திறந்த நிலை, கட்டற்ற தொழில்நுட்பங்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சிக்கல்!

தற்காலத்தில் பெரும்பாலும் கட்டற்றத் தரவுகள் குறித்து, பெரும்பாலான பொதுஜன மக்களுக்கு தெரிந்திருப்பதில்லை.

அவ்வாறே தெரிந்திருந்தாலும், அது குறித்த போதிய விழிப்புணர்வு இல்லை.

துறைசார் அறிவு கொண்ட வல்லுநர்கள் மட்டுமே கட்டற்ற தொழில்நுட்பங்களை சரியாக பயன்படுத்துகின்றனர்.

இதன் காரணமாக, பல கனவுகளோடு எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி உருவாக்கப்படும் இத்தகைய கட்டற்ற படைப்புகள் சில மாதங்களிலேயே பராமரிப்பு இன்றி போகின்றன.

மேற்கொண்டு அவற்றை பராமரித்து முறையான புதிய வெளியீடுகளை வழங்க, போதியமான நிதி இருப்பதில்லை.

இந்த வாரம் நான் its foss தளத்தில் திரு.அங்குஸ் தாஸ் எழுதிய கட்டுரையை படித்திருந்தேன்.

அந்தக் கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்களின்படி, சுமார் 60% இருக்கும் அதிகமான கட்டற்ற தொழில்நுட்பங்களுக்கு போதியமான நிதி இருப்பதில்லை.

அதாவது 60% கட்டற்ற நிராலக்க வல்லுனர்களுக்கு, எவ்வித ஊதியமும் கிடைப்பதில்லை.

தங்களுடைய பொழுதுபோக்கிற்காக அவர்கள் செயலிகளை தயார் செய்தாலும் கூட, எவ்வித லாபமும் இன்றி அதை தொடர யாரும் விரும்ப மாட்டார்கள்.

குறைந்தபட்சம் சமூகத்திலிருந்து ஒரு அங்கீகாரம் கிடைத்தால் ஆவது, அவர்களும் தங்களது பணியை தொடர்வார்கள்.

மேலும், ஒரு செயலியை உருவாக்குவது ஒரு தனிப்பட்ட நிரலாக்க வல்லுனரால் மட்டும் செய்து முடிக்ககூடிய காரியம் அல்ல.

ஒருவேளை அந்த நிரலில் ஏதேனும் பிழைகள் ஏற்பட்டால், அதை திருத்துவதற