அரசாங்கங்கள், ஆதாய நோக்கற்ற நிறுவனங்கள், ஆதாயம் ஈட்டும் நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட நிரலாளர்கள் போன்ற பல வகையான வாடிக்கையாளர்களுடன் திறந்த மூல திட்டங்களை எவ்வாறு தொடங்குவது மற்றும் நடத்துவது ஆகியவை பற்றி கார்ல் ஃபோகல் (Karl Fogel) நிறைய திறந்த மூல ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார்.
இவர் எழுதிய “திறந்த மூல மென்பொருள் உருவாக்குதல் – ஒரு கட்டற்ற மென்பொருள் திட்டத்தை வெற்றிகரமாக இயக்குவது எப்படி” என்ற புத்தகத்தை இலவசமாகப் படிக்கலாம். இது திறந்த மூல மென்பொருள் திட்டங்களுக்கு குழுக்களை உருவாக்குவது பற்றிய ஒரு புத்தகம் ஆகும். இது எவ்வாறு வெற்றிகரமான திட்டங்கள் இயங்குகின்றன, பயனர்கள் மற்றும் நிரலாளர்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் கட்டற்ற மென்பொருள் கலாச்சாரம் ஆகியவற்றை விவரிக்கிறது.
நியூயார்க் நகரில் கிக்ஸ்டார்டர் நிறுவனம் ஒரு உலகளாவிய பொது நிதி திரட்டும் தளத்தை பராமரிக்கிறது. ஆக்கபூர்வ திட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வருதல் இவர்களின் நோக்கம். கிக்ஸ்டார்டர் இந்த மேம்படுத்தப்பட்ட பதிப்புக்கு செய்தியைப் பரப்பி நிதி திரட்ட வழி செய்தது. 314 ஆதரவாளர்கள் $15,376 உறுதி அளித்து இந்த மேம்படுத்தப்பட்ட பதிப்பை வெளியிட உதவினர்.
இப்புத்தகம் தன்னார்வ மொழிபெயர்ப்பாளர்களாலோ அல்லது மொழிபெயர்ப்பு குழுக்களாலோ 9 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மேலும் 9 மொழிபெயர்ப்புகளும் முன்னேறி வருகின்றன.
இந்தப் புத்தகம் திறந்த பதிப்புரிமை கீழ் வெளியிடப்பட்டுள்ளது. நீங்கள் ஓ’ரெய்லி மீடியாவிலிருந்து (O’Reilly Media) வாங்கலாம், இலவசமாக இணைய தளத்திலேயே படிக்கலாம் அல்லது (PDF கோப்பாக) பதிவிறக்கமும் செய்யலாம்.