பைத்தான் படிக்கலாம் வாங்க – 22 – காதலா? கணக்கா? கனவா?

முந்தைய பதிவில் மதனும் கார்த்திகாவும் கனவிலும் சந்திக்கத் தொடங்கியிருந்தார்கள் என்று பார்த்தோம் அல்லவா?

‘நேற்று இராத்திரி தூக்கத்தில் ஒரு கனவு’ என்றாள் கார்த்திகா. தன்னுடைய கனவு அதிர்ச்சியை வெளிக்காட்டிக் கொள்ளாத மதன், ‘கனவுக்கெல்லாமா காலையிலேயே கூப்பிடுவாய்?’ என்று கேட்டான். ‘கனவில் நாம் இருவரும் சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு இரயில் ஏறுகிறோம்’, அதைச் சொல்லத்தான் கூப்பிட்டேன், என்றாள் கார்த்திகா. ‘நாம் இருவருமா?’ என்று விழி முழுதும் வியப்பை வைத்துக் கொண்டான் மதன். ‘ஆமாங்க மதன்! ஆனால் கன்னியாகுமரி போய்ச் சேரவில்லை’ என்றாள் அவள். ‘என்னங்க சொல்றீங்க’ – இது மதன்.

‘ஆமாம்! முழுசாச் சொல்றேன் கேளுங்க! என்றவள் தொடர்ந்தாள்.

‘நாம் இருவரும் சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு இரயிலில் போகிறோம். ஆனால் ஒரே இரயிலில் கிளம்பவில்லை. நான் நிறைய இடங்களில் நின்று நின்று வரும் சாதாரண (பாசஞ்சர்) வண்டியில் ஏறுகிறேன். நீங்கள் விரைவு (எக்ஸ்பிரஸ்) வண்டியில் ஏறுகிறீர்கள். நான் இடையில் ஒரு ஸ்டேஷனில் இறங்கி, உங்கள் வண்டிக்கு வந்து விடுகிறேன். இப்படித் தனித்தனி வண்டிகளில் ஏறி நாம் இருவரும் கன்னியாகுமரி போகிறோம் என்பது என் அப்பாவுக்குத் தெரிந்து விடுகிறது.’

‘உன் அப்பாவுக்குத் தெரிந்தால் என்ன? நாம் இருவரும் நண்பர்கள் தானே!’ என்று கேட்க நினைத்தான் மதன். ‘கதை நன்றாகப் போய்க் கொண்டிருக்கிறது. நண்பர், அது, இது என்று நாம் ஏன் மாற்ற வேண்டும்’ என்று நினைத்துக் கொண்டே, ‘ஐயையோ! அப்புறம்’ என்றான் மதன்.

‘கடைசி நிமிடத்தில் தான் நம்முடைய திட்டம் அவருக்குத் தெரிந்ததால், அவரால் சென்னையில் வண்டியைப் பிடிக்க முடியவில்லை’. ‘பிடிச்சா மட்டும் என்ன பண்ணியிருப்பாராம்?’ என்று திரும்பவும் கேட்கத் தோன்றியது மதனுக்கு. அடக்கிக் கொண்டு, ‘ஓ’ என்றான்.

‘அப்பாவோட பள்ளிக்கூட நண்பர் சுடலை. அவர் இரயில்வேயில் தான் வேலை செய்றார். அவருக்குப் போன் போட்டு எக்ஸ்பிரஸ் இரயிலும் பாசஞ்சர் இரயிலும் எந்தெந்த இடங்களில் எல்லாம் நிற்கும் என்று கேட்டிருக்கிறார்.’. சுடலை மாமா, ‘பொதுவாச் சொல்றேன். எக்ஸ்பிரஸ் இரயில் இரண்டு இடத்துல நின்னா, பாசஞ்சர் வண்டி அதே இடைவெளியில் அஞ்சு இடத்துல நிக்கும். இது பொதுவான கணக்கு’ன்னு சொல்லியிருக்கார். அப்பா தான், வாத்தியாராச்சே! சுடலை மாமா சொன்ன கணக்கை வச்சு, எத்தனையாவது ஸ்டேஷனில் இரண்டு வண்டியும் நிற்கும்னு கண்டுபிடிச்சு அங்க வந்து என்னைப் பார்க்கிறார்.’

இதுவரை ‘சரி சரி’ என உச் கொட்டிக் கொண்டிருந்த மதனுக்குச் சட்டென்று இங்கேயும் கணக்கா என்று தோன்றியது. ‘அதெப்படி, உங்க அப்பா, நீ இறங்கப் போற ஸ்டேஷனைக் கண்டுபிடிச்சார்’ என்று கேட்டான். ‘அதான் சொன்னேனே! உங்க வண்டி இரண்டு இடத்தில நின்னா, நான் போற வண்டி அஞ்சு இடத்தில நிற்கும்னு, அதை வச்சுத் தான் அப்பா கண்டுபிடிச்சிருக்கார்.’

‘கனவு நல்லதா முடியும்னு பார்த்தா, இப்படிக் கையும் களவுமா மாட்ற மாதிரி முடியுதே’ன்னு கவலைப்பட்டான் மதன். சரி, இருந்தாலும் வருங்கால மாமனார், எப்படி அந்தக் கணக்கைப் போட்டிருப்பார்னு சிந்திக்கத் தொடங்கினான்.

பாசஞ்சர்வண்டி நிற்கும் இடங்கள் = 2,4,6,8,10, இப்படியே..
எக்ஸ்பிரஸ்
வண்டி நிற்கும் இடங்கள் = 5,10,15, இப்படியே..

சட்டென்று பொறி தட்டியது மதனுக்கு. கடகடவென எழுதத் தொடங்கினான்.

பாசஞ்சர்வண்டிநிறுத்தம் = 2
எக்ஸ்பிரஸ்வண்டிநிறுத்தம் = 5
இவை இரண்டுமே நிற்க வேண்டும் என்றால், அந்த நிலையங்கள் – இரண்டின் மடங்காகவும் இருக்க வேண்டும், ஐந்தின் மடங்காகவும் இருக்க வேண்டும்.


பாசஞ்சர்_வண்டி_நிறுத்தம் = 2
எக்ஸ்பிரஸ்_வண்டி_நிறுத்தம் = 5
while True:
if பாசஞ்சர்_வண்டி_நிறுத்தம்%2 == 0 and பாசஞ்சர்_வண்டி_நிறுத்தம்%5 == 0:
print('பொதுவான நிறுத்தம் ', பாசஞ்சர்_வண்டி_நிறுத்தம்)
break
பாசஞ்சர்_வண்டி_நிறுத்தம்+=1
எக்ஸ்பிரஸ்_வண்டி_நிறுத்தம்+=1

சட்டென்று கண்டுபிடித்த மதன், ‘மாமனாருக்குச் சரியான மருமகன் தான்’ என மனத்துக்குள் தன்னைத் தானே பாராட்டிக் கொண்டான்.  கார்த்திகாவிடம் ‘சரி, சரி, இனிமேல் நாம இரயில்ல போக வேண்டாம். ஃபிளைட்டில் போவோம்’ என்றான். ‘

ஏய்! நீ என்ன சொல்ற, நான் சொன்னது வெறும் கனவு தான்’ என்றாள் கார்த்திகா.  ‘ஐயோ! வாய் விட்டு மாட்டிக் கொண்டோமோ’ என்று மதனுக்குத் தோன்றினாலும், இது வரை ‘நீங்க’ என்று கூப்பிட்ட கார்த்திகா, ‘நீ’ என்றது கொஞ்சம் இல்லை, நிறையவே பிடித்திருந்தது.  இருந்தாலும் வருவது எல்லாம் காதல் கனவா, கணிதக் கனவா என்ற ஒரு குழப்பம் அவனுக்குள் இருந்து கொண்டே இருந்தது.

– கி. முத்துராமலிங்கம், பயிலகம், சென்னை

நன்றி: எழுத்தாளர் நக்கீரன். ந

 

 

 

%d bloggers like this: