வருங்காலத்தில் தொழில்நுட்பத் துறையை ஆட்டி வைக்கப் போவது குவாண்டம் கணினிகள் எனும் கருத்து வலுத்து வருகிறது. சாதாரண தர்க்க கணினிகளுக்கும் குவாண்டம் கணினிகளுக்கும் இருக்கக்கூடிய வேறுபாடு தான் என்ன?
வருங்காலத்தில் குவாண்டம் கணினிகள் வருவதால் தொழில்நுட்பம் மாற்றங்கள் எத்தகைய வகையில் இருக்கும். எந்த அளவுக்கு வேகமாக நம்மால் மதிப்பீடுகளை மேற்கொள்ள முடியும். நிரல்களின் வருங்காலம் எப்படி அமையப்போகிறது? இது போன்ற பல கேள்விகளுக்கு விடை தேடுவதற்கு தான் இந்த தொடர்.
ஏற்கனவே கணியம் தளத்தில் நூற்றுக்கணக்கான கட்டுரைகளை எழுதி இருக்கிறேன். எளிய எலக்ட்ரானிக்ஸ் எனும் பெயரில் தொழில்நுட்ப கட்டுரைகள் பலவற்றிலும் எளிய தமிழில் நுட்பங்களை விளக்கி இருக்கிறேன். அதே பாணியில் அனைவருக்கும் புரியும் வகையில் இந்த தொடரும் இனிதே இன்று தொடங்குகிறது.
இருபதாம் நூற்றாண்டின் இயற்பியல் வளர்ச்சியில் பெரும் புரட்சியை மேற்கொண்டது குவாண்டம் இயற்பியல் அனுமானங்கள். அதுவரை அணுவை பகுக்க முடியாது, எலக்ட்ரான்கள் என்று ஒன்று கிடையாது, நியூட்டன் எழுதிய விதிகள் தான் வேதவாக்கு என பயணித்துக் கொண்டிருந்த இயற்பியல் உலகத்திற்கு மாற்று சக்தியை வாரி வழங்கியது குவாண்டம் தொழில்நுட்பம்.
நில்ஸ் போர், மேக்ஸ் பிளாங்க், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் உள்ளிட்ட பல விஞ்ஞானிகளின் வேறு கோட்பாடுகளின் தொகுப்பு பின்னாளில் குவாண்டம் இயற்பியலுக்கு மிகப்பெரிய அடிக்கோலை வழங்கியது. கண்ணால் பார்க்க முடியாத நுண்ணிய பொருட்களின் இயக்கங்களை அனுமானிப்பது தான் குவாண்டம் தொழில்நுட்பத்தின் ஆகச்சிறந்த வடிவம்.
நம்முடைய எளிய எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளை படித்தவர்களுக்கு இந்த வரி ஞாபகம் இருக்கும். “எலக்ட்ரானிக்ஸ் உலகில் இரண்டே வாய்ப்புகள் தான் ஒன்று நீங்கள் ஓட வேண்டும் அல்லது ஓய வேண்டும்” ஆனால் குவாண்டம் உலகில் நீங்கள் இரண்டையும் ஒரே நேரத்தில் செய்ய முடியும். உங்களால் ஓடவும் முடியும், ஓய்ந்திருக்கவும் முடியும். நீங்கள் இந்த பிரபஞ்சத்தின் எங்கோ ஒரு இடத்தில் அமர்ந்து இந்த கட்டுரையை படித்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் அமர்ந்திருக்கும் கிரகமானது ஏதோ ஒரு நட்சத்திரத்தை சுற்றிக் கொண்டிருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. பூமியிலிருந்து இந்த கட்டுரை படிப்பவர்களுக்கு, பூமி நீங்கள் நினைத்துப் பார்ப்பதை விடவும் அதிகமான வேகத்தில் சூரியனை சுற்றி வந்து கொண்டிருக்கிறது. ஆனால், புவி ஈர்ப்பு விசையால் நாம அதை உணர்வதில்லை.
இதுதான் குவாண்டம் அனுமானவியலின் ஆகச்சிறந்த அடிப்படை. இது போலவே குவாண்டம் உலகில் நீங்கள் இருக்கவும் முடியும் இல்லாது இருக்கவும் முடியும். கேட்பதற்கு கொஞ்சம் குழப்பமாகவும், குதர்க்கமாகவும் தோன்றலாம். இதற்கு பெயர் தான் குவாண்டம் சூப்பர் பொசிஷன் என அறியப்படுகிறது. ஆனால் குவாண்டம் கணினி தொழில்நுட்பம் இதிலிருந்து அடிப்படை பெற்றுக் கொண்டு பல்வேறு அடுக்கு தொழில் நுட்பங்களின் மூலம் கட்டமைக்கப்படுகிறது.
வரும் கட்டுரைகள் குவாண்டம் கணினி தொழில்நுட்பத்தின் அடிப்படைகளை பார்ப்போம்.
ஸ்ரீ காளீஸ்வரர் செ,
முதுகலை இயற்பியல் மாணவர்,
இளம் அறிவியல் எழுத்தாளர்.