பேராலயமும் சந்தையும் 13. மேலாண்மையும் மேகினாட் கோடும்

1997 ஆம் ஆண்டின் முதலாவதான பேராலயமும் சந்தையும் ஆய்வுக்கட்டுரை முன்னர் உள்ள பார்வையுடன் முடிவடைந்தது. அதாவது இணையம் மூலம் தொடர்புகொள்ளும் நிரலாளர்/புரட்சியாளர்களின் மகிழ்ச்சியான குழுக்கள் வழக்கமான மூடிய மென்பொருளின் கட்டளைமுறை உலகத்தைப் போட்டியில் வெல்லும் மற்றும் மூழ்கடிக்கும்.

பல அவநம்பிக்கை இயல்பு உள்ளவர்கள் இதை ஏற்கவில்லை. மேலும் அவர்கள் எழுப்பும் கேள்விகள் நியாயமான முறையில் ஈடுபடத் தகுதியானவை. சந்தை வாதத்திற்கான பெரும்பாலான ஆட்சேபனைகள், அதன் ஆதரவாளர்கள் வழக்கமான நிர்வாகத்தின் உற்பத்தித்திறன்-பெருக்க விளைவைக் (productivity-multiplying effect) குறைத்து மதிப்பிட்டுள்ளனர் என்ற கூற்றுக்கு வந்தது.

பாரம்பரிய எண்ணம் கொண்ட மென்பொருள்-மேம்பாடு மேலாளர்கள், திறந்த மூல உலகில் திட்டக் குழுக்கள் தற்போக்காக உருவாவது, மாறுவது மற்றும் கலைந்து போவது இயல்புநிலையாக இருக்கிறது என்று இதை எதிர்க்கிறார்கள். ஆகவே திறந்த மூல சமூகத்தில் நிரலாளர் எண்களின் அனுகூலம் இருப்பதுபோல் தோன்றினாலும் இப்பிரச்சினை அதன் கணிசமான பாகத்தை இல்லாததாக்குகிறது. மென்பொருள் மேம்பாட்டில் உண்மையில் நெடுங்கால நீடித்த முயற்சி மற்றும் தயாரிப்புக்கான தொடர்ச்சியான முதலீட்டை எந்த அளவிற்கு எதிர்பார்க்கலாம் என்பதைத்தான் வாடிக்கையாளர்கள் கவனிப்பார்கள். லேசாகக் கொதித்துக் கொண்டிருக்கும் வடிசாறு சட்டியில் எவ்வளவு பேர் ஓர் எலும்பைப் போட்டுவிட்டுப் போனார்கள் என்பது ஒரு பொருட்டேயல்ல என்று சொல்கிறார்கள். 

இந்த வாதத்தில் ஏதோ நியாயம் இருப்பதாகத் தெரிகிறது. உண்மையில், மாயக் கொப்பரை (The Magic Cauldron) என்ற இந்த நூலின் மூன்றாம் பாகத்தில், மென்பொருள் தயாரிப்பின் பொருளாதாரத்திற்கு, எதிர்பார்க்கப்படும் எதிர்கால சேவை மதிப்புதான் முக்கியம் என்ற கருத்தை நான் உருவாக்கியுள்ளேன்.

குனு ஈமாக்ஸ் தொகுப்பி – நூற்றுக்கணக்கான பங்களிப்பாளர்கள் – 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஒருங்கிணைந்த கட்டுமானத் தொலைநோக்கு

குனு ஈமாக்ஸ் தொகுப்பி

ஆனால் இந்த வாதத்தில் ஒரு முக்கிய மறைமுகப் பிரச்சினையும் உள்ளது. திறந்த மூல மேம்பாடு அத்தகைய நீடித்த முயற்சியை வழங்க முடியாது என்பது அதன் மறைமுகமான அனுமானம். உண்மையில், வழக்கமான நிர்வாகம் இன்றியமையாததாகக் கருதும் வகையான ஊக்கக் கட்டமைப்புகள் (incentive structures) அல்லது நிறுவனக் கட்டுப்பாடுகள் (institutional controls) இல்லாமல் ஒரு ஒத்திசைவான திசையையும், பயனுள்ள பராமரிப்பாளர் சமூகத்தையும் நீண்ட காலத்திற்குப் பராமரித்த திறந்த மூல திட்டங்கள் உள்ளன. குனு ஈமாக்ஸ் (GNU Emacs) நிரல் தொகுப்பியின் வளர்ச்சி ஒரு தீவிரமான மற்றும் கற்றுக்கொள்ளக்கூடிய எடுத்துக்காட்டு. நூற்றுக்கணக்கான பங்களிப்பாளர்களின் முயற்சிகளை 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஓர் ஒருங்கிணைந்த கட்டுமானத் தொலைநோக்கில் (unified architectural vision) உள்வாங்கியது. அதிகம் பேர் விட்டுச்சென்ற போதிலும், ஒரே ஒரு நபர் (அதன் படைப்பாளர்) மட்டுமே அந்தக் காலம் முழுதும் தொடர்ந்து செயலில் இருந்தார். எந்த மூடிய மூலத் தொகுப்பியும் இந்த நீண்ட ஆயுட்கால சாதனையை நெருங்கவில்லை.

பேராலயமா சந்தையா என்ற பயன்முறை தொடர்பான மற்ற வாதங்கள் தவிர வழக்கமான முறையில் நிர்வகிக்கப்படும் மென்பொருள் மேம்பாட்டின் நன்மைகளைக் கேள்விக்குட்படுத்த இது ஒரு தனி காரணம். குனு ஈமாக்ஸ் (GNU Emacs) 15 ஆண்டுகளுக்கும் மேலாக நிலையான கட்டுமானத் தொலைநோக்கை வெளிப்படுத்துகிறது மற்றும் லினக்ஸ் போன்ற இயங்குதளம் 8 ஆண்டுகளுக்கும் மேலாக வேகமாக மாறிவரும் வன்பொருட்களுக்கு ஆதரவு அளித்து இயங்குதள தொழில்நுட்பத்தை வெளிப்படுத்துகிறது. 5 ஆண்டுகளுக்கும் மேலாக பல நன்கு கட்டமைக்கப்பட்ட திறந்த மூல திட்டங்கள் இருக்கின்றன. இவை சாத்தியம் என்றால் வழக்கமாக நிர்வகிக்கப்படும் வளர்ச்சியின் மிகப்பெரிய மேற்செலவு உண்மையில் எதைத்தான் வாங்குகிறது என்று கேட்பதற்கு நமக்கு உரிமை உள்ளது.

காலக்கெடு, செலவுத் திட்டம், அம்சப் பட்டியல் ஆகிய மூன்று இலக்குகளில் ஒன்றைக் கூட பூர்த்தி செய்வது `நிர்வகிக்கப்பட்ட’ திட்டத்தில் அரிது

அது எதுவாக இருந்தாலும், காலக்கெடு, செலவுத் திட்டம், அம்சப் பட்டியல் ஆகிய மூன்று இலக்குகளை நம்பத்தகுந்த முறையில் செயல்படுத்துவது இருக்கட்டும், ஆனால் இவற்றில் ஒன்றைக் கூட பூர்த்தி செய்வது ஓர் அரிய `நிர்வகிக்கப்பட்ட’ திட்டமாகும். திட்டத்தை செயல்படுத்தும் காலத்தின்போது தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார சூழலில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப இது செயல்படும் திறன் கொண்டதாகத் தெரியவில்லை. திறந்த மூல சமூகம் அந்த மதிப்பெண்ணில் மிகவும் பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது (எடுத்துக்காட்டாக, இணையத்தின் 30 ஆண்டுகால வரலாற்றை தனியுரிம பிணையத் தொழில்நுட்பங்களின் குறுகிய ஆயுளுடன் ஒப்பிடுவதன் மூலம் ஒருவர் உடனடியாகச் சரிபார்க்க முடியும். மைக்ரோசாஃப்ட் விண்டோஸில் 16-பிட் இலிருந்து 32-பிட் மாற்றத்துக்கு ஆன செலவையும், அதே காலகட்டத்தில் இன்டெல் மட்டுமல்லாமல் 64-பிட் ஆல்பா உட்பட பன்னிரண்டுக்கும் மேற்பட்ட வன்பொருட்களுக்கு லினக்ஸ் பெரிதும் சிரமமின்றி மேல்நோக்கி இடம்பெயர்ந்ததையும் (upward migration) ஒப்பிட்டுப்பார்க்கலாம்).

யார் மீதாவது வழக்குத் தொடர்வதன் மூலம் ஆறுதல் அடைவது உங்கள் குறிக்கோள் அல்ல – உங்களுக்கு வேலை செய்யும் மென்பொருள் வேண்டும்

பாரம்பரிய முறையில் தாங்கள் வாங்குவதாகப் பலர் நினைக்கும் ஒரு சங்கதி, யாரோ ஒருவர் சட்டப்பூர்வமாக பொறுப்பேற்க வேண்டும் மற்றும் திட்டத்தில் தவறு நடந்தால் இழப்பீடு பெறலாம் என்பது. ஆனால் இது ஒரு மாயை. பெரும்பாலான மென்பொருள் உரிமங்கள், செயல்திறன் ஒருபுறம் இருக்கட்டும்,  வணிகத்திறனுக்கான உத்தரவாதத்தைக் (warranty of merchantability) கூட மறுப்பதற்காக எழுதப்பட்டவை. மேலும் மென்பொருள் சரியாகச் செயல்படவில்லை என்று வெற்றிகரமாக இழப்பீடு பெறுதல் மிக மிக அரிது. அது பொதுவானதாகவே இருந்தாலும், யார் மீதாவது வழக்குத் தொடர்வதன் மூலம் ஆறுதல் அடைவது உங்கள் குறிக்கோள் அல்ல. உங்கள் விருப்பம் ஒரு வழக்கில் மாட்டிக்கொள்வது அல்ல. உங்களுக்கு வேலை செய்யும் மென்பொருள் வேண்டும்.

அப்படியென்றால் அந்த நிர்வாகத்திற்காக மேற்செலவு செய்வதன் மூலம் எதைத்தான் வாங்குகிறோம்?

அதைப் புரிந்துகொள்வதற்கு, மென்பொருள் மேம்பாட்டு மேலாளர்கள் என்ன நம்புகிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எனக்குத் தெரிந்த, இந்த மென்பொருள் மேம்பாட்டு மேலாளர் வேலையில் மிகவும் நன்றாக செயல்படுவதாகத் தெரியும் ஒரு பெண்மணி மென்பொருள் திட்ட மேலாண்மைக்கு ஐந்து செயல்பாடுகள் உள்ளன என்று சொல்கிறார்கள்:

  • இலக்குகளை வரையறுத்து, அனைவரையும் ஒரே திசையில் முயற்சி செய்ய வைத்தல்.
  • திட்டத்தைக் கண்காணித்து முக்கியமான விவரங்கள் விட்டுப்போகாமல் பார்த்துக் கொள்ளுதல்.
  • சலிப்பூட்டும் ஆனால் அவசியமான கசப்பான வேலைகளைச் செய்ய ஊழியர்களை ஊக்குவித்தல்.
  • சிறந்த உற்பத்தித்திறனுக்காக ஊழியர்களைப் பயன்படுத்த ஏற்பாடு செய்தல்.
  • திட்டத்தை நிலைநிறுத்தத் தேவையான வளங்களைத் திரட்டுதல்.

இவை அனைத்தும் வெளிப்படையாகத் தகுதியான இலக்குகள்தான். ஆனால் திறந்த மூல மாதிரியில் மற்றும் அதைச் சுற்றியுள்ள சமூக சூழலில், இவை விசித்திரமான பொருத்தமற்றதாகத் தோன்றலாம். இவற்றைப் பின்னிருந்து முன் வரிசையில் பார்ப்போம்.

வளங்களைத் திரட்டுதல் (resource marshalling) பெரும்பாலும் அடிப்படையில் தற்காப்பு என்று என் நண்பர் சொல்கிறார். உங்கள் ஊழியர்கள், இயந்திரங்கள் மற்றும் அலுவலக இடம் உங்களிடம் இருந்தால், அதே வளங்களுக்காகப் போட்டியிடும் சக மேலாளர்களிடமிருந்தும், இருக்கும் அளவான வளங்களை மிகவும் திறமையாகப் பயன்படுத்த ஒதுக்க முயற்சிக்கும் உயர் அதிகாரிகளிடமிருந்தும் நீங்கள் அவற்றைப் பாதுகாக்க வேண்டும்.

ஆனால் திறந்த மூல நிரலாளர்கள் தன்னார்வத் தொண்டர்கள். தாங்கள் பணிபுரியும் திட்டங்களுக்கு பங்களிக்கும் ஆர்வம் மற்றும் திறன் ஆகிய இரண்டும் அவர்களே தேர்ந்தெடுத்தது (அவர்கள் திறந்த மூலத்தில் வேலை செய்யச் சம்பளம் பெறும்போது கூட இது பொதுவாக உண்மையாக இருக்கும்.) தன்னார்வ நெறிமுறைகள் தானாக வளங்களைத் திரட்டுதலின் `தாக்குதல்’ பக்கத்தைக் கவனித்துக் கொள்கின்றன. அவர்கள் தங்கள் சொந்த வளங்களைத் திட்டத்துக்குக் கொண்டு வருகிறார்கள். ஒரு மேலாளர் வழக்கமான பொருளில் ‘தற்காப்பு விளையாடுதல் (play defense)’ சிறிதளவு கூடத் தேவையில்லை.

எப்படியிருந்தாலும், மலிவான தனிநபர் கணினிகள் மற்றும் வேகமான இணைய இணைப்புகளின் உலகில், திறமையான கவனம் மட்டுமே உண்மையில் வரம்புக்குட்படுத்தும் ஒரே வளம் என்பதை நாம் தொடர்ந்து காண்கிறோம். கணினிகள், இணைய இணைப்புகள் அல்லது அலுவலக இடம் தேவைக்காக ஒருபோதும் திறந்த மூலத் திட்டங்கள் தடுமாறுவதில்லை. நிரலாளர்கள் ஆர்வத்தை இழக்கும்போது மட்டுமே அவை நின்று போகின்றன.

திறந்த மூலம் வெற்றிகரமாக இருக்க ஒரு காரணம் அதன் கலாச்சாரம் மிகவும் திறமையான 5% நிரலாளர்களை மட்டுமே ஏற்றுக்கொள்வது

அப்படி இருக்கையில், திறந்த மூலக் கொந்தர்கள் சுய-தேர்வு மூலம் அதிகபட்ச உற்பத்தித்திறனுக்காகத் தங்களை ஒழுங்கமைத்துக் கொள்வது இரட்டிப்பாக முக்கியமானது. மேலும் இதன் சமூக சூழல் தயவு தாட்சணியம் பார்க்காமல் திறமையைத் தேர்ந்தெடுக்கிறது. திறந்த மூலம் வெற்றிகரமாக இருப்பதற்கு ஒரு காரணம் அதன் கலாச்சாரம் மிகவும் திறமையான 5% நிரலாளர்களை மட்டுமே ஏற்றுக்கொள்வது என்று திறந்த மூல உலகம் மற்றும் பெரிய மூடிய திட்டங்கள் இரண்டையும் நன்கு அறிந்த எனது நண்பர் நம்புகிறார். அவர் தனது பெரும்பாலான நேரத்தை மற்ற 95% நிரலாளர்களைப் பயன்படுத்த ஏற்பாடு செய்வதில் செலவழிக்கிறார். மேலும் மிகவும் திறமையான நிரலாளர்கள் மற்றும் தகுதிவாய்ந்தவர்களுக்கிடையில் உற்பத்தித்திறனில் நன்கு அறியப்பட்ட நூறு மடங்கு வேறுபாட்டை நேரடியாகக் கண்டிருக்கிறார்.

அந்த வேறுபாட்டின் அளவு எப்போதுமே ஒரு சங்கடமான கேள்வியை எழுப்புகிறது. தனிப்பட்ட திட்டங்களும் ஒட்டுமொத்தத் துறையும் திறமையின் அடிமட்டத்தில் 50% க்கும் அதிகமானவர்கள் இல்லாமல் இருந்தால் சிறப்பாக இருக்குமா? வழக்கமான மென்பொருள் நிர்வாகத்தின் ஒரே செயல்பாடு நிகர இழப்பிலிருந்து குறைந்த வெற்றிக்கு மாற்றுவதுதான் என்றால் இந்த வேலைக்கு மதிப்பே கிடையாது என்பதை சிந்தனைமிக்க மேலாளர்கள் நீண்ட காலமாகப் புரிந்துகொண்டுள்ளனர்.

வேறு ஏதாவது செய்ய விரும்புபவர்கள் நிறைந்த பல கட்டடங்களை நிர்வகிப்பதை விட, இணையத்தில் இருந்து சுயமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தன்னார்வலர்களை ஆட்சேர்ப்பு செய்வது மலிவானது மற்றும் பயனுள்ளது என்பதற்கான கடினமான ஆதாரங்களை வழங்குவதன் மூலம் திறந்த மூல சமூகத்தின் வெற்றி இந்தக் கேள்வியை கணிசமாகக் கூர்மையாக்குகிறது.

இது உந்துதல் பற்றிய கேள்விக்கு நம்மை நேர்த்தியாகக் கொண்டுவருகிறது. எனது நண்பரின் கருத்தைக் கூறுவதற்குச் சமமான மற்றும் அடிக்கடி கேட்கப்படும் வழி என்னவென்றால், பாரம்பரிய வளர்ச்சி மேலாண்மை என்பது மோசமான ஊக்கம் கொண்ட நிரலாளர்களுக்குத் தேவையான ஈடுசெய்தல் ஆகும். இல்லையேல் அவர்கள் நல்லபடி வேலையைச் செய்ய மாட்டார்கள்.

இந்த பதில் பொதுவாக ‘கவர்ச்சியான’ அல்லது தொழில்நுட்ப ரீதியாக இனிமையான வேலையைச் செய்ய மட்டுமே திறந்த மூல சமூகத்தை நம்பியிருக்க முடியும் என்ற கூற்றுடன் பயணிக்கிறது. பணத்தால் தூண்டப்பட்ட குறுவறை (cubicle) ஏவலர்களை மேலாளர்கள் விரட்டி வேலைவாங்கினால் தவிர, மற்ற வேலைகள் எதுவும் செய்யாமல் விடப்படும் (அல்லது மோசமாக மட்டுமே செய்யப்படும்). சிந்தனைக் கோளத்தில் நம் பகுதியைக் குறித்தல் (Homesteading the Noosphere) என்ற இந்நூலின் இரண்டாம் பாகத்தில் இந்தக் கூற்றில் சந்தேகம் இருப்பதற்கான உளவியல் மற்றும் சமூகக் காரணங்களை நான் குறிப்பிடுகிறேன். இருப்பினும், தற்போதைய நோக்கங்களுக்காக, அதை உண்மையாக ஏற்றுக்கொள்வதன் தாக்கங்களைச் சுட்டிக்காட்டுவது மிகவும் சுவாரசியமானது என்று நினைக்கிறேன்.

வழக்கமான, மூடிய-மூல, பெரிய செலவில் நிர்வகிக்கப்படும் மென்பொருள் மேம்பாட்டின் பாணியானது சலிப்பூட்டும் வேலைகள் என்ற ஒருவித மேகினாட் கோட்டினால் (Maginot Line) மட்டுமே பாதுகாக்கப்படுகிறதா? அப்படியென்றால் ஒவ்வொரு தனிப்பட்ட பயன்பாட்டுப் பகுதியிலும் யாரும் இந்தச் சிக்கல்கள் மிகவும் சுவாரசியமானவை என்று கண்டுபிடிக்காத வரை மற்றும் வேறு யாரும் அவற்றைச் சுற்றி எந்த வழியையும் கண்டுபிடிக்காத வரைதான் அது சாத்தியமானதாக இருக்கும். ஒரு ‘சலிப்பூட்டும்’ மென்பொருளுக்கு திறந்த மூலப் போட்டி இருக்கும் தருணத்தில், அந்த சிக்கலைத் தீர்ப்பதற்காகவே அதைத் தேர்ந்தெடுத்த ஒருவரால் அது இறுதியாகக் கையாளப்பட்டது என்பதை வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்ளப் போகிறார்கள். இது, மென்பொருளில், மற்ற வகையான ஆக்கப்பூர்வமான வேலைகளைப் போல, பணத்தை மட்டுமே விட மிகவும் பயனுள்ள உந்துதலாக இருக்கிறது.

ஊக்குவிப்பதற்காக மட்டுமே ஒரு வழக்கமான மேலாண்மை கட்டமைப்பைக் கொண்டிருப்பது, ஒருவேளை நல்ல உத்தி, ஆனால் மோசமான வியூகம். ஒரு குறுகிய கால வெற்றி, ஆனால் நீண்ட காலத்தில் ஓர் உறுதியான இழப்பு.

இதுவரை, வழக்கமான மேம்பாடு மேலாண்மை என்பது திறந்த மூலத்திற்கு எதிராக இரண்டு பகுதிகளில் (வளங்களைத் திரட்டுதல், அமைத்தல்) ஒரு தோல்வியடையும் பந்தயம் போலவும், மூன்றில் ஒரு பகுதியில் (உந்துதல்) கடன் வாங்கிய நேரத்தைப் போலவும் இருக்கிறது. மேலும் மோசமான தொல்லைக்குள்ளான வழக்கமான மேலாளர் கண்காணிப்பு பிரச்சினையில் இருந்து எந்த உதவியும் பெறப் போவதில்லை. திறந்த மூல சமூகத்தின் வலுவான வாதம் என்னவென்றால், பரவலாக்கப்பட்ட சக மதிப்பாய்வு விவரங்கள் நழுவாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான அனைத்து வழக்கமான முறைகளையும் வெல்கிறது.

வழக்கமான மென்பொருள் திட்ட நிர்வாகத்தின் மேல்செலவுக்கான நியாயமாக இலக்குகளை வரையறுப்பதை நாம் ஒதுக்க முடியுமா? ஒருவேளை; ஆனால் அவ்வாறு செய்ய, திறந்த மூல உலகில் ஒத்த பங்கை நிரப்பும் திட்டத் தலைவர்கள் மற்றும் மரபுப் பெரியவர்களைக் காட்டிலும் நிர்வாகக் குழுக்கள் மற்றும் நிறுமச் செயல் திட்டங்கள் தகுதியான மற்றும் பரவலாகப் பகிரப்பட்ட இலக்குகளை வரையறுப்பதில் மிகவும் வெற்றிகரமானவை என்று நம்புவதற்கு நமக்கு நல்ல காரணம் தேவை.

இது முதல் நோக்கில் மிகவும் கடினமான வழக்கு. மேலும் இதைக் கடினமாக்குவது தராசின் திறந்த மூலப் பக்கம் அல்ல (இமாக்ஸின் நீண்ட ஆயுட்காலம் அல்லது “உலக ஆதிக்கம்” என்ற பேச்சு மூலம் நிரலாளர்களின் கூட்டத்தைத் திரட்டும் லினஸ் டோர்வால்ட்ஸின் திறன்). மாறாக, இது மென்பொருள் திட்டங்களின் இலக்குகளை வரையறுப்பதற்கான வழக்கமான வழிமுறைகளின் நிரூபிக்கப்பட்ட பரிதாபம்.

வழக்கமான மென்பொருள் திட்டங்களில் 60% முதல் 75% வரை முடிக்கப்படுவதில்லை அல்லது அவற்றின் பயனர்களால் நிராகரிக்கப்படுகின்றன

மென்பொருள் பொறியியலின் மிகவும் பிரபலமான பொதுப்பேச்சு கோட்பாடுகளில் ஒன்று, வழக்கமான மென்பொருள் திட்டங்களில் 60% முதல் 75% வரை முடிக்கப்படுவதில்லை அல்லது அவற்றின் பயனர்களால் நிராகரிக்கப்படுகின்றன. அந்த வரம்பு எங்காவது உண்மையாக இருந்தால் (அதை மறுக்கும் எந்தவொரு அனுபவத்தின் மேலாளரையும் நான் சந்தித்ததில்லை) பின்னர் பெரும்பாலான திட்டங்கள் (அ) யதார்த்தமாக அடைய முடியாத அல்லது (ஆ) தவறான இலக்குகளை இலக்காகக் கொண்டுள்ளன.

மற்ற பிரச்சினைகளை விட இதுவே, இன்றைய மென்பொருள் பொறியியல் உலகில் “மேலாண்மைக் குழு” என்ற வாக்கியம் கேட்பவரின் முதுகுத் தண்டுவடத்தில் குளிர்ச்சியை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது, கேட்பவர் மேலாளராக இருந்தாலும் கூட (அல்லது குறிப்பாக). நிரலாளர்கள் மட்டுமே இந்த முறையைப் பற்றி குறை கூறிய நாட்கள் போய்விட்டன. தில்பர்ட் (Dilbert) கார்ட்டூன்கள் இப்போது நிர்வாகிகளின் மேசைகளின்மேல் தொங்குகின்றன.

அப்படியானால், பாரம்பரிய மென்பொருள் மேம்பாட்டு மேலாளருக்கு எங்கள் பதில் எளிமையானது. திறந்த மூல சமூகம் வழக்கமான நிர்வாகத்தின் மதிப்பை உண்மையில் குறைத்து மதிப்பிட்டிருந்தால், உங்களில் பலர் ஏன் உங்கள் சொந்த செயல்முறைக்கு அவமதிப்பைக் காட்டுகிறீர்கள்?

மீண்டும் ஒருமுறை திறந்த மூல சமூகத்தின் எடுத்துக்காட்டு இந்தக் கேள்வியைக் கணிசமாகக் கூர்மைப்படுத்துகிறது. ஏனெனில் நாங்கள் செய்வதை விளையாட்டாகச் செய்கிறோம். எங்களின் ஆக்கப்பூர்வமான வேலை தொழில்நுட்பம், சந்தைப்-பங்கு மற்றும் மனப்-பங்கு வெற்றிகளை அசுர வேகத்தில் குவித்து வருகிறது. எங்களால் சிறந்த மென்பொருளை உருவாக்க முடியும் என்பதை மட்டுமல்ல, மகிழ்ச்சி ஒரு சொத்து என்பதையும் சேர்த்து நிரூபித்து வருகிறோம்.

இந்தக் கட்டுரையின் முதல் பதிப்பிற்கு இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு, நான் முடிப்பதற்குமுன் வைக்கக்கூடிய மிகத் தீவிரமான சிந்தனை, திறந்த மூலம் மென்பொருள் உலகில் ஆதிக்கம் செலுத்தும் என்பது அல்ல. எல்லாவற்றிற்கும் மேலாக, இக்காலத்தில் நிதானமான பெரு நிறுவன மேலதிகாரிகள் பலருக்கு இது நம்பத்தகுந்ததாகத் தெரிகிறது.

திறந்த மூல வெற்றியின் மிக முக்கியமான விளைவு – விளையாடுதல்தான் ஆக்கப்பூர்வமான வேலைக்கு மிகவும் திறமையான முறை

மாறாக, மென்பொருளைப் பற்றிய ஒரு பரந்த பாடம் என்ன என்பதை நான் பரிந்துரைக்க விரும்புகிறேன் (மற்றும் அநேகமாக ஒவ்வொரு வகையான ஆக்கப்பூர்வமான அல்லது தொழில்முறை வேலைகளையும் பற்றி). மனிதர்கள் பொதுவாக உகந்த-சவால் மண்டலத்தில் (optimal-challenge zone) ஒரு பணி விழும்போது அதில் மகிழ்ச்சி அடைகிறார்கள். மிகவும் எளிதானது என்றால் சலிப்பை ஏற்படுத்தும். செய்து முடிக்க மிகவும் கடினமாகவும் இருக்கக் கூடாது. சவாலற்ற வேலையோ அல்லது தவறாக வடிவமைக்கப்பட்ட இலக்குகளோ அல்லது அழுத்தமான செயல்முறை பாரங்களோ இல்லாவிட்டால் அவர் ஒரு மகிழ்ச்சியான நிரலாளர். வேலை செய்யும்போது மகிழ்வூட்டும் உணர்வு நல்ல செயல்திறனை முன்னறிவிக்கிறது.

பயம் மற்றும் வெறுப்புடன் உங்களின் சொந்த வேலைச் செயல்முறையைத் தொடர்புபடுத்துவது (தில்பர்ட் கார்ட்டூன்களைத் தொங்கவிடுவதன் மூலம் பரிந்துரைக்கப்படும் முரண்பாடான வழியில் கூட) செயல்முறை தோல்வியடைந்ததற்கான அறிகுறியாகவே கருதப்பட வேண்டும். மகிழ்ச்சி, நகைச்சுவை மற்றும் விளையாட்டுத்தனம் ஆகியவை உண்மையில் சொத்துக்கள். மேலே உள்ள “மகிழ்ச்சியான கூட்டங்கள் (happy hordes)” பற்றி நான் எழுதுவது எதுகை மோனைக்காக அல்ல. மேலும் லினக்ஸ் சின்னம் ஒரு அரவணைக்கத் தூண்டும் குழந்தைமுகப் பென்குயின் (penguin) என்பது வெறும் நகைச்சுவையல்ல.

திறந்த மூல வெற்றியின் மிக முக்கியமான விளைவுகளில் ஒன்று, ஆக்கப்பூர்வமான வேலைக்கு பொருளாதார ரீதியாக மிகவும் திறமையான முறை விளையாடுதல்தான் என்பதை நமக்குக் கற்பிப்பதேயாகும்.

மூலநூல்: The Cathedral and the Bazaar by Eric S. Raymond – version 3.0

தமிழாக்கம்: இரா. அசோகன் ashokramach@gmail.com

நன்றி

  1. GNU Emacs: The one true text editor

இத்தொடரில் அடுத்த கட்டுரை: முடிவுரை: சந்தை பாணியை நெட்ஸ்கேப் தழுவுகிறது

நெட்ஸ்கேப் (Netscape) நிறுவனம் அதன் கம்யூனிகேட்டர் (Communicator) உலாவியைத் திறந்த மூலமாக வெளியிடும் திட்டத்தை அறிவித்தது. வணிக உலகில் சந்தை மாதிரியின் பெரிய அளவிலான, நிஜ உலக சோதனையை நெட்ஸ்கேப் நமக்கு வழங்க உள்ளது. மைக்ரோசாப்ட் உலாவி சந்தையில் ஏகபோக நிலையை அடைவதை மோசில்லா (Mozilla) தடுத்தது. “திறந்த மூலம் ஒரு மந்திரப் பொடி அல்ல”.

%d bloggers like this: