சென்னை நந்தனம் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றும் முனைவர் கை. சங்கர், கணியம் அறக்கட்டளை நிறுவனர்கள் கலீல் ஜாகீர் (தமிழ் ஆன்டிராய்டு செயலி உருவாக்குநர்), சீனிவாசன் ஆகியோர் இணைந்து, பல்கலைக்கழக மானியக் குழு நிதியுதவியுடன் சங்க இலக்கியத்திற்கான குறுஞ்செயலி ஒன்றை உருவாக்கியுள்ளனர். இது தமிழ் ஆய்வாளர்களுக்குப் பெரிதும் பயன்படும் செயலி ஆகும்.
”இது தமிழ் ஆய்வாளர்களுக்கு மிகுந்த பயனுடையதாக இருக்கும். இந்தக் குறுஞ்செயலியின் மூலம் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு, தொல்காப்பியம், சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய செவ்விலக்கியங்களுக்கான பதிப்புகளை மிக எளிதாகத் தரவிறக்கம் செய்து படிக்கலாம் (1812 முதல் 1950 வரை வெளிவந்த பதிப்புகள் மட்டும்). ஆறுமுக நாவலர், சி.வை.தாமோதரம்பிள்ளை, உ.வே.சாமிநாதையர் போன்ற மிகச் சிறந்த ஆளுமைகளின் பதிப்புகளை எளிதாகக் கொண்டுசெல்லும் முயற்சிகளில் ஒன்றாக இப்பணி அமைந்திருக்கிறது. உதாரணத்திற்கு உ.வே.சா பதிப்பித்த புறநானூறு வேண்டுமென்றால் இக்குறுஞ்செயலியின் மூலம் பதிவிறக்கம் செய்து படிக்க முடியும்.
மேலும், இக்குறுஞ்செயலி குறித்துத் திட்டப்பணி முதன்மை ஆய்வாளர் முனைவர் கை. சங்கர் கூறியதாவது: “தமிழ் ஆய்வுப்புலம் வளரவேண்டும் என்றால் அதற்கான ஆய்வுமூலங்கள் பரலாக்கப்படவேண்டும். ஒருசில நூலகங்களில் பாதுகாக்கப்படும் நூல்கள் ஒருசில ஆய்வாளர்கள் ஆய்வு செய்வதற்கு மட்டுமே வசதிவாய்ப்புகளை உருவாக்கித் தருகின்றன. தமிழ் ஆய்வுப்பணியை மேற்கொள்வோர் பலர் ஏழை எளிய பின்னணியிலிருந்து வருகிறார்கள். அவர்கள் நூல்களுக்காகச் சென்னை, புதுக்கோட்டை, கும்பகோணம் என அலைந்து திரிவது இனிக் குறையும். இணையத்தின் மூலம் அனைத்தும் பரவலாகி வருவது வரவேற்புக்குரியதாகும். சங்க இலக்கியக் குறுஞ்செயலி உலகெங்கும் இருக்கும் தமிழ் ஆர்வலர்களுக்குப் பேருதவியாக இருக்கும். இங்கு பதிவேற்றாதுவிட்ட அரிய சங்க இலக்கியப் பதிப்புகளை வைத்திருப்போர் sankarthirukkural@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். அவை உடனுக்குடன் பதிவேற்றப்படும்” என்றார்.
கணியம் அறக்கட்டளை நிறுவனர் கலீல் ஜாகீர் இது குறித்து கூறியதாவது “சங்க இலக்கியம் செயலியை ஆன்டிராய்டு கைபேசிகளில் பிளே ஸ்டோரில் சென்று பதிவிறக்கிக்கொண்டு உடனடியாகப் பயன்படுத்தலாம். பல்கலைக்கழக நிதியுதவியுடன் செய்வதால் விளம்பரத் தொந்தரவு இருக்காது. பாதுகாப்பானது. ஒருமுறை தரவிறக்கம் செய்துவிட்டால் போதும். பிறகு தரவிறக்கம் செய்யப்பட்ட நூல்களை எல்லாம் வேண்டிய நேரத்தில் எடுத்துப் படிக்கும் வசதி குறுஞ்செயலியில் இருக்கிறது” என்று அவர் கூறினார்.
மொபைல் கருவிகளில் படிப்படதற்கேற்ப PDF கோப்புகள், அளவில் குறுக்கப்பட்டுள்ளன. மேலும், PDF கோப்புகளின் அளவு 10 MB முதல் 200 MB வரை கூட இருக்கும். எனவே, அதற்கேற்ற இணைய இணைப்புடன் செயலியைப் பயன்படுத்துங்கள்.
செயலியைப் பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்பு bit.ly/SangaElakkiyamApp
செயலியின் மூல நிரல் இங்கே – github.com/KaniyamFoundation/SangaIlakkiyangal
இன்றைய தமிழ் இந்து நாளிதழில் இந்த செய்தி வெளியாகி உள்ளது.