பைத்தான் படிக்கலாம் வாங்க! 12 – மூன்று எண்களில் பெரிய எண் எது?

மூன்று எண்களில் பெரிய எண்ணைக் கண்டுபிடிப்பதற்கான பாய்படத்தை(flowchart) வரைந்து வரக் கேட்டிருந்தேன். வரைந்து விட்டீர்களா? நானும் அந்த வீட்டுப்பாடத்தைச் செய்திருக்கிறேன்.

நீங்கள் இது போலவும் செய்திருக்கலாம். மாற்று வழியிலும் செய்திருக்கலாம். உங்கள் பாய்படத்தை github.com தளத்தில் பதிவேற்றி, இணைப்பைக் கருத்துகளில் பதியுங்கள்.

சரி, இப்போது மேல் உள்ள பாய்படத்திற்குப் பைத்தான் நிரல் எழுதுவோமா?

1. மூன்று எண்களை வாங்க வேண்டும்.
no1 = 100
no2 = 200
no3 = 300
2. மூன்று எண்களில் முதல் எண்ணை எடுத்து, மீதி இரண்டு எண்களை விடப் பெரியதாக எனப் பாருங்கள். அப்படியிருந்தால் மட்டும், முதல் எண்ணை அச்சிடுங்கள்.
3. இல்லை என்றால், இரண்டாம் எண்ணை எடுங்கள். அதை, முதல் எண்ணோடும் மூன்றாடும் எண்ணோடும் ஒப்பிட்டு, இரண்டாம் எண் பெரியதாக எனப் பாருங்கள். அப்படியிருந்தால் இரண்டாம் எண்ணை அச்சிடுங்கள்.
4. அதுவும் இல்லை என்றால், மூன்றாவது எண் தான் பெரியதாக இருக்கும் அல்லவா? அதை அச்சிடுங்கள்.

பைத்தானில் இதை முயன்று பார்ப்போமா?


no1 = 100 #மூன்று எண்களை வாங்க வேண்டும்.
no2 = 200
no3 = 300
if no1>no2 and no1>no3: #மூன்று எண்களில் முதல் எண்ணை எடுத்து, மீதி இரண்டு எண்களை விடப் பெரியதாக எனப் பாருங்கள்
print("Biggest ", no1) #அப்படியிருந்தால் மட்டும், முதல் எண்ணை அச்சிடுங்கள்.
elif no2>no1 and no2>no3:#இல்லை என்றால், இரண்டாம் எண்ணை எடுங்கள். அதை, முதல் எண்ணோடும் மூன்றாடும் எண்ணோடும் ஒப்பிட்டு, இரண்டாம் எண் பெரியதாக எனப் பாருங்கள்.
print("Biggest ", no2) #அப்படியிருந்தால் இரண்டாம் எண்ணை அச்சிடுங்கள்.
else: #அதுவும் இல்லை என்றால், மூன்றாவது எண் தான் பெரியதாக இருக்கும் அல்லவா?
print("Biggest ", no3) #அதை அச்சிடுங்கள்.

இதில் மூன்று எண்களை மாற்றி மாற்றிப் பயன்படுத்தி, நிரல் சரியாக வேலை செய்கிறதா என்று பாருங்கள். இப்போது இந்த நிரலில் புதிதாக, if, elif, else, and ஆகியவற்றைப் பயன்படுத்தியிருக்கிறோம். நிரலிலேயே ஒவ்வொரு வரியிலும் அதற்கான விளக்கம் சேர்க்கப்பட்டிருக்கிறது. புரிகிறதா என்று பாருங்கள்.

வீட்டுப்பாடம்:
1) > குறி இருக்கும் இடத்தில் < குறியை மாற்றிப் பாருங்கள். விடை என்ன வருகிறது என்று பார்த்துப் புரிகிறதா எனச் சொல்லுங்கள்.
2) and இருக்கும் இடத்தில் or பயன்படுத்தி, விடை எப்படி வருகிறது என்று பாருங்கள்.

– கி. முத்துராமலிங்கம், பயிலகம்