வழக்கமாக வண்டியின் நிறுத்த மிதியை (brake pedal) அழுத்தினால் என்ன நடக்கிறது
வழக்கமாக முடுக்கிக்கும் (accelerator) நிறுத்த மிதிக்கும் (brake pedal) வலது காலையே பயன்படுத்துகிறோம். நிறுத்த மிதியை அழுத்த வேண்டுமென்றால் முதலில் முடுக்கியிலிருந்து காலை எடுக்க வேண்டும். உடன் எஞ்சினுக்குள் பெட்ரோல் காற்றுக் கலவை செல்வது குறையும். அப்படியே நாம் நிறுத்த மிதியை அழுத்தாமல் இருந்தால், உந்தம் (momentum) விளைவாக வண்டி சிறிது தூரம் ஓடித்தான் நிற்கும். நிறுத்த மிதியை அழுத்தினால் வண்டி துரிதமாக நிற்கும். ஆனால் நிறுத்தக் கட்டை (brake shoes) உருளையை (brake drum) இருக்கிப் பிடித்து உராய்வதால் அவை சூடாகும். உந்தத்தில் இருந்த ஆற்றல் இவ்வாறு சூடாகி வீணாகிறது.
மீளாக்க நிறுத்தல் (Regenerative braking)
இது மின்னூர்திகளிலும் கலப்பின (hybrid) ஊர்திகளிலும் மேற்கண்டவாறு ஆற்றல் வீணாவதைத் தவிர்க்கப் பயன்படுத்தப்படும் ஒரு அமைப்பாகும். இது ஊர்தியின் வேகத்தைக் குறைப்பதற்கு அதன் உந்தத்தைப் (momentum) பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்து மின்கலத்தில் ஏற்றுகிறது. இந்த வேலையைச் செய்ய ஊர்தியின் இழுவை மின்மோட்டாரையே மின்னியற்றியாக (generator) மாற்றுகிறது.
மீளாக்க நிறுத்தல் செயல்முறையின் சில முக்கிய அம்சங்கள்
மீளாக்க நிறுத்தல் என்பது மின்னூர்திகளிலும் கலப்பின ஊர்திகளிலும் மதிப்புமிக்க அம்சமாகும், ஏனெனில் இது ஓடுதூரத்தை நீட்டிக்கவும், ஆற்றல் நுகர்வைக் (energy consumption) குறைக்கவும், மேலும் வழக்கமான நிறுத்தலின் தேவையைக் குறைத்து நிறுத்தக்கட்டைகளின் (brake shoes) தேய்மானத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
மீளாக்க நிறுத்தல் எவ்வாறு மின்கலத்தில் மின்னேற்றுகிறது?
மின்கலத்திலிருந்து மின் சக்தியைப் பெற்று மோட்டார் அதை முறுக்குவிசையாக மாற்றுகிறது. அப்படிச் செய்யும்போது மின்கலத்தை எதிர்க்கும் மின்னியிக்கவிசையை (Counter Electromotive Force – CEMF) உருவாக்குகிறது.
ஒரு மின்னூர்தி மலையின் மீது ஏறி உச்சியை அடைந்து பின்னர் கீழ்நோக்கி ஓடுகிறது என்று வைத்துக்கொள்வோம். அது மேல்நோக்கிச் செல்லும் போது புவிஈர்ப்பு விசையை விஞ்ச மின்னோட்டம் மோட்டார் வழியாக முறுக்குவிசையை வழங்குகிறது. வண்டி உச்சியைக் கடக்கும்போது, மோட்டாரிடமிருந்து முறுக்குவிசை தேவைப்படாததால், மின்னோட்டம் குறைந்து சுழியமாகிறது. மின்னூர்தி கீழ்நோக்கி உருளத் தொடங்கியவுடன் அதன் சக்கரங்களுடன் இணைந்துள்ள மோட்டார் மேலும் மேலும் வேகமாக ஓடவேண்டி வருகிறது. எனவே CEMF மேலும் மேலும் அதிகரிக்கிறது. மோட்டாரின் CEMF மின்கலத்தை மீறும் அளவுக்கு வந்தவுடன் மோட்டார் ஒரு மின்னியற்றியாக (generator) மாறுகிறது. உடன் மின்னோட்டம் அதன் திசையை மாற்றி மின்கலத்தில் மின்னேற்றம் செய்கிறது.
மீளாக்க நிறுத்தல் பற்றி நினைவில் கொள்ளவேண்டிய சில முக்கியக் குறிப்புகள்
கார்களில் பொதுவாக உருளை நிறுத்தங்கள் (drum brakes) முன் சக்கரங்களிலும், பின் சக்கரங்களிலும் இருக்கும். இருசக்கர ஊர்திகளில் பின் சக்கரத்தில் உருளை நிறுத்தமும், முன் சக்கரத்தில் வட்டு நிறுத்தமும் (disc brake) இருக்கும். மீளாக்க நிறுத்தல் ஓட்டும் சக்கரங்களில் (drive wheels) மட்டுமே வேலை செய்கிறது. பாதுகாப்பிற்காக, அனைத்து சக்கரங்களையும் நிறுத்தும் திறன் தேவை.
மின்கலம் முழுவதுமாக மின்னேற்றம் செய்யப்பட்டிருந்தால், மிகை மின்னேற்றத்தைத் தவிர்க்க, மீளாக்க நிறுத்தல் வேலை செய்யாது. அதாவது முடுக்கியிலிருந்து காலை எடுத்தாலும் வண்டியின் வேகம் மெதுவாகத்தான் குறையும்.
ஆற்றலை வீணாக்காமலிருக்க ஓட்டுநருக்குப் பரிந்துரைகள்
நீங்கள் எங்கு நிறுத்த வேண்டுமோ அதற்கு சிறிது முன்னதாகவே திட்டமிட்டு நிறுத்த மிதியைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக முடுக்கி மிதியிலிருந்து காலை எடுக்கவும். படிப்படியாக வேகம் குறையும். வாகனம் நகரும் போதெல்லாம், நீங்கள் நிறுத்த மிதியை அழுத்தாமல் இருந்தால், மீளாக்க நிறுத்தல் வாகனத்தை மெதுவாக்குகிறது. உபரி ஆற்றலை HV மின்கலத்தில் மீண்டும் ஏற்றுகிறது.
நன்றி
இத்தொடரில் அடுத்த கட்டுரை: மின்னூர்திப் பாதுகாப்பு
AIS 156 சான்றிதழ். மின்சாரம் சார்ந்த பாதுகாப்புகள். மின்னேற்றம் தொடர்பான அம்சங்கள். மின்கலம் செயல்திறன். பாதுகாப்பில் பயனரின் பங்கு. மின்னூர்திகள் ஏன் சில சமயம் தீப்பிடிக்கின்றன? AIS 048 மின்னூர்திப் பாதுகாப்புத் தரநிலை.