேண்டும். GPL உரிமம் அந்த உரிமையை எனக்குக் கொடுக்கிறது என்று அறிவார்ந்த நிலையில் புரிந்தால் மட்டும் போதாது, நடைமுறையில் நான் சிறிய மாற்றம் செய்தேன் என்று அவர்கள் சொல்லிக்கொள்ள வேண்டும்.”
மேலும் பெரும்பாலான திட்டங்களில் திட்டத் தலைவர் மட்டுமே பங்களிப்பவராக இருக்கலாம். ஒரு புதுமுகம் கேள்விகளைக் கேட்டுத் தொந்தரவு செய்தாலும் அவர்கள் இன்னும் ஆர்வத்துடன் வேலை செய்ய முடியும் என்பதையும் கருத்தில் கொள்ளுங்கள்!
எளிதில் அணுகக்கூடிய திறந்த மூல சமூகத்தை அமைப்பது அவ்வளவு சுலபமாக இருந்தால், அனேகமாக எல்லாத் திட்டங்களும் அதைச் செய்வார்களே. அதற்குக் கொஞ்சம் மெனக்கெட வேண்டும். நல்ல ஆவணங்கள், நிறுவல் வழிகாட்டிகள், நன்கு பராமரிக்கப்படும் பிரச்சினை தரவுத்தளம், தீவிர மேம்பாட்டு வேலை, சமூக நடத்தைக்குத் தரம் ஆகியவை புதுமுகங்களை வரவேற்பது மட்டுமல்ல எல்லோருக்குமே திட்டத்தை நல்லதாகச் செய்கிறது. ஆனால் அதற்கு நேரமும் தேவை, மெனக்கெடவும் வேண்டும். பல திட்ட சமூகங்கள் இதைச் செய்யத் தயாராக இல்லை. இதற்காகத்தான் ஓபன்ஹாட்ச் (OpenHatch) இருக்கிறது! சில திட்டங்கள் பங்களிப்பாளர்களை வரவேற்பதற்கு அதிக கவனம் செலுத்துகிறார்கள் என்று எங்களுக்குத் தெரியும். நாங்கள் அந்த திட்டங்களைக் கண்டுபிடிக்க உங்களுக்கு உதவுகிறோம்.
புதுமுகங்களை வரவேற்கும் இயல்புள்ள திட்டங்கள் உங்களை ஒரு சுமையாகக் கருதுவதில்லை. பிரச்சினை தளத்திலுள்ள வழுக்களைப் புரிந்து கொள்வதிலோ அல்லது நிரலாக்கச் சூழலை நிறுவுவதிலோ நீங்கள் அவதிப் பட்டாலும் அவர்கள் உங்களை பேருதவி என்றே கருதுகிறார்கள். நீங்கள் ஒரு திறந்த மூல திட்ட உறுப்பினரை உதவி கேட்கும் போது அவர்களுக்கு தங்கள் திட்டத்தின் எந்தப் பகுதியில் குழப்பமான அல்லது தவறான தகவல்கள் உள்ளன என்ற முக்கிய பின்னூட்டம் கிடைக்கிறது. நீங்கள் கேட்கும் கேள்விகள் மற்றும் உங்களுக்குத் தேவையான வழிகாட்டலை வைத்து பின்னர் மற்றவர்களுக்கு எப்படி உதவுவதென்று அவர்களுக்குத் தெரிய வரும். உங்களுக்கு திட்டம் பற்றி நன்றாகத் தெரிந்தபின் நிச்சயமாக நீங்களும் இன்னும் பலருக்கு உதவ முடியும். நல்ல நோக்குள்ள திட்டங்கள் அந்த சாத்தியத்தை மனதில் வைத்து உங்களுடன் ஒத்துழைப்பார்கள்.
நாம் தொந்தரவு செய்கிறோமோ என்று கவலைப்படுபவர்களுக்கு இரண்டு எளிய விதிகள்: முதலாவது அஞ்சல் பட்டி அல்லது வழுத்தளத்தில் நீங்கள் பேசுவதை யாரும் நிறுத்தச் சொல்லவில்லை என்றால், இன்னும் பதில் வரவில்லை என்றாலும், நீங்கள் தொடரலாம். இரண்டாவது, உங்களுக்கு மற்றொரு ஆலோசனை தேவையானால், #openhatch இணையத் தொடர் அரட்டை (IRC) தடத்தில் சேர்ந்து எங்களைக் கேளுங்கள்.
கேள்வி: திறந்த மூல திட்டங்கள் நிரல் மாற்றங்களை எப்படி மறுசீராய்வு செய்கின்றனர். இந்த செயல்முறை விக்கிப்பீடியாவை விட எப்படி வேறுபடுகின்றது?
பதில்: விக்கிப்பீடியாவில் எவரும் ஒரு திருத்தம் செய்தால், அது பதிவு செய்யப்பட்டு கலைக்களஞ்சியத்தில் உடனடியாக, யாவரும் படிக்கக் கூடியதாக, வெளியிடப்பட்டுவிடும். இது விக்கிப்பீடியா கலாச்சாரத்தின் ஒரு முக்கிய அங்கம். இதற்கு மாறாக, திறந்த மூல திட்டங்களில் மூல நிரலை நேரடியாக மாற்ற ஒரு சிலருக்கு மட்டுமே அனுமதி உண்டு. எவரும் மாற்றங்களை சமர்ப்பித்தால் அது மறுசீராய்வுக்கே செல்லும்.
வெவ்வேறு சமூகங்களில் வெவ்வேறு தரங்கள் மற்றும் செயல்முறைகள் உள்ளன. சில நேரங்களில் எந்த மறுசீராய்வும் இல்லாமல் பராமரிப்பாளர் மூலம் தானியங்கியாக சேர்ப்பதும் உண்டு. மற்ற நேரங்களில், லினக்ஸ் போன்ற திட்டங்களில், சமர்ப்பிப்புகள் மறுசீராய்வுக்கு அதன் அஞ்சல் பட்டிக்கு செல்லும். ஓபன்ஹாட்ச் இணைய செயலி போன்ற மற்றவை, கிட்ஹப் (GitHub) இழு கோரிக்கைகளாக அனுப்பும்.
கேள்வி: என்னைப்போல் மிகுந்த வேலையுள்ள மாணவர்கள் திறந்த மூலத்துக்கு பங்களிக்க எப்படி நேரம் ஒதுக்குவது?
பதில்: திறந்த மூல மென்பொருட்களை உங்கள் சொந்த வேலைகளுக்குப் பயன்படுத்தத் துவங்குவதுதான் நீங்கள் எடுத்து வைக்கக்கூடிய முதல் அடி. இதன் மூலம் நீங்கள் மற்ற பயனர்களுக்கும் உதவ இயலும். இந்த உதவியே மென்பொருள் சமூகத்துக்கு கணிசமான பங்களிப்பு என்பதை மறக்க வேண்டாம்! பயன்படுத்தும் செயலியில் நிபுணர் ஆவதன் மூலம், மற்றவர்கள் தாக்கல் செய்த வழுக்களை முக்கிய நிரலாளர்கள் நடவடிக்கை எடுக்கக்கூடிய அறிக்கைகளாக மாற்ற நீங்கள் உதவ முடியும். அந்த நிலையை அடைந்தவுடன், நீங்களே நிரல் எழுதி சிக்கலைத் தீர்ப்பது எளிதாகவே இருக்கும்!
எனினும் இருக்கும் பல வேலைகளுக்கிடையில் இன்னொரு வேலையையும் நுழைப்பது கடினமாக இருக்கலாம். திறந்த மூலத்தை அணுக மற்றொரு வழி அதை உங்கள் கல்வியின் ஒரு பகுதியாகவே கருதுவது. கணினி அறிவியல் மாணவர்களுக்கு, நீங்கள் வகுப்பில் கற்று வரும் கோட்பாடுகளைப் பயிற்சி செய்ய, திறந்த மூல திட்டங்கள் ஒரு சிறந்த வழி. மற்ற அறிவியல் மாணவர்கள் ஆர் (R), ஆக்டேவ் (Octave), இமேஜ் ஜே (ImageJ), ஸைக்கோ பை (PsychoPy) அல்லது ஜே மார்ஸ் (JMARS) போன்ற திறந்த மூலக் கருவிகளை பயன்படுத்தக் கற்றுக்கொள்வதும் பங்களிப்பதும் உங்கள் ஆய்வக வேலைக்கு மிக உதவும். நீங்கள் வேலை தேடும்போது உங்கள் தற்குறிப்பில் உங்கள் திறமையை எடுத்துக்காட்டவும் உதவும். கலைக்கல்லூரி மற்றும் மனிதநேய மாணவர்கள் கூட பிராசஸிங் (Processing) போன்ற திறந்த மூலக் கருவிகளைப் பற்றி கற்றுக்கொள்வது நீங்கள் வெற்றி பெற உதவும்.
மாணவர்களுக்கு திறந்த மூல திட்டங்களில் வேலை கிடைப்பதும் சாத்தியமே. நீங்கள் குனோம் வெளிக்களத் திட்டம் (GNOME Outreach Program) கூகிள் கோடை விடுமுறையில் நிரல் எழுதுதல் (Google Summer of Code) போன்ற திட்டங்களுக்கு விண்ணப்பித்து ஊதியத்துடன் பணிக் கல்வி கற்கலாம். திறந்த மூல திட்டங்களில் வேலை செய்யும் தனியார் நிறுவனங்கள் போதுமான ஆர்வமும் திறனும் காட்டும் மாணவர்களை வேலைக்கு எடுக்க வாய்ப்பிருக்கிறது. நீங்களே கூட திறந்த மூலத்தை பயன்படுத்தி சுயதொழிலைத் தொடங்க முடியும். நீங்கள் வேர்ட்பிரஸ் மற்றும் ட்ரூபல் போன்ற திறந்த மூல கருவிகளைப் பயன்படுத்தி வலைத்தளங்கள் மற்றும் செயலிகள் தயாரிக்கும் வேலை செய்ய முடியும்.
நீங்கள் திறந்த மூலத்தை உங்கள் சமூக வாழ்க்கையின் ஒரு பகுதியாகவும் ஆக்க முடியும். கல்லூரி வளாகத்தில் உங்கள் நண்பர்களை அழைத்து ஒரு வழு நீக்கும் விழா கொண்டாடுங்கள்.
இறுதியாக, திறந்த மூலத்துக்கு உங்கள் பங்களிப்புகள் பெரியதாகவும் இருக்கலாம் அல்லது சிறியதாகவும் இருக்கலாம் என்பது ஞாபகம் இருக்கட்டும். ஆவணங்கள் எழுதவோ அல்லது ஒரு திட்டத்தில் சிறிய வழுக்களை சரிசெய்யவோ ஒரு மாதத்தில் உங்களால் ஒரு சில மணி நேரம்தான் செலவிட முடிகிறது என்றே வைத்துக்கொள்வோம். கற்றுக்கொண்டவையும் அறிமுகம் ஆனவர்களும் நீங்கள் பின்னால் அதிக ஈடுபாடு கொள்ள முடிவு செய்தால் பயனுள்ளவையாக இருக்கும்.
கேள்வி: பயனர்கள் செய்யும் பதிவிறக்கத்துக்கும் நிரலாளர்கள் செய்யும் மூல நிரல் பதிவிறக்கத்துக்கும் இடையே வேறுபாடு என்ன? நிலையான வெளியீடு என்றால் என்ன?
பதில்: பெரும்பாலும் திறந்த மூல திட்டங்கள் பயனருக்குத்தக்க வெவ்வேறு வழிகளில் வெளியீடு செய்கின்றன. பொதுவாக, பங்களிக்க வேண்டும் என்றால், நீங்கள் சமீபத்திய மூலக் குறியீட்டின் நகலியை திட்டத்தின் பதிப்பு கட்டுப்பாடு அமைப்பிலிருந்து குறித்து வெளியெடுக்க வேண்டும். நீங்கள் திட்டத்தை பயன்படுத்த மட்டும் முயற்சிக்கும் பயனர் என்றால், உங்களுக்கு நிறுவி இயக்கத்தகுந்த செயலி தேவை.
பெரும்பாலான செயலிகளின் மூலக் குறியீடு கணினியில் நேரடியாக ஓடாது. அது கணினியில் ஓடக்கூடிய இருமக் குறியீடாக முதலில் தொகுக்கப்பட வேண்டும். பரவலாகப் பயன்படும் மொழிகளான ஜாவா, சி, மற்றும் சி++ இவ்வாறான மொழிகளே. எடுத்துக்காட்டாக அலுவலக செயலி லிபர்ஓபிஸ் பெரும்பாலும் சி++ இல் எழுதப்பட்டது. நீங்கள் இத்திட்டத்தை பயன்படுத்த மட்டும் முயற்சிக்கும் பயனர் என்றால் உங்கள் இயங்குதளத்தில் (எடுத்துக்காட்டாக, விண்டோஸ்-க்கு குறிப்பிட்டு உருவாக்கியது) ஓடக்கூடிய தொகுக்கப்பட்ட பதிப்பு உங்களுக்குத் தேவை. மாறாக, திட்டத்துக்கு பங்களிக்க வேண்டும் என்றால், முக்கிய நிரலாளர் செயல்படுவதுபோல் மூலக் குறியீட்டை அதன் பதிப்பு கட்டுப்பாடு அமைப்பு பயன்படுத்தி நீங்கள் குறித்து வெளியெடுக்க வேண்டும்.
நிலையான வெளியீடு என்பது மற்றொரு முக்கியமான கோட்பாடு. நிரலை உருவாக்கும்போது சிலர் செய்யும் மாற்றங்கள் தொகுப்பை உடைக்கலாம், பிறர் செய்த மாற்றங்களுக்கு முரணாகவோ அல்லது அரைகுறையாகவோ இருக்கலாம். ஆகவே எந்தக் கட்டத்திலும் மிக சமீபத்திய பதிப்பு சற்றும் பயன்படுத்த இயலாததாக இருக்கலாம். எனவே, பராமரிப்பவர்கள் அவ்வப்போது நிலையான வெளியீட்டை நோக்கி வேலை செய்வார்கள். அதைத் தயாரித்து சோதனை செய்தபின்னரே வெளியிடுவார்கள்.
எனவே நீங்கள் ஒரு பயனர் என்றால் உங்கள் இயங்குதளம் மற்றும் கணினிக்கு பொருத்தமாக தொகுக்கப்பட்ட நிலையான வெளியீடு தேவை. நீங்கள் பங்களிக்க விரும்பினால் உங்களுக்கு சமீபத்திய தொகுக்கப்படாத மூல நிரல் பதிப்பு தேவை.
கேள்வி: அனைத்து திறந்த மூல திட்டங்களும் புதுமுகங்களை வரவேற்கின்றனவா? ஒரு திட்ட சமூகத்தில் இணக்கமற்ற நபர்களே இருந்தால் எப்படித் தெரியவரும்?
பதில்: எல்லா திறந்த மூல திட்டங்களும் புதுமுகங்களை வரவேற்பதில்லை. யாவையும் அவ்வாறு இருக்க வேண்டும் என்பதும் இல்லை. சில திட்ட சமூகங்கள் சிறியதாகவும் அனுபவசாலிகளாக மட்டும் இருப்பது வசதி. சில பராமரிப்பாளர்களுக்கு புதுமுகங்களுக்கு கற்றுக்கொடுக்க ஆர்வமும் நேரமும் இருக்காது.
இதில் தவறு எதுவும் இல்லை. ஆனால் புதுமுகங்கள் ஆர்வத்துடன் ஈடுபட முயலும்போது அந்தத் திட்டத்துக்கு அக்கறை இல்லையென்றால் அது வருந்தத் தக்கதே. இது அனைவரையும் சலிப்படைய வைக்கும், மேலும் தேவையற்றது. ஏனெனில் அவர்களுடன் வேலை செய்ய ஆர்வமாக இருப்பவர்கள் நிறைய உள்ளனர்.
எனவே புதுமுகமாகிய நீங்கள் பங்களிக்க ஒரு நல்ல திட்டத்தை எப்படிக் கண்டுபிடிக்க முடியும்? கீழே சில நல்ல அறிகுறிகளைப் பார்க்கலாம்:
- பெரிய ஈடுபாடான சமூகங்களில் புதுமுகங்களுக்கு வழிகாட்டக்கூடிய உறுப்பினர்கள் இருக்க வாய்ப்பு அதிகம். மேலும் பங்களிப்புகளுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கக்கூடும்.
- நல்ல ஆவணங்களும் செய்முறைகளும் இருந்தால் திட்ட உறுப்பினர்கள் தங்கள் திட்டத்தை புதுமுகங்களுக்கு அறிமுகப்படுத்துவது பற்றி யோசித்திருக்கிறார்கள் என்பது தெரியவரும்.
- சில திட்டங்களில் நன்னடத்தைக் கோட்பாடுகளும், பன்முகத்தன்மை அறிக்கைகளும் உண்டு. இது ஒரு பாதுகாப்பான மற்றும் வரவேற்பு அளிக்கும் சமூகமாக முயற்சி செய்வதை நிரூபிக்கிறது.
- குனோம் மகளிர் வெளிக்களத் திட்டம் (GNOME Outreach Program for Women), கூகிள் கோடை விடுமுறையில் நிரல் எழுதுதல் (Google Summer of Code) ஆகிய திட்டங்கள் புதுமுகங்களுக்கு நல்ல சூழல் அமைக்க ஈடுபாடு கொண்டுள்ளனர்.
ஓபன்ஹாட்ச்-ல் நாங்கள் குறிப்பாக புதுமுகங்களுக்கு நல்ல திட்டங்கள் கண்டறிய முயற்சி செய்கிறோம். பரிந்துரைகளை கேட்க எங்களை தாராளமாக தொடர்பு கொள்ளலாம்.
இணையத் தொடர் அரட்டை (#openhatch on irc.freenode.net) தடத்தில் சேர்ந்து எங்களைக் கேளுங்கள். அல்லது மின்னஞ்சல் (hello@openhatch.org) அனுப்புங்கள். நீங்கள் கட்டற்ற மென்பொருள் சமூகத்தில் நுழைய உதவியாக சிஸ்டர்ஸ் (Systers) போன்ற குழுக்களிலும் சேரலாம்.
மூலக்கட்டுரை எழுத்தாளர் பற்றி: ஷானா கார்டன்-மக்கியோன் (Shauna Gordon-McKeon) – நான் ஒரு நிரலாளர், அமைப்பாளர், எழுத்தாளர் மற்றும் ஆசிரியை. நான் தற்போது ஓபன்ஹாட்ச்-ல் பகுதி நேர வேலையும் திறந்த அறிவியல் இணையத்தில் (Open Science Collaborative) தன்னார்வலராகவும் இருக்கிறேன். நான் பாஸ்டன் திறந்த அரசு (Open Government Boston) என்ற ஒரு குடிமை தொழில்நுட்ப / ஒளிவின்மை குழு அமைப்பாளராகவும் இருக்கிறேன்.
மூலம்: opensource.com தமிழாக்கம் மற்றும் தொகுப்பு: இரா. அசோகன்
பின்குறிப்பு: இந்திய லினக்ஸ் பயனர் குழு – சென்னை (ilugc) மின்னஞ்சல் குழுவில் சேர்ந்தும் உதவி பெறலாம். கேள்வி கேட்கும் முன் அதன் ஆவணக்காப்பகத்தில் உள்ள பழைய கேள்வி பதில்களை படிப்பது மிக முக்கியம். ஏனெனில் உங்கள் கேள்விக்கான பதில் முன்பே இருக்கலாம். மேலும் கேள்வி கேட்கும் வழிமுறைகளும் உங்களுக்குத் தெரியவரும்.
ஆங்கிலம்: ஆவணக்காப்பகம் படிக்க; மின்னஞ்சல் குழுவில் சேர.
தமிழ்: ஆவணக்காப்பகம் படிக்க; மின்னஞ்சல் குழுவில் சேர.