ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம், மயிலாப்பூர், சென்னை
சென்னை மயிலாப்பூரில் விவேகானந்தா கல்லூரி வளாகத்தை ஒட்டி உள்ள ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம், சுமார் 650 அனாதை மற்றும் ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வி, உணவு மற்றும் தங்குமிடத்துடன் சேவை செய்து வருவது பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம். இதன் செயலாளர் சுவாமி சத்யஞானானந்தா.
நடமாடும் எந்திரனியல் ஆய்வகம்
அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழைக் குழந்தைகளுக்கு எந்திரனியல் (Robotics), பொருட்களின் இணையம் (IoT) போன்ற தொழில்நுட்பங்களை அணுகும் வாய்ப்பு மிக அரிது. ஆகவே இம்மாதிரி தொழில்நுட்பங்களில் ஏற்படும் பரபரப்பான முன்னேற்றங்கள் அவர்களின் கைக்கெட்டாது போகிறது. எச்.சி.எல் அறக்கட்டளையின் (HCL Foundation) ரூ.63.50 லட்சம் நிதியுதவியுடன் இந்த மாணவர் இல்லம் எந்திரனியல் பயிற்சியை இவர்கள் வீட்டு வாசலுக்குக் கொண்டு செல்லும் ஒரு லட்சியத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. எந்திரனியல், பொருட்களின் இணையம் ஆகிய பயிற்சி சாதனங்கள் கொண்ட கருவிப் பெட்டிகளுடன் தனிச்சிறப்பு வாய்ந்த பேருந்தை நடமாடும் எந்திரனியல் ஆய்வகமாகத் (Mobile Robotics Lab) தயார் செய்துள்ளார்கள். இத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் சகோ. சந்திரசேகரன்.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 21 மணி நேரப் பயிற்சி வகுப்பு
சென்னை மற்றும் சுற்றுவட்டாரங்களில் உள்ள அரசுப்பள்ளிகளில் 7 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்களால் 21 மணி நேரப் பயிற்சி கொடுக்கப்படுகிறது. இந்த 21 மணி நேரப் பயிற்சி வகுப்பில் இவர்களுக்கு எந்திரனியல், பொருட்களின் இணையம் போன்ற தொழில்நுட்பங்களின் அடிப்படைகள் தெரியவரும். சாதனங்கள் கொண்ட கருவிப் பெட்டியின் உதவியுடன் பயிற்சியளிப்பதால் மாணவர்கள் சில செயல்முறைகளைத் தங்கள் கைகளால் செய்து பார்க்க இயல்கிறது. படிப்பு முடிந்ததும், பயிற்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
எளிய தமிழில் Robotics நூலை அச்சிட்டு மாணவர்களுக்கு இலவசமாக அளிக்கிறார்கள்
“எளிய தமிழில் Robotics” நூலை வழுவழுப்பான அட்டையும் வண்ணப் படங்களுமாக மிக அழகாக அச்சிட்டு வெளியிட்டுள்ளார்கள். பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு இந்நூலின் பிரதியை பாடப்பொருளாக (course material) இலவசமாக அளிக்கிறார்கள்.
இது முதலில் கணியம் இணைய இதழில் வலைப்பதிவு கட்டுரைத் தொடராக வெளிவந்தது. பின்னர் கணியம் அறக்கட்டளையின் ஈடுபாடு கொண்ட தன்னார்வலர்களின் அயராத முயற்சியால் மின்னூலாக வெளியிடப்பட்டது.
கணியம் மற்றும் FreeTamilEbooks.com வெளியீட்டாளர் திரு. த.சீனிவாசன், அழகிய அட்டைப்படம் வடிவமைத்த திரு. லெனின் குருசாமி மற்றும் மின்னூலாக்கம் செய்த Ms. சீ. ராஜேஸ்வரிக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்!
இம்மின்னூலை இந்த இணைப்பில் பதிவிறக்கம் செய்யலாம்.
இரா. அசோகன்