எளிய தமிழில் CAD/CAM/CAE 15. ஓபன்ஸ்கேட் (OpenSCAD) & பௌலர்ஸ்டுடியோ (BowlerStudio)

ஓபன்ஸ்கேட் நிரல் எழுதி 3D மாதிரி உருவாக்கும் திறந்தமூல CAD மென்பொருள். இதை இலவசமாகப் பதிவிறக்கம் செய்யலாம்.

ஓபன்ஸ்கேட் மற்ற CAD கருவிகள் போல ஊடாடும் (interactive) மாதிரியாக்கி அல்ல

அளவுரு மாதிரியமைத்தல் பற்றி முந்தைய கட்டுரையில் பார்த்ததை நினைவுக்குக் கொண்டு வரலாம். அதில் அம்சங்கள் அடிப்படை (Feature-based) அல்லது வரலாறு அடிப்படை (History-based) முறையில் எந்த வடிவத்தில் தொடங்கினோம், என்னென்ன செய்து இந்த சிக்கலான வடிவத்துக்கு வந்து சேர்ந்தோம் என்ற வழிமுறைகளைச் சேமித்து வைப்பதைப் பற்றிப் பார்த்தோம்.

இம்மாதிரி எந்த அடிப்படைத் திட வடிவத்தில் தொடங்கினோம் எந்த வழிமுறைகளைப் பின்பற்றினோம் என்பதை நாம் நிரலாக எழுதலாம். இந்த நிரலை ஓட்டிப் பார்த்தால் கடைசியாக உருவாக்கிய திட வடிவ உருவம் கிடைக்கும். இது முற்றிலும் வித்தியாசமான திட வடிவம் மாதிரியமைக்கும் உத்தி.

ஓபன்ஸ்கேட்

ஓபன்ஸ்கேட்

ஓபன்ஸ்கேட் எல்லோருக்கும் ஒத்துவரும் என்று சொல்ல முடியாது

ஆனால் நிரலாளர்கள் கூறுகிறார்கள் தங்களுடைய தொழில் நுட்ப வேலைகளுக்கு ஓபன்ஸ்கேட் தான் சிறந்த கருவி என்று. ஏனெனில் தயாரிப்பில் பெரிய மாற்றங்கள் செய்ய வேண்டுமென்றால் நிரலின் உள்ளமையில் ஒரு சில மாற்றங்கள் செய்தாலே போதும். 

இரண்டு பாகங்களுக்கு இடையில் உங்களுக்கு நீண்ட இடைவெளி தேவையா?  ஒரு எண்ணை மட்டும் மாற்றினால், மற்ற அளவுகள் எல்லாவற்றையும் மீண்டும் கணக்கிட்டுக்கொள்ளும். ஒரு பற்சக்கரத்தில் உள்ள பற்களின் எண்ணிக்கையை மாற்றவேண்டுமா? ஒரு எண்ணை மட்டும் மாற்றினால் மற்ற எல்லாவற்றையும் தானே கணக்கிட்டு அதற்குத் தகுந்தாற்போல் மாற்றிக் கொள்ளும்.

உங்களுக்கு ஒரே அடிப்படை கருவி 17 வெவ்வேறு அளவுகளில் தேவையா? ஒரு முறை ஓபன்ஸ்கேட் பயன்படுத்தி வடிவமைத்துக் கொள்ளுங்கள். பின்னர் உங்களுக்குத் தேவையான 17 பதிப்புகளை உருவாக்க ஒரு திரள் கோப்பு (batch file) எழுதுங்கள். ஒரு பொத்தானைத் தட்டிவிட்டு 17 அளவுகளையும் ஒரே மூச்சில் உருவாக்க முடியும்.

ஓபன்ஸ்கேட் சிறப்பு அம்சங்களும் சில பிரச்சினைகளும்

இதற்கு உள்நோக்குத் (introspection) திறன் உள்ளதால் பாகங்கள் பட்டியலையும் (Bill of Materials) மற்ற ஆவணங்களையும் தானியங்கியாகத் தயாரித்துக் கொள்ள முடியும்.

நாம் சால்வ்ஸ்பேஸ் செய்ய இயலாத வேலைகள் சிலவற்றை முந்தைய கட்டுரையில் பார்த்தோம். அதேபோல இந்த மென்பொருளிலும் நேரடியாக விளிம்புப்பட்டி (fillet) செய்ய இயலாது. இருப்பினும் மாற்று வழியில் (work around) இதைச் செய்ய சிலர் வழி கூறுகிறார்கள்.

பௌலர்ஸ்டுடியோ (BowlerStudio) எந்திரன் உருவாக்கும் தளம் (Robotics Development Platform)

திறந்தமூல பௌலர்ஸ்டுடியோ வெறும் கணினி வழி வடிவமைப்பு (CAD) மென்பொருள் மட்டுமல்ல. கருத்துருவிலிருந்து நிறைவு வரை எந்திரனியல் திட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் இது உங்களுக்கு உதவுகிறது. இது நிரல் எழுதுவதன் மூலம் எந்திரன்களை உருவாக்குவதற்கான ஒரு கருவியாகும். ஜாவா, பைதான் போன்ற மொழிகளில் நிரல் எழுதுவதன் மூலம் எந்திரன்களை வடிவமைக்கலாம், பாவனையாக்கலாம் மற்றும் 3D அச்சிடலாம்.

பௌலர்ஸ்டுடியோ

பௌலர்ஸ்டுடியோ

இது உலாவியில் இயங்கும் ஒரு செயலி மற்றும் நீங்கள் நிரலில் அழைக்கக்கூடிய நிரலகங்களின் கட்டமைப்பைக் கொண்டுள்ளது. நிரல் மற்றும் அது சார்ந்திருக்கும் தேவையான நிரலகங்களையும் உலாவியில் பதிவிறக்கித் தொகுத்து ஓட்டும்.

நன்றி தெரிவிப்புகள்

  1. OpenSCAD – Acarius10
  2. BowlerStudio: A robotics development platform

இத்தொடரில் அடுத்த கட்டுரை: பொறியியல் பகுப்பாய்வு (CAE)

எந்திர பாகங்களில் பளு (load), வெப்பம் போன்றவைகளால் ஏற்படும் விளைவுகள். எந்திரவியல் பொறியியல் பகுப்பாய்வு. பொறியியல் பகுப்பாய்வு செய்ய திறந்தமூல மென்பொருட்கள்.

ashokramach@gmail.com

%d bloggers like this: