கட்டற்ற மென்பொருளும் – அறிவியலும்
பகுதி – I
(கல்வி மற்றும் அறிவியலுக்கான லினக்ஸ் வழங்கல்கள்)
லினக்ஸ் ஒரு கட்டற்ற மென்பொருள் என்பதாலும், நெகிழ்வுத் தன்மை கொண்டதாலும் உலகம் முழுவதும் பல நூறு லினக்ஸ் வழங்கல்கள் பலராலும் உருவாக்கப்பட்டு தங்களுடைய தேவைகளுக்கேற்ப மாற்றியமைத்தும், மேம்படுத்தியும் வெளியிடப்பட்டு வருகிறது. சில லினக்ஸ் வழங்கல்கள் சில குறிப்பிட்ட பணிகளுக்கென்றே சிறப்பாக உருவாக்கப்பட்டு வெளியிடப்படுகின்றன. உதாரணத்திற்கு Free NAS, NetBSD, System Rescue CD, IP Cop போன்றவற்றைக் கூறலாம்.
இதே போன்று குழந்தைகள், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்களுக்குத் தேவைப்படும் பல லினக்ஸ் வழங்கல்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றைப் பற்றிப் பார்ப்போம்.
Qimo 4 Kids
இது உபுண்டுவை அடிப்படையாகக் கொண்டு பள்ளிக் குழந்தைகளுக்காக வடிவமைப்பட்டது. இதில் Tux paint, etoys, Gcompris, Tuxmath போன்ற குழந்தைகளுக்குத் தேவைப்படும் மென்பொருள்கள் உள்ளன. இது வீடுகளில் உள்ள மேசைக் கணினிகளில் பயன்படுத்த ஏதுவானது.
Edubuntu
இது பரவலாகப் பயன்படுத்தப்படும் உபுண்டு லினக்ஸால் வெளியிடப்படும் பள்ளி குழந்தைகள், மாணவர்களுக்கான ஒரு லினக்ஸ் ஆகும். இதுவும் Qimo 4 Kids –ல் உள்ள அனைத்து மென்பொருள்களைக் கொண்டது. மேலும் இது வகுப்பறைகளில் பயன்படுத்த ஏதுவாக LTSP (Linux Terminal Server Client) கொண்டது.
Eduboss
இது சென்னையில் அமைந்துள்ள C-DAC (Centre for Development of Advanced Computing – Super computer, cloud computer, மொழி சார்ந்த மென்பொருள்கள், எழுத்துருக்கள் போன்றவற்றில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் மையம்) அரசு நிறுவனத்தால் வெளியிடப்படும் ஒரு லினக்ஸ் வழங்கல். இது தமிழகத்தில் வழங்கப்படும் இலவச மடிக்கணினியில் நிறுவப்பட்டுள்ள BOSS -ன் கல்வி பதிப்பு. இதில் ஓபன் ஆபீஸின் மாற்றியமைக்கப்பட்ட (Bharateeya Open Office) பதிப்பு உள்ளது. இந்த ஆபீஸ் செயலி இந்திய மொழிகள் பலவற்றை ஆதரவு தரும் வகையில் வடிவகைப்பட்டுள்ளது. Eduboss -ல் உள்ள E-learing editor மூலம் ஆசிரியர்கள் இணைய வழி கற்றல், வினாடி வினா, சோதனைகள், சுய மதிப்பீட்டு செயல்முறைகள் போன்றவற்றை மாணவர்களுக்காக உருவாக்க இயலும்.
Scientific Linux
இது உலகில் மிகப்பெரிய இயற்பியல் ஆய்வுக் கூடமான CERN (சமீபத்தில் ஹிக்ஸ் போஸான் ஆய்வினை வெளியிட்ட ஆய்வுக் கூடம்) மற்றும் Fermilab ஆகியவற்றால் இலவசமாக வெளியிடப்படும் ஒரு அறிவியல் வழங்கல் ஆகும். இது Red Hat லினக்ஸை அடிப்படையாகக் கொண்டது. இதில் KDE Edu Suite, R (புள்ளியியல் கணிப்பான்), Scipy and Numpy (அறிவியல் மற்றும் கணிதத்திற்கான python library) போன்ற மென்பொருள்களையும், ஆய்வுக் கூடங்களில் பல கணினிகளில் பயன்படுத்த cluster suite ம் உள்ளது.
OpenSUSE 12.1 Edu Life (Linux for Education)
Opensuse மாணவர்களுக்காக வெளியிடப்படும் ஒரு கல்வியியல் வழங்கல் ஆகும். இந்த வழங்களில் ஏறக்குறைய கல்வி சார்ந்த இயற்பியல், வேதியியல் தொடர்பான அனைத்து மென்பொருள்களும் இதில் உள்ளன. இவற்றில் Fedena School Managment, Moodle Course Management, KIWI-LTSP போன்றவை குறிப்பிடத்தக்கதாகும். இவை தவிர புரோகிராமிங்கிற்கு தேவைப்படும் கருவிகளும் இதில் உள்ளன.
Fedora Scientific Spin
இதில் Scientific KDE, Electronic Lab போன்ற வழங்கல்கள் உள்ளன. Scientific KDE – ல் GNU scientific library, scipy, numpy, GNU Octave, Kile, Inkscape, Mayavi, GNU fortran, Matplotlib, Root, R, spyder என அறிவியல் கணினிக்கு தேவைப்படும் அனைத்து மென்பொருள்களும் உள்ளன. Fedora Electronic Lab மின்னியலுக்குத் தேவைப்படும் மென்பொருள்களை கொண்டது. VLSI design, Circuit Design and simulation போன்றவற்றிற்கு பயன்படுத்தலாம்.
Biolinux
இது NEBC (NERC Environmental Bioinformatics Centre – nebc.nerc.ac.uk/ ) உயிர் தகவலியல் மையத்தால் வெளியிடப்படும் லினக்ஸ் வழங்கல். உபுண்டுவை அடிப்படையாகக் கொண்டது. இது உயிரிதகவலியலில் ( Bioinformatics) ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஏற்றது. இந்த வழங்கலை Workstation, Cluster களில் பயன்படுத்தலாம்.
CAE Linux
இது உபுண்டுவை அடிப்படையாக கொண்ட பொறியியல் மாணவர்களுக்குப் பயன்படும் ஒரு லினக்ஸ் வழங்கல். CAD என்று சொல்லப்படும் பல மென்பொருள்களைக் கொண்டது. இது மெக்கானிக்கல் மாணவர்களுக்குப் பெரிதும் உதவும். விண்டோஸில் பயன்படுத்தப்படும் பல வர்த்தக மென்பொருளுக்கு மாற்றாக இந்த வழங்கலைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.