சில்லுவின் கதை 7. ஒரு நாட்டின் தரநிலையையே உயர்த்திய தனிநபர்

சில்லுவின் கதை – பேராசிரியர் ராஜேஷ் ஜெலே – ஐஐடி பம்பாய் (Chip Story – Prof. Rajesh Zele – IIT Bombay)

எந்தத் தயாரிப்பு தேவை என்று நுகர்வோரால் சொல்ல இயலாது, ஏனெனில் எதைத் தயாரிக்க முடியும் என்று அவர்களுக்குத் தெரியாது

0:52 புதிய தயாரிப்புகளை உருவாக்கி சந்தையில் வெளியிடுதல் பற்றி சோனி  (Sony) நிறுவனத்தின் தலைவர் அகியோ மோரிட்டா (Akio Morita), “எந்த வகையான தயாரிப்புகள் வேண்டும் என்று பொதுமக்களிடம் கேட்பதற்குப் பதிலாக புதிய தயாரிப்புகளுடன் அவர்களை வழிநடத்துவதே எங்கள் திட்டம். என்ன சாத்தியம் என்பது பொதுமக்களுக்குத் தெரியாது, ஆனால் எங்களுக்குத் தெரியும்” என்று கூறுவார். ஜப்பானியத் தயாரிப்புகள், குறிப்பாக சோனி, உயர்ந்த தரம் வாய்ந்தவை மேலும் அதிக விலைக்கும் விற்கப்பட்டன. உங்களிடம் ஒரு சோனி தொலைக்காட்சி இருந்தால் நீங்கள் பணக்காரர் என்று கருதப்பட்டீர்கள்.

1:25 ஜப்பான் ஆரம்பத்தில் அமெரிக்காவிலிருந்து சில்லுகளை வாங்கிக்கொண்டு டிரான்சிஸ்டர் வானொலிகள், கணிப்பான்கள் போன்ற நுகர்வோர் பொருட்களைத் தயாரித்ததை முன்பே பார்த்தோம். பின்னர் ஜப்பான் அமெரிக்காவின் உரிமத்தின் கீழ் சில்லுகளைத் தாங்களே தயாரிக்கத் தொடங்கியது.

மிகவும் போட்டித்தன்மை கொண்ட ஒரு போராளி

1:34 மைக்ரான் நிறுவனம் ஜோ, வார்டு பார்கின்சன் (Joe and Ward Parkinson) ஆகியோரால் உருளைக்கிழங்கு விவசாய மாநிலமான ஐடாஹோவில் (Idaho) நிறுவப்பட்டது. ஆரம்பத்தில் அவர்கள் ஒப்பந்த அடிப்படையில் மின்னணுவியல் வடிவமைப்பு செய்து வந்தனர். அவர்களின் முதல் தயாரிப்பு 64K DRAM சில்லு. கெட்ட வாய்ப்பாக ஜப்பானிய நிறுவனமான ஃபுஜிட்சு (Fujitsu) சந்தையில் நுழைந்து மிகவும் நம்பகமான தயாரிப்புகளைக் குறைந்த விலையில் வழங்கியது. மைக்ரான் சந்தையை இழந்து அனேகமாக மூடும் தருவாய்க்கு வந்துவிட்டது. ஜோவும் வார்டும், உருளைக்கிழங்கு விவசாயியான ஜாக் சிம்ப்ளாட்டை (Jack Simplot) அணுகினர். ஜாக்கிற்கு தொழில்நுட்பப் பின்னணி இல்லை, ஆனால் அவர் ஒரு சாதுர்யமான தொழிலதிபர். உருளைக்கிழங்கு போலவே நினைவகமும் (memory) ஒரு பரவலாகப் பயன்படுத்தப்படும் பொருளாக ஆகும் என்று அவர் நினைத்தார். மேலும், இந்த நிறுவனத்தின் ஒரு பகுதியை மலிவு விலையில் வாங்க ஒரு வாய்ப்பையும் அவர் கண்டார். எனவே, அவர் ஒரு மில்லியன் டாலர்களுக்கு மைக்ரானின் பங்குகளை வாங்கினார். அவர் மிகவும் போட்டித்தன்மை கொண்ட ஒரு போராளி. ஜப்பானியர்களை அவர்களின் சொந்த விளையாட்டிலேயே வெல்வதற்கு எது வேண்டுமானாலும் செய்வோம் என்று அவர் கூறினார்.

5:20 மைக்ரான் நிறுவனம் தீவிரமான செலவுக் குறைப்பில் இறங்கியது. உதாரணமாக, அவர்கள் கூறின் (die) பரப்பளவைக் குறைத்தனர். இதன் மூலம் இருக்கும் வில்லையின் பரப்பளவுக்குள் அதிகக் கூறுகளை உற்பத்தி செய்ய முடியும். அவர்கள் செயல்முறைப் படிகளை எளிதாக்கினர். மேலும் தங்கள் செயல்பாடுகளை மிகவும் திறமையானதாக மாற்றினர். இந்த வழியில் அவர்கள் தங்கள் செலவைக் குறைத்து ஜப்பானியர்களுடன் போட்டியிட முடிந்தது. ஜப்பானியப் போட்டியை நேரடியாக எதிர்கொள்வோம் என்று உறுதியுடன் கூறி வெற்றி பெற்ற ஒரு அமெரிக்க நிறுவனத்தின் கதை இது. ஆரம்பத்தில் நிதியை வழங்கியது மட்டுமல்ல, குறைக்கடத்தி சந்தையில் அதன் போட்டித்தன்மைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவதிலும் ஜாக் சிம்ப்ளாட்டின் பங்கு முக்கியமானது.

எக்கணமும் ஆபத்து வரக்கூடும் என்று எச்சரிக்கையாக இருப்பவர்கள் மட்டுமே தப்பிப் பிழைக்க முடியும்

8:10 இன்டெல் நிறுவனத்தின் தலைவரான ஆண்டி குரோவ் (Andy Grove), “எக்கணமும் ஆபத்து வரக்கூடும் என்று எச்சரிக்கையாக இருப்பவர்கள் மட்டுமே தப்பிப் பிழைக்க முடியும் (Only the Paranoid Survive)” என்ற புத்தகத்தை எழுதினார். இது இன்டெலை நடத்துவதிலும் வளர்ப்பதிலும் அவரது அனுபவங்களின் கதையைச் சொல்கிறது. இது மிகவும் ஆர்வமிக்க வாசிப்பைத் தருகிறது. நான் இதை வலுவாகப் பரிந்துரைக்கிறேன். ஆரம்பத்தில் DRAM சில்லுகளைத் தயாரிக்கத் தொடங்கிய நிறுவனம் இன்டெல். பின்னர் மைக்ரானும் DRAM சில்லுகளைத் தயாரிக்கத் தொடங்கியது. இருப்பினும், நாம் முன்பு பார்த்தது போல, ஜப்பானிய உற்பத்தியாளர்கள் DRAM தயாரிக்கத் தொடங்கி இன்டெல் மற்றும் மைக்ரான் ஆகிய இரண்டிலிருந்தும் பெரும்பாலான சந்தைப் பங்கைப் பிடித்தனர்.

ஒரு தொழிற்சாலையில் வெற்றி என்றால் மற்ற தொழிற்சாலைகளும் அதே செயல்முறையையே நகலெடுத்தல்

9:40 1980 ஆம் ஆண்டில், IBM நிறுவனம் தனிநபர் கணினியை (Personal Computer – PC) முதன்முதலாக அறிமுகப்படுத்தியது. இதன் இயங்குதள மென்பொருள் (DOS) மைக்ரோசாப்டின் பில் கேட்சால் (Bill Gates) வழங்கப்பட்டது. நுண்செயலிச் சில்லுவை இன்டெல் வழங்கியது. உலகளவில் PC விற்பனை அதிகரித்தபோது, DRAM சில்லுகளைத் தயாரிப்பதை நிறுத்திவிட்டு, PCகளுக்கான நுண்செயலிகளில் மட்டும் கவனம் செலுத்த இன்டெல் முடிவு செய்தது. இன்டெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி குரோவ் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி கிரெய்க் பாரெட் (Craig Barrett) ஆகியோர் உற்பத்தியை மிகவும் திறமையானதாக மாற்றுவதில் இடைவிடாமல் கவனம் செலுத்தினர். ஒரு குறிப்பிட்ட செயல்முறை ஒரு தொழிற்சாலையில் விரும்பிய முடிவுகளைத் தரும் என்று நிரூபிக்கப்பட்டவுடன், மற்ற தொழிற்சாலைகளும் அதே செயல்முறையை “அச்சு அசலாக நகலெடுக்க (Copy Exactly)” வலியுறுத்தினர். உற்பத்தி செய்யப்படும் மொத்த சில்லுகளில், நல்ல தரமான சில்லுகளின் சதவீதத்தை விளைச்சல் (yield) என்கிறோம். இந்த வழியில், அவர்கள் விளைச்சலை அதிகப்படுத்தினர்.

DRAM தயாரிப்பதை நிறுத்திவிட்டு நுண்செயலிகளில் மட்டும் கவனம் செலுத்த இன்டெல் முடிவு

14:15 காம்பேக் (Compaq) நிறுவனம் IBM PC-யின் நகல்களைத் தயாரித்து, விலைகளைக் குறைப்பதன் மூலம் சந்தையில் பேரளவு விற்பனை செய்யும் திட்டத்தை வகுத்தது. இதனால் நுண்செயலிகளுக்கான தேவை அதிகரித்தது, அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டதால் அவற்றின் விலையும் குறைந்தது. இன்டெல் PC நுண்செயலிகளில் ஏகபோகமாக மாறியது. DRAM சிப்களைத் தயாரிப்பதை நிறுத்திவிட்டு, PCகளுக்கான நுண்செயலிகளில் மட்டும் கவனம் செலுத்த இன்டெல் எடுத்த மேற்கண்ட முடிவை ஆண்டி குரோவ் “மூலோபாயத் திருப்புமுனை (Strategic Inflection Point)” என்று அழைக்கிறார். இது ஒரு நிறுவனத்தின் வாழ்க்கைச் சுழற்சியில் ஒரு முக்கியமான கட்டத்தை விவரிக்கிறது. சந்தையில் அல்லது போட்டியாளர்களால் ஏற்படும் பெரிய மாற்றங்கள் வணிக உத்தியில் ஒரு அடிப்படை மாற்றத்தை இன்றியமையாததாக்குகின்றன.

நாம் புனைவு ஆலைகளைத் (fab) தொடங்குவதால் அவர்களின் அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்வோம்

16:41 இந்த நேரத்தில் தென் கொரியாவில் என்ன நடந்தது என்பதை அடுத்து நாம் பார்ப்போம். இம்மாதிரிப் பல்வேறு நாடுகளை எல்லாம் நாம் பார்க்கக் காரணம், இந்தியாவில் நாம் முதன்முறையாக குறைக்கடத்தி புனைவு ஆலைகளைத் (semiconductor fab) தொடங்கும் இந்தக் காலகட்டத்தில், அவர்களின் அனுபவங்களிலிருந்து என்னென்ன கற்றுக்கொள்ள முடியும் என்பதைப் பார்ப்பதற்காகத்தான்.

மளிகை வியாபாரத்தில் தொடங்கிய சாம்சங் நிறுவனர் தென் கொரியாவில் சிலிக்கான் பள்ளத்தாக்கை உருவாக்க விரும்பினார்

17:20 தென் கொரியா ஜப்பான் இருந்த அதே நிலையில் இருந்தது. சாம்சங் 1938 இல் நிறுவப்பட்டது. தொடக்கத்தில் மீன், காய்கறிகள், சர்க்கரை போன்றவற்றை விற்று வந்தது. பின்னர் ஜவுளி, கட்டுமானம், வங்கி, காப்பீடு போன்றவற்றில் ஈடுபட்டனர். சாம்சங்கின் நிறுவனர் பியுங்-சுல் லீ (Byung-chul Lee) ஒரு தொலைநோக்கு உள்ள தலைவர். 1982 இல் அமெரிக்க பயணத்திற்குப் பிறகு, தென் கொரியாவில் சிலிக்கான் பள்ளத்தாக்கைப் உருவாக்க விரும்பினார். தென் கொரிய அரசாங்கமும் தொழில்நுட்பத்தை மேம்படுத்த விரும்பி, நிதி ஊக்குவிப்புகள் மற்றும் கடன்களுடன் குறைக்கடத்திகளுக்கு உத்வேகம் அளித்தது. அமெரிக்க நிறுவனங்களும் தொழில்நுட்பத்துடன் கொரியாவிற்கு உதவின. குறைந்த தொழிலாளர் செலவு காரணமாக கொரியா ஜப்பானை விட DRAMகளை மலிவாகத் தயாரிக்க முடிந்தது. சில்லு தொகுப்பில் தொடங்கி சாம்சங் குறைக்கடத்தி புனைவு ஆலைக்கு மேம்படுத்தப்பட்டது.

23:05 என் முனைவர் பட்ட ஆய்வுத் தோழர் சங் சூ லீ (Sung Su Lee) தென் கொரியாவைச் சேர்ந்தவர். அவர் மூலமாக நான் அவரது நாட்டைப் பற்றி நிறையக் கற்றுக்கொண்டேன். மிகவும் விடாமுயற்சியுள்ளவர். என்ன நடந்தாலும், தோல்வியடைந்தாலும் கூட, மீண்டும் எழுந்து முன்னேறுவார். இது அவருடைய குணம் மட்டுமல்ல, அவரது நாட்டின் தனிச்சிறப்பும் கூட.

தங்கள் PDK (Process Design Kit) -யில் வழுக்களைக் கண்டறிபவர்களிடம் ஏதோ திறமை இருக்க வேண்டும்

23:58 நான் தென் கொரியாவுக்கு ஒரு சில முறை சென்றிருக்கிறேன். முதல் முறை சாம்சங் தொழிற்சாலைக்கு விருந்தினராகச் சென்றபோது, தொழிற்சாலைக்குள் புகைப்படம் எடுக்கக்கூடாது என்பதில் அவர்கள் மிகவும் கவனமாக இருந்தனர். என்னுடைய தொலைபேசியை ஒட்டு நாடாவால் சுற்றிக் கட்டினார்கள். அவர்கள் தொழில்நுட்பத்தை எவ்வளவு கவனமாகப் பாதுகாக்கிறார்கள் என்பதை இது காட்டுகிறது. தைவானில் உள்ள TSMC -யைப் பார்வையிட்டாலும் இதே பாதுகாப்பு நடைமுறையை நீங்கள் காண்பீர்கள். எனினும், அடுத்த முறை சாம்சங்கிற்குச் சென்றபோது, எனக்கு அரச மரியாதை கிடைத்தது. விமான நிலையத்தில் என்னை அழைத்துச் செல்ல உல்லாச ஊர்தி (limousine) அனுப்பினார்கள். எந்தவித பாதுகாப்பு சோதனையும் இல்லாமல் நேரடியாகத் தொழிற்சாலைக்குள் அனுப்பினார்கள். ஏன்? ஏனென்றால் அவர்களின் செயல்பாட்டில் நாங்கள் வழுக்களைக் கண்டறிந்தோம். இந்தியாவிலிருந்து வந்த இந்த நபர்களால் தங்கள் PDK (Process Design Kit) -வில் வழுக்களைக் கண்டறிய முடிகிறது. ஆகவே இவர்களிடம் ஏதோ திறமை இருக்க வேண்டும் என்று அவர்கள் உணர்ந்தார்கள். முன்பு எனக்கு முற்றிலும் மாறுபட்ட அனுபவம் இருந்ததால் என்னால் நம்பவே முடியவில்லை.

நம்பிக்கை வைக்கவும், ஆனால் சோதித்து சரிபார்க்கவும்

26:00 எனது முனைவர் பட்ட ஆய்வுக்கான நிதியுதவியை ஒரு ஜப்பானிய நிறுவனம் வழங்கியது. அவ்வப்போது நான் அவர்களுடன் மதிப்பாய்வுக் கூட்டங்களை நடத்துவேன். ஜப்பானில் அந்த நிறுவனத்திலிருந்து ஒரு குழு வந்து என்னையும் எனது வழிகாட்டிப் பேராசிரியரையும் சந்திப்பார்கள். நான் ஒரு விரிவான விளக்கக்காட்சியை வழங்குவேன். எண்ணிம CMOS -இல் முதன்முறையாக வடிப்பான்களை வடிவமைக்க முடியும். வடிப்பான்களை வடிவமைக்க ஒரு புதிய நுட்பத்தை நான் கண்டுபிடித்திருந்தேன். நான் இந்த வடிப்பான்களை வடிவமைத்து, என்னுடைய பாவனையாக்கல் (simulation) முடிவுகளை விளக்கினேன். விளக்கக்காட்சிக்குப் பிறகு அவர்கள் என் அலுவலகத்திற்கு வந்து இந்த பாவனையாக்கல்களைக் ஓட்டிக் காண்பிக்கச் சொல்வார்கள். நான் விளக்கியதை மீண்டும் அவர்கள் தங்கள் பக்கம் செய்து பார்ப்பார்கள். “நம்பிக்கை வைக்கவும், ஆனால் சோதித்து சரிபார்க்கவும் (Trust but verify)” என்பது அவர்களின் குறிக்கோளாக இருந்தது. அவர்கள் நிதியுதவி அளித்த திட்டத்தின் முடிவுகளில் கூர்மையாகக் கவனம் செலுத்தினர்.

தமிழாக்கம்: இரா. அசோகன்

%d bloggers like this: