நேரடி மாதிரியமைத்தல் (Direct modelling)
நாம் ஒரு சிக்கலான வடிவத்தைப் பல படிகளில் உரு மாற்றங்கள் செய்து தயாரித்து முடித்திருக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். இதை சேமித்து வைப்பதன் முக்கிய நோக்கம் இந்தக் கோப்பைத் திறந்து திரும்பவும் இந்த வடிவத்தை உருவாக்க இயல வேண்டும். இதை சேமித்து வைக்க நாம் இரண்டு விதமான உத்திகளைக் கையாளலாம். முதல் வழி நமக்குக் கடைசியாக கிடைத்த வடிவத்தை மட்டும் அப்படியே சேமித்து வைப்பது. இதை நேரடி மாதிரியமைத்தல் (Direct modeling) என்று சொல்கிறார்கள்.
வரலாறு அடிப்படை (History-based) மற்றும் அம்சங்கள் அடிப்படை (Feature-based) மாதிரியமைத்தல்
மற்றொன்று நாம் எந்த வடிவத்தில் தொடங்கினோம், என்னென்ன நடவடிக்கைகள் செய்து இந்தச் சிக்கலான வடிவத்துக்கு வந்து சேர்ந்தோம் என்ற படிமுறைகளைச் சேமித்து வைப்பது. இதை அம்சங்கள் அடிப்படை (Feature-based) என்றும் வரலாறு அடிப்படை (History-based) என்றும் சொல்கிறார்கள்.
எடுத்துக்காட்டாக நாம் ஒரு மிதிவண்டியின் மிதியில் (pedal) உள்ள பெரிய பற்சக்கரம் (sprocket) வடிவமைக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். முதலில் ஒரு வட்டத்தை எடுத்துக் கொள்வோம். அதன் வெளிப்பக்கத்தில் பற்கள் தேவை. அடுத்து மையத்தில் ஒரு துளை. துளையைச் சுற்றிலும் எடையைக் குறைக்க வடிவ வெட்டுக்கள் (cut-outs).
அளவுரு மாதிரியமைத்தல் (Parametric modelling)
இம்மாதிரி படிமுறைகளைச் சேமித்து வைப்பதில் ஒரு வசதி என்னவென்றால் நாம் மாறிகளை (variables), அதாவது அளவுருக்களைப் பயன்படுத்தலாம். மேற்கண்ட வடிவத்தில், எடுத்துக்காட்டாக, நாம் விட்டத்தை ஒரு அளவுருவாக (parameter) வைத்துக் கொள்ளலாம். துளையின் அளவை நேரடியாகக் கொடுக்காமல் விட்டத்தின் அளவில் 7 விழுக்காடுகள் என்று சொல்லலாம். இதேபோல விட்டத்தின் அளவைப் பொருத்து பற்களின் எண்ணிக்கையையும் வைக்கலாம்.
அடுத்து சிறுவர்களுக்கான ஒரு மிதிவண்டி பற்சக்கரம் வடிவமைக்க வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். நாம் ஒவ்வொரு அளவையும் தனித்தனியாக மாற்றிக்கொண்டிராமல் விட்டத்தை மட்டும் குறைத்தால் மற்ற எல்லாமே அதற்குத் தகுந்தவாறு குறைந்துவிடும். இதைத்தான் அளவுரு மாதிரியமைத்தல் (Parametric modelling) என்று சொல்கிறார்கள்.
அளவுரு மாதிரிகள் வெறும் படம் மட்டுமல்ல
நேரடி மாதிரிகளில் (Direct models) நாம் சேமித்து வைப்பது வெறும் படத்தை மட்டுமே. இவற்றை “புத்திசாலித்தனம் இல்லாத” (dumb) மாதிரி என்றும் சொல்கிறார்கள். இம்மாதிரியான நேரடி மாதிரிகளிலும் மாற்றங்கள் செய்ய முடியும்.
ஆனால் அளவுரு மாதிரிகளில் நாம் படத்துடன் சில அளவுருக்களையும் (parameters), கட்டுப்பாடுகளையும் (constraints), உறவுமுறைகளையும் (relationships) சேர்த்து சேமித்து வைக்கிறோம். ஆகவே மாதிரியில் ஒரு இடத்தில் மாற்றினால் அதற்குத் தகுந்த முறையில் மற்ற இடங்களிலும் தேவையான மாற்றங்கள் செய்து கொள்ளும். இதையே “புத்திசாலித்தனம் உள்ள” (intelligent) மாதிரி என்று சொல்கிறார்கள். அந்தந்த மென்பொருளின் தன்னகக் கோப்பு வடிவத்தில்தான் (Native file format) இம்மாதிரி “புத்திசாலித்தனம் உள்ள” மாதிரிகளை சேமித்து வைக்க முடியும். ஆனால் நீங்கள் ஒரு மென்பொருளிருந்து எந்தவொரு வேலைக்காகவும் DXF, STEP மற்றும் வேறு எந்தக் கோப்பு வடிவிலும் ஏற்றுமதி செய்தால் அந்த “புத்திசாலித்தனம்” போய்விடும். வெறும் படத்தை மட்டுமே ஏற்றுமதி செய்யும்.
நன்றி தெரிவிப்புகள்
இத்தொடரில் அடுத்த கட்டுரை: சால்வ்ஸ்பேஸ் (SolveSpace) 3D
எளிதாக நிறுவி இயக்க முடியும். பாகங்களைத் தொகுத்துப் பார்க்கும் வசதி. கண்ணி (mesh) மற்றும் வளைந்த மேற்பரப்பு (NURBS surface). சால்வ்ஸ்பேஸ் செய்ய இயலாத வேலைகள்.