எந்திரனின் மூளை என்று சொல்லக்கூடிய கட்டுப்பாட்டு மையமாக செயல் புரிய நமக்கு ஒரு நுண்கட்டுப்படுத்தி அல்லது கணினி தேவை. நகரும் எந்திரன் என்றால் இது கையடக்கமாக இருப்பது அவசியம். மேலும் முக்கியமாக துணைக்கருவிகள், திறந்த மூல நிரல் முன்மாதிரிகள், கேள்வி பதில் மன்றங்கள் இருந்தால் நாம் செய்ய முயலும் வேலைகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
அர்டுயினோ (Arduino) போன்ற நுண்கட்டுப்படுத்திகளும் மற்றும் ராஸ்பெரி பை (Raspberry Pi) போன்ற கையடக்கக் கணினிகளும் இத்தேவைகளையெல்லாம் பூர்த்தி செய்யக் கூடியவை.
ஏன் அர்டுயினோ?
நுண்கட்டுப்படுத்திகள் ஒரு நேரத்தில் ஒரே வேலையைச் செய்யக்கூடியவை. ஆகவே உங்கள் குறிக்கோள் ஒரு எளிய வேலையைத் திரும்பத் திரும்பச் செய்ய வேண்டுமென்றால் நுண்கட்டுப்படுத்தியே போதும்.
சந்தையில் பல நுண் கட்டுப்படுத்திகள் இருக்கும்போது நாம் ஏன் அர்டுயினோவைப் பரிந்துரைக்கிறோம்? முதலாவதாக இதில் என்னென்ன மின்னணுவியல் பாகங்களைப் பயன்படுத்தியுள்ளார்கள் என்ற விவரக்குறிப்புகளை முழுவதுமாக வெளியிட்டுள்ளார்கள். அடுத்து இதற்கான மென்பொருட்களும் திறந்த மூலமாகக் கிடைக்கின்றன. மற்ற நுண் கட்டுப்படுத்திகளுக்கு சில்லு மொழியில் (assembly language) நிரல் எழுத வேண்டும். இது மிகவும் கடினமானது. அர்டுயினோவில் நமக்கு மிகவும் பரிச்சயமான C, C++ மற்றும் ஜாவா போன்ற மொழிகளில் நிரல் எழுதலாம். மேலும் இதைக் கணினியுடன் இணைத்துத் தேவையான மாற்றங்கள் செய்வதும் எளிது.
ஏன் ராஸ்பெரி பை?
மறுபுறம், ராஸ்பெரி பை பொதுப் பயன்பாட்டுக்கான ஒரு சிறிய கணினி ஆகும். இது லினக்ஸ் இயங்குதளத்துடன் வருகிறது, ஆகவே ஒரே நேரத்தில் பல நிரல்களை இயக்கும் திறன் இதற்கு உண்டு. நீங்கள் சிக்கலான வேலைகளைச் செய்ய வேண்டுமென்றால் ஒரே நேரத்தில் பல நிரல்களை ஓட்ட வேண்டியிருக்கும். இதுபோன்ற வேலைகளைச் செய்ய ராஸ்பெரி பை போன்ற கணினியே தேவைப்படும்.
குறைந்த செலவில் ஷான்க்பாட் (Shonkbot)
ஒரு குறுந்தகட்டில் இரு சக்கரங்களைப் பொருத்தி வண்டியாகப் பயன்படுத்தும் மிகச் சிக்கனமான எந்திரன் இது. வரைபேனாவைப் பொருத்தி நிரல் மூலம் தரையில் காகிதத்தில் எழுதலாம்.
இது அர்டுயினோ நானோவைப் பயன்படுத்திக் கட்டப்பட்டது. இரு படிநிலை மின்பொறிகள் (stepper motors) அவற்றின் இயக்கிகளுடன், 3 AA மின்கலங்கள் ஆகியவைதான் முக்கிய பாகங்கள். ஒரு அகச்சிவப்பு எல்.இ.டி, ஒளி டிரான்சிஸ்டர் மற்றும் ஒரு ஒலிப்பியைச் சேர்த்தால், இது பொருட்களை கண்டுபிடிக்கவும் அல்லது மற்ற ஷான்க்பாட்களுடன் தொடர்புகொள்ளவும் முடியுமாறு மேம்பாடு செய்யலாம்.
நன்றி தெரிவிப்புகள்
இத்தொடரில் அடுத்த கட்டுரை: லெகோ பூஸ்ட் (Lego Boost)
நிரல் எழுதக் கற்றுக்கொள்வது இன்றைய தலைமுறைச் சிறுவர்களுக்கு அவசியம் – லெகோ பூஸ்ட்டை இயக்கும் திறந்த மூல நிரல்கள்