தமிழின் எதிர்காலமும் தகவல் தொழில்நுட்பமும் 7. “ஆளும் மொழியே வாழும்; மற்றவை மாளும்” இதுதான் நியதியா?

ஆக்ஸ்போர்ட் மொழியியல் பேராசிரியர் ஜீன் அட்சிசன் சொல்கிறார், “ஒரு மொழியின் பரவல் அதைப் பயன்படுத்துபவர்களுடைய சக்தியைச் சார்ந்தது, அம்மொழியின் உள் அம்சங்களைப் பொருத்தது அல்ல.” தமிழின் பயன்பாட்டைக் கட்டாயமாக்கும் ஒரு நாட்டைத் தமிழர்கள் அமைத்தால் மட்டுமே தமிழ் வளரவும் செழிக்கவும் முடியும் என்று சிலர் உறுதியாக நம்புகின்றனர். எடுத்துக்காட்டாக இதோ ஒரு கட்டுரை. இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் எழுதிய தமிழ் மொழியின் எதிர்காலம்.

“தமிழ் மொழி, எதிர்காலத்தில் வாழ்வது நிலப்பரப்பிலோ, மக்கள் தொகையிலோ அல்ல; மாறாக அதன் ஆளும் வல்லமையில் மட்டுமே தங்கியுள்ளது. ஆளும் மொழியே வாழும்; மற்றவை மாளும்.”

ஸ்பானிய, ஆங்கிலேயர்கள் மற்றும் போர்த்துகீசியர்கள் குடியேற்றத்தின் மூலம் தங்கள் மொழிகளை ஆதிக்கம் செலுத்தும் உலகளாவிய மொழிகளாக ஆக்கியுள்ளதை வைத்து இவ்வாறு நினைப்பதாகத் தோன்றுகிறது. இன்னும் சிலர் ஹீப்ரு மொழியை மேற்கோள் காட்டுகின்றனர். இது தினசரி பேச்சு வழக்கில் இல்லாமல் யூத வழிபாட்டு மொழியாகியிருந்தது. பின்னர், 19 ஆம் நூற்றாண்டில், நவீன ஹீப்ருவாக மறுவாழ்வு பெற்று இன்று இஸ்ரேல் நாட்டின் ஆட்சி மொழியாகவும் இலக்கிய மொழியாகவும் புத்துயிர் பெற்றது. யூதர்களுக்கு இஸ்ரேல் என்ற தனி நாடு அமைத்ததனால் மட்டுமே நடந்தது. இல்லையெனில் நடந்திருக்கவே முடியாது என்பதென்னவோ உண்மைதான்.

ஆனால் நாம் இதன் வேறோரு கோணத்தையும் பார்க்க வேண்டும். நார்டிக் நாடுகள் என்பது ஸ்வீடன், நார்வே, பின்லாந்து, ஐஸ்லாந்து, டென்மார்க், கிரீன்லாந்து சேர்ந்தது. இந்த நாடுகளுக்கு தேசிய மொழிகள் இருந்த போதிலும், அறிவியல், உயர்கல்வி மற்றும் வணிக மொழியாக ஆங்கிலத்தை ஏற்றுக்கொள்வதற்கு அழுத்தம் அதிகரித்துள்ளது. நார்டிக் அறிஞர்கள் தங்கள் ஆய்வு முடிவுகளை பல்நாட்டு பத்திரிகைகளில் வெளியிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதுபோலவே, அயர்லாந்து என்ற தனி நாடு அமைத்து ஐரிஷ் மொழியை அதன் ஆட்சி மொழியாக ஆக்கிய பின்னும் ஐரிஷ் மொழி பேசுவோர் மற்றும் கற்போர் குறைந்து வருவதைத் தடுக்க இயலவில்லை.

வணிக ரீதியாக முக்கியமான மொழிகளிலேயே பெரிய நிறுவனங்கள் கவனம் செலுத்துகின்றன

ஆங்கிலம் அதன் தனி பகுப்பில் உள்ளது (என்னுடைய மருமகளின் தமிங்கில மொழியில் சொல்லப்போனால் “அது வேற லெவல்”). உதாரணமாக, இந்த உரைத்தொகுப்பு மொழியியல் வலைப்பதிவு பாருங்கள்.

“இயல்மொழி ஆய்வு பற்றிய திறந்த இரகசியம் இதுதான். அது மிகவும் ஆங்கிலத்தை மையமாகக் கொண்டுள்ளது. மொழியியலாளர்கள் மிக அதிகமாக வேலை செய்துள்ள மொழியாகவும், கணினி அறிவியல் திட்டங்களுக்கான மிகச் சிறந்த வளங்களைக் கொண்டிருக்கும் மொழியாகவும் ஆங்கில மொழி உள்ளது. கணினி அறிவியலில் எப்போதுமே இன்னமும் தரவுகள் இருந்தால் இன்னமும் நல்லது.”

இந்த ஆய்வறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி, பிற வணிகரீதியாக முக்கியமான மொழிகளான பிரஞ்சு மற்றும் ஜெர்மன் போன்ற மொழிகளுக்கு கூகிள், முகநூல், அமேசான், மைக்ரோசாப்ட் போன்ற பெரிய நிறுவனங்களிடமிருந்து நல்ல ஆதரவு கிடைக்கும். ஒரு பெரிய சாத்தியமான செல்வந்த சந்தை இருந்தால் பெரிய சந்தை நிறுவனங்கள் அந்த மொழிகளைக் கவனித்துக்கொள்வார்கள். ஆனால் சந்தை அதைச் செய்யாவிட்டால் மற்ற மொழிகளுக்கு முறையான தொழில்நுட்பங்களை யார் வழங்குவார்? சிறிய மொழிகளில் சிறிய நாடு, மாநிலம் அல்லது வட்டாரப் பொருளாதாரங்கள்தான் உள்ளன. எனவே தொழில்நுட்பத்திற்கான தனியார் அல்லது பொது நிதிகளுக்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. இயல்மொழி ஆய்வைப் பொறுத்தவரை அனைத்து மொழிகளும் கடினமான மொழிகள்தான். ஆனால் அவைகளின் நிதி நிலைமைகள் மலையிலிருந்து மடு போன்று வேறுபடுகின்றன.

இன்னும் பத்து ஆண்டுகளில் அயர்லாந்திலேயே ஐரிஷ் முக்கிய மொழியாக இருக்காது

பல நூற்றாண்டுகளாக அயர்லாந்தில் பேசப்படும் மொழி ஐரிஷ் மட்டுமே. 17 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தின் அரசர் முதலாம் ஜேம்ஸ் நிலத்தைக் கைப்பற்றுவதற்காக பலரை அனுப்பி, கலகங்களை அடக்கி, நாட்டைக் குடியேற்றமாக்கினார். ஆங்கில மேலாதிக்கத்தின் கீழ் ஏற்கனவே மொழி மறைந்து கொண்டிருக்க 1800 களின் பஞ்சம் நாட்டின் ஐரிஷ் பேசுபவர்களை வெளியேற்றியது. தனி நாடாகப் பிரிந்த பிறகு, அயர்லாந்தில் ஐரிஷ் ஆட்சி மொழியாக ஆயிற்று.

2006 மற்றும் 2011 கணக்கெடுப்புகளின் தரவின் அடிப்படையில் சமூகத்தின் மொழிப் பயன்பாட்டை இந்த ஆய்வு ஒப்பிடுகிறது. ஐரிஷ் பேசும் பகுதிகளில் மொத்தம் 155 வட்டாரங்களில் 21 இல் மட்டுமே மக்கள்தொகையில் மூன்றில் இரு பகுதியினர் ஐரிஷ் பேசுகின்றனர். இது முந்தைய கணக்கெடுப்பில் 24 ஆக இருந்தது பின்னர் குறைந்து விட்டது. அயர்லாந்தில் ஐரிஷ் மொழி பேசும் வட்டாரங்களில் மொழியின் தேய்மானம் 2007 ஆய்வில் எச்சரித்ததை விட மிக வேகமாக நடைபெறுகிறது. பத்து ஆண்டுகளில் ஐரிஷ் மொழி பேசும் பகுதிகளில் எங்குமே அது முக்கிய மொழியாக இருக்கும் என்று வாதிடுவது கடினம்.

“ஐரிஷ் மூலம் தங்கள் குழந்தைகளை வளர்க்கத் தீர்மானிக்கும் தாய்மார்களும் தந்தையர்களும்தான் உண்மையாக மொழியைத் திட்டமிடுபவர்கள்” என்று அவர் கூறினார்.

அயர்லாந்தும் வட அயர்லாந்தும்

அயர்லாந்தும் வட அயர்லாந்தும்

ஆனால் வட அயர்லாந்திலோ அரசியல்வாதிகளைவிட மக்கள் ஒரு தப்படி முன்னால் இருக்கிறார்கள்

ஐரிஷ் மொழி இங்கிலாந்தின் பகுதியான வட அயர்லாந்தில் அனேகமாக மறைந்தே விட்டது. இருப்பினும், மாகாணத்தின் பல சமூகங்களில், சில குடும்பங்கள் மொழியைக் காப்பாற்ற ஒன்று சேர்ந்தனர்.   இந்த முயற்சி ஒரு கிராமப்புறப் பகுதியில் தொடங்கியது. 1992 இல் ஒரு பத்துப் பன்னிரண்டு குடும்பங்கள் தங்கள் சேமிப்பைச் சேர்த்து ஒரு ஐரிஷ் அறிமுக நிலைப் பள்ளியை அமைத்தனர். மாகாணத்தில் இது முதல் பள்ளியாகும்.

இந்தப் பள்ளியைத் தொடங்குவதற்கு உதவியவர்களுள் ஒருவர் நினைவுகூர்ந்தார், “ஒரு சிலப் பெற்றோர்களுக்குத்தான் இந்தத் தைரியம் இருந்தது. அரசு நிதி எதுவும் கிடையாது. பிரிவினையிலிருந்து ஐரிஷ் மொழியானது நாட்டு மொழியாகக் கருதப்படுவதில்லை. பழைய அணுகுமுறை ஐரிஷ் மொழியை ஒரு வெளிநாட்டு மொழியாகக் கருதி ஒவ்வொரு மட்டத்திலும் ஊக்கமளிப்பதில்லை.” இந்தக் குடும்பங்களோ விடாப்பிடியாகத் தொடர்ந்து முயற்சி செய்தன. இன்று இந்த கார்ன்டோகர் சமுதாய சங்கம் ஒரு வளர்ந்து வரும் ஐரிஷ் மொழிப் பள்ளியை நடத்தி வருகிறது.

“மொழியில் பெரும் வளர்ச்சியை நாங்கள் கண்டிருக்கிறோம்,” என்று மையத்தில் ஒரு மேலாளரான லியோன் கூறினார். “ஐரிஷ் மொழி எவருக்கும் எதிரானதல்ல. எங்கள் மொழியைப் பேசுவதற்கு எங்களுக்கு உரிமை உண்டு. வேறு கருத்து யார் சொன்னாலும் அது மிகவும் குறுகிய மனப்பான்மை என நான் கருதுகிறேன்.” இந்தக் கல்வி இயக்கம் மற்ற இடங்களிலும் பரவியது. இறுதியில் வட அயர்லாந்து அரசாங்கம் ஒருசில பள்ளிகளில் ஐரிஷ்-மொழி கற்கும் திட்டங்களுக்கு நிதி வழங்க ஒப்புக்கொண்டது. இன்று, முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலையில் 39 ஐரிஷ் மொழிப் பள்ளிகள் உள்ளன.

“அரசியல்வாதிகளைவிட மக்கள் இங்கே ஒரு தப்படி முன்னால் இருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.”

சுருக்கமாகச் சொல்வதானால் “உங்கள் மொழியை மற்ற நாடுகள் இனங்களின் மீது கட்டாயப் படுத்தித் திணிக்க வேண்டுமென்றால் அது ஆளும் மொழியாக இருப்பது அவசியம். ஆனால் உங்கள் சமூகத்திலேயே ஆழமாக வேரூன்ற வேண்டுமென்றால் அதற்கு சமூக முனைப்பும் தகவல் தொழில்நுட்பமும்தான் உதவ முடியும்.”

————–

இத்தொடரில் அடுத்த கட்டுரை:  புதிய தலைமுறையின் மரபணுவே எண்ணிமத்தால் ஆனது போலுள்ளது

தொழில்நுட்பம் இளம் இந்தியாவை முற்றிலும் மாற்றிவிட்டது. முன்னால் ஆடம்பரமாகக் கருதப்பட்ட சாதனங்கள் கல்வியிலும் சொந்த வாழ்க்கையிலும் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும் இன்றியமையாதவையாக வெகு விரைவில் ஆகிவிட்டன. இந்தத் தலைமுறைக்கு திறன்பேசி இல்லாமல் வாழ்க்கை என்ன என்றே தெரியாது. இவர்கள் எப்போதுமே இணையத்திலுள்ளனர். தாய்மொழியைப்பற்றி அடுத்த தலைமுறையின் மனப்பாங்கு என்ன? ஆர்வம் வளர்ப்பது எப்படி?

%d bloggers like this: