மின்தடையும் அது குறித்த தகவல் துணுக்குகளும்| எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி-2

கடந்த கட்டுரையில் மின் தேக்கி குறித்து பார்த்திருந்தோம்.

அந்த கட்டுரையை தற்போது வரை நீங்கள் படிக்கவில்லை எனில், இந்த கட்டுரை படித்து முடித்துவிட்டு அதையும் பார்வையிடவும்.

சரி! இன்றைய தலைப்பிற்கு உள்ளாக வருவோம். மின்தடை என்றால் என்ன? பெயரிலேயே இருக்கிறதே! மின்சாரத்தை தடை செய்யக்கூடிய பொருள் என்று பதில் அளித்தால் அது சரிதான்.

சரி! எத்தகைய பொருட்கள் மின்சாரத்தை தடை செய்யும்? மின்சாரத்தை தடை செய்ய வேண்டும் என்றால் மின்சாரத்தை கடத்தாத பொருட்களை தானே பயன்படுத்த வேண்டும் என்று உங்களுக்குள் ஒரு சிந்தனை வரலாம்.

உண்மையில், பொதுவாக நாம் பார்க்கக் கூடிய மின்தடைகள் பெரும்பாலானது, கரிம மூலக்கூறுகளை(carbon composition) அடிப்படையாகக் கொண்டது.

(பிறவகையில் மின்தடைகள் இருந்தாலும், நாம் பொதுவாக பார்க்க கூடிய பல வண்ண நிறங்களில் கிடைக்கக்கூடிய மின்தடைகள் அனைத்தும் கரிம அடிப்படையிலானது. பிற அடிப்படையிலான மின்தடைகள் பல வகைகளில் பிரிக்கப்படுகின்றன. தேவைப்படும் பட்சத்தில் அது குறித்து கேளுங்கள்! அது குறித்து ஒரு கட்டுரை எழுத முயற்சி செய்கிறேன்)

உண்மையில் மின்தடை என்பது ஒரு சுற்றில் பாயும் மின்னோட்டத்தின் அளவை கட்டுப்படுத்துகிறது. அதாவது ஆம்பியர் அளவை கட்டுப்படுத்துகிறது.

நாம் பள்ளியில் ஓம் விதி குறித்து படித்து இருந்திருப்போம்,

அந்த விதியின் படி

V = IR

V- மின்னழுத்த வேறுபாடு

I – மின்னோட்டம்

R – மின்தடை

ஒரு மின்சுற்றின் குறுக்கே உள்ள மின்னழுத்த வேறுபாடு என்பது “அந்த மின்சுற்றில் உள்ள மின்தடைக்கும் மற்றும் அந்த சுற்றில் பாயும் மின்சாரத்திற்கும் ஆன பெருக்கல் பலன் என வரையறுக்கப்படுகிறது”.

அதன்படி பார்க்கின்ற பொழுது, ஒரு மின்சுற்றில் மின்தடை பயன்படுத்தப்படும் போது அதைப் பொறுத்து மின்னழுத்த வேறுபாடும் அதிகரிக்கிறது.

ஒரு எளிமையான எடுத்துக்காட்டாக கூற வேண்டும் எனில், மின்னூட்டம் பெற்ற துகள்களை கார்கள் என்று வைத்துக் கொள்வோம்.

அவைகள் செல்ல வேண்டிய மின்சுற்றை சாலைகள் என வைத்துக் கொள்வோம்.

மின்தடைகளை, சாலையில் உள்ள குண்டு குழிகள் என்று வைத்துக் கொள்வோம்.

மின்னழுத்த வேறுபாட்டை வாகனங்கள் வெளியிட வேண்டிய ஆற்றலின் அளவு என வைத்துக்கொள்வோம்.

இவ்வாறாக பார்க்கும் போது ஒரு சுற்றில் மின்சாரம் பாய்வதை கட்டுப்படுத்துவதில் மின்தடை பெரும் பங்கு வைக்கிறது.

எப்படி சாலையில் குண்டு குழிகள் இருந்தால் வாகனங்களால் வேகமாக செல்ல முடியாதோ! அது போல மின்சுற்றில் மின்தடைகள் இணைக்கும்போது மின்சாரத்தின் வேகம் குறைகிறது.

மாறாக, மின்சுற்றின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மின்னழுத்த ஆற்றல் அதாவது மின்னழுத்த வேறுபாடு ஏற்படுகிறது.

மேலும் சில மின்சுற்றுகளில், மின்னழுத்த வேறுபாடை பிரித்துக் கொடுக்கும்(potential divider)பணியை மின்தடைகள் செய்கின்றன.

நான் முதலிலேயே, பொதுவாக பயன்படுத்தப்படும் மின்தடைகள் கரிம பொருட்களால் தயாரிக்கப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தேன்.

இதை விலையில் மிகவும் மலிவானவை மற்றும் சிறப்பாக செயல்பட கூடியவை.

நிறக் குறியீடு பயன்படுத்தி மின்தடையின் மதிப்பையும் நம்மால் எளிமையாக அறிந்து கொள்ள முடியும்

இவை பொதுவாக சந்தையில் கரிம மின்தடைகள் என்னும் பெயரில் கிடைக்கின்றன.

