திரும்பி வந்துட்டேன்னு சொல்லு – பைத்தான் 28

பைத்தான்: வா! நந்தா! வா! என்னை மறந்துட்டேல்ல!

நந்தன்: அப்படியெல்லாம் இல்லை! கொஞ்ச நாளா வேலை அதிகம்! அதான், உன்ன பார்க்க வரல! மத்தபடி ஐ லவ் யூ தான்!

பைத்தான்: நீ இல்லாத இந்த நாட்கள்ல நெறய மாறிப் போச்சு!

நந்தன்: அப்படி என்ன மாறிச்சு!

பைத்தான்: தமிழ்நாட்டுப் பாடத்திட்டத்துல மூணாவது மொழி உண்டுன்னு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் சொல்லிட்டாரு!

நந்தன்: என்னது?! மூணாவது மொழியா?

பைத்தான்: ஆமாப்பா! மூணாவது மொழியா சி, சி++, ஜாவா இப்படி ஏதாவது ஒன்னு சேர்த்துப்பாங்கலாம்!

நந்தன்: அடச்சே! இப்படி விவரமாச் சொல்லு! நான் கூட ஒரு நிமிசம் கொழம்பிப் போயிட்டேன்.

பைத்தான்: அமைச்சர் அப்படிச் சொன்னது தான், என் வருத்தமே!

நந்தன்: இதிலே, வருத்தப்பட என்ன இருக்கு?

பைத்தான்: என்ன நந்தா, இப்படிக் கேட்டிட்ட? அவர், என் பெயரைச் சொல்லலை பார்த்தியா?

நந்தன்: !

பைத்தான்: அப்போ, என் பெயர் இல்லைங்கறது உனக்குக் கவலை இல்லை அப்படித்தானே!

நந்தன்: அப்படி நினைக்கல!

பைத்தான்: பின்னே, எப்படி நினைச்ச!

நந்தன்: அவர் சொன்னதுல AI இருக்குல்ல, அது நீ தான்பா!

பைத்தான்: ! அப்படிச் சொல்றியா?

நந்தன்: (அப்பாடா! தப்பித்தேன்! என நினைத்துக் கொண்டே) பின்ன பன்னிரண்டாம் வகுப்புப் பாடத்திலேயே உன்னை ஒரு பாடமாச் சேர்த்த நம்ம அரசைப் போய் நீ இப்படி சந்தேகப்படலாமா, சொல்லு!

பைத்தான்: சரி தான்! சரி தான்! சோசியல் மீடியாவைப் பார்த்துப் பார்த்து, எனக்கும் இப்போ மூளை குழம்பிப் போய்டுது!

நந்தன்: சரி விடு! இயற்கையா மூளை இருக்கிற நாங்களே பல விசயங்கள்ல குழம்பி, சண்டை போட்டுக்கிறோம். செயற்கை அறிவு இருக்கிற உனக்குக் குழப்பம் வராதா என்ன?

பைத்தான்: அப்போ, செயற்கை அறிவு, இயற்கை அறிவு அளவு வராதுன்னு சொல்ற!

நந்தன்: சரி சரி விடு விடு! இன்னைக்கு என்ன உனக்கும் எனக்கும் பேச்சு வார்த்தை இப்படியே போய்ட்டு இருக்கு!

பைத்தான்: சரி விடு! நீ வராத நாள்ல நடந்த ஒரு நல்ல விசயத்தைச் சொல்றேன்.

நந்தன்: அப்படி வா! என்ன நல்ல விசயம்?

பைத்தான்: என் மனசுல உனக்கு வைச்சிருந்த இடத்த நான் வேற ஒருத்தர்க்குக் கொடுத்துட்டேன்.

நந்தன்: (மனம் உடைந்து போய்) காதல்ங்கிறது சில பேருக்குப் பூ மாதிரி

பைத்தான்: போதும் போதும்! உன் கருத்தெல்லாம் எனக்கும் தெரியும்! நீ காதலிக்கிறேன் காதலிக்கிறேன்னு சொல்லிட்டு சொல்லாம கொள்ளாம ஓடிடுவ! நான் உன்னையே நினைச்சு என் வாழ்க்கையையும் அழிச்சுக்கணும்! ஆனா நீ, என்னை விட்டுட்டு, ஜாவா, ஸ்பிரிங்பூட்னு ஜாலியா இருப்ப! நான் அழுதுட்டே இருக்கணும்! ச்சே! நீ இப்படி இருப்பேன்னு நான் நினைச்சுக்கூடப் பார்க்கல!

நந்தன்: ! நீ அப்படி நினைச்சுட்டியா?

பைத்தான்: (அதிகாரமாய்) வேற எப்படி நினைக்கச் சொல்ற?

நந்தன்: சரி சரி விடு விடு! சும்மா ஒரு சினிமா வசனம் சொல்லிப் பார்த்தேன்!

பைத்தான்: அப்படி வா! வழிக்கு! மொதல்ல நான் உன்னைக் காதலிக்கிறேன்னு நீ தப்பா நினைச்சுட்டு இருந்திருக்க!

நந்தன்: அப்போ இல்லையா?

பைத்தான்: நான் உன்னை என்னோட நல்ல நண்பனாத் தான் நினைச்சிட்டிருந்தேன். காதல், கல்யாணம்னு எதையாவது தூக்கிட்டு வந்திடாத!

நந்தன்: ! அப்படின்னா சரி சரி! இப்போ என்னோட இடத்தை நீ யாருக்குக் கொடுத்திருக்க!

பைத்தான்: உனக்குச் சீனி தெரியுமா?

நந்தன்: தெரியுமாவா? அவர் மூலமாத் தான் எனக்கு உன்னையே தெரியும்!

பைத்தான்: அவர் இப்போ என்னை நல்லாப் பார்த்துக்கிறார்!

நந்தன்: அருமை! அப்போ இவ்ளோ நாள் நான் வராம இருந்ததும் நல்லது தான் போல!

பைத்தான்: ஆமா! “எளிய தமிழில் பைத்தான்அப்படின்னு அவர் ஒரு தொடர் எழுத ஆரம்பிச்சிக்கார்!

நந்தன்: நல்லது தானே! நான் ஒன்னு சொன்னா நீ தப்பா நினைக்கக் கூடாது!

பைத்தான்: அதான் சொல்ல வந்துட்டியே! சொல்லித் தொலை!

நந்தன்: அவர் தான் உன்னை ரொம்ப நாளா லவ் பண்ணிட்டிருக்கார்!

பைத்தான்: அது எனக்கு முன்னாடியே தெரியும்.

நந்தன்: தெரியுமா? எப்படி?

பைத்தான்: தற்செயலா ஒரு நாள் அவரோட கிட் பக்கத்தைப் போய்ப் பார்த்தேன். அந்தச் சிரிப்பில் நான் என்னையே பறிகொடுத்திட்டேன்.

நந்தன்: ஹி ஹி! எனக்குத் தெரியும்! உனக்கும் அவரைப் பிடிக்கும்னு!

பைத்தான்: சரி! இப்போ நீ வந்த காரணம் என்ன? அதைச் சொல்லு!

நந்தன்: திரும்பவும் உன் கதையச் சொல்ல ஆரம்பிக்கலாம்னு தான்!

பைத்தான்: கதை எல்லாம் நல்லாத் தான் சொல்ற! ஆனா ஆள் காணாமப் போயிடிறியேப்பா!

திடீர்னு நான் எப்படி உன்னோட நினைப்புல வந்தேன்! அதைச் சொல்லு!

நந்தன்: அதுவா! சீனி, ஒரு நாள் கிஸ் ஃப்ளோ ஹேக்கத்தான்ல கலந்துக்கோன்னு சொன்னாரு!

பைத்தான்: அப்படிப் போடு! அப்போ சீனி சொல்லித் தான் திரும்பவும் என் ஞாபகம் வந்திருக்கு!

நந்தன்: அங்கே போனேனா! அங்க நம்ம தங்க அய்யனார், புரோகிராமிங் பற்றி ஒரு புத்தகம் எழுதனும்னு சொன்னாரா?

பைத்தான்: சரி

நந்தன்: அப்போ தான், ஐயயோ, பைத்தான் புத்தகத்தை நாம விட்டுட்டோமேன்னு தோணுச்சு!

பைத்தான்: எல்லாம் சரி! வந்து என்னைப் பற்றி எதுவுமே சொல்லலியே!

நந்தன்: சொல்லலாம்னு தான் வந்தேன். நீ தான் மூணாவது மொழி, புதுக் காதல்னு சொல்லி என்னைத் திசை திருப்பிட்டே!

பைத்தான்: சரி விடு! இருந்தாலும் மூணாவது மொழி என்ன, சீனியோட தொடர்னு சில புது விசயங்களை எல்லோருக்கும் சொல்லியிருக்கேன்னு மக்கள் உன்னைக் கொஞ்சம் ஏத்துக்குவாங்க!

நந்தன்: மன்னிச்சூ!

பைத்தான்: மன்னிப்பெல்லாம் வேண்டாம்! தொடர்ந்து எழுது! அது போதும்!

நந்தன்: கட்டாயமா! அடுத்த பதிவில் இருந்து அதைத் தொடர்கிறேன்.