மின்தடைகளின், மற்றும் ஒரு எளிய பயன்பாடு நாம் வீட்டில் பயன்படுத்தும் மின்விசிறிகளின் வேகத்தை கட்டுப்படுத்துவதற்கு மின்தடைகளை பெரும்பாலும்(regulator) பயன்படுத்துகிறோம்.

இதன் மூலம், வழங்கப்படும் மின்சாரத்தின் அளவு கட்டுப்படுத்தப்பட்டு மின்விசிறியின் வேகம் கட்டுப்படுத்தப்படுகிறது.

மேலும், மின்சார அடுப்புகள் மற்றும் மின்சார சூடேற்றிகள் போன்றவற்றிலும் மின்தடைகளை பயன்படுத்தப்படுகின்றன.

அவற்றின் வழியாக அதிகப்படியான மின்சாரம் பாயும் போது, அதை தாங்கிக் கொண்டு வெப்ப ஆற்றலாக விடுகின்றன. இந்த வெப்ப ஆற்றலை பயன்படுத்தியே மின்சார சூடேற்றிகள் இயங்குகின்றன.

மேலும் கட்டுமான துறையில் கூட, மின் தடை அடிப்படையிலான அதிர்வு தாங்கிகள்(resistance based vibration detectors) பயன்படுத்தப்படுகின்றன.

இவ்வாறு பொருத்தப்படும் கருவிகள், குறிப்பிட்ட ஒரு அதிர்வை சந்திக்கும் போது! அதன் மின்தடை மதிப்பு மாற்றம் அடைகிறது. அதை வைத்து, கட்டுமானங்களின் நீண்ட கால தன்மை குறித்து அறிய முடிகிறது.

உண்மையில் நாம் பயன்படுத்தக்கூடிய தாமிர கம்பிகளுக்கு கூட ஒரு குறிப்பிட்ட மின்தடை மதிப்பு இருக்கிறது. ஆனால் அது குறித்துப் பெரிதாக யாரும் கண்டு கொள்வதில்லை. 

பெரும்பாலும் மின்தடைகளில் ஆற்றல் வெப்பமாக வெளியிடப்படுகிறது. சில இடங்களில் பாதுகாப்பிற்காக கூட மின்தடைகளை பயன்படுத்த முடியும்.

இத்தகைய வெப்ப இழப்பு ஏற்படுவதால் தான், நாம் தயாரிக்க கூடிய அனைத்து மின் ஆற்றலும் நம்மால் முழுமையாக பயன்படுத்த முடியாமல் போகிறது(பிற காரணங்கள் இருப்பினும் இதுவும் ஒரு முக்கியமான காரணம்).

மேலும், மின்தடை என்பது ஒரு கடத்தியின்! கடத்துதிறனுக்கு எதிர்மறை தொடர்பு உடையது.

கடத்துத்திறன் = 1/மின்தடை

வெப்பநிலை அதிகரிக்கும் போது பெரும்பாலான தாமிர கம்பிகளில் மின்தடையும் அதிகரிக்கிறது.

இதன் காரணமாகத்தான், வெயில் காலத்தில் நம்முடைய வீடுகளில் அதிகப்படியான மின்சார கட்டணங்கள் வருவதற்கு ஒரு குறிப்பிட்ட காரணமாக அமைகிறது.

மேலும் இத்தகைய அக மின்தடையின் காரணமாகத்தான், வெயில் காலங்களில் மின்னணு பொருட்களின் செயல்திறனும்(low output compared to cold climates) குறைவாக இருக்கிறது

எது எப்படி இருந்தாலும்,இன்றைக்கு மின்தடைகளை பயன்படுத்தாத மின்சாதன பொருட்களே இல்லை என்று கூறலாம்! அந்த அளவுக்கு மின்தடைகளின் பயன்பாடு மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.

இந்தக் கட்டுரையில் மின்தடைகள் குறித்து மிகவும் அடிப்படையான அறிமுகம் குறித்து மட்டுமே நான் எழுதி இருக்கிறேன். இது குறித்து எழுத வேண்டும் என்றால் மின்தடை குறித்து நூற்றுக்கணக்கில் கட்டுரைகள் எழுதலாம்!

எனக்குத் தெரிந்த அடிப்படை அறிவை இன்று உங்களோடு பகிர்ந்து கொண்டிருக்கிறேன் மேற்படி இந்த கட்டுரை குறித்து உங்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் இருப்பின் தயக்கமின்றி என்னுடைய மின் மடல் முகவரிக்கு மடல் இயற்றவும். தங்களுடைய கருத்துக்கள் எப்போதும் வரவேற்கப்படுகிறது.

கட்டுரையாளர்:-

ஸ்ரீ காளீஸ்வரர் செ,

இளங்கலை இயற்பியல் மாணவர்,

இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,

கணியம் அறக்கட்டளை.

மின் மடல் முகவரி: srikaleeswarar@myyahoo.com

%d bloggers like this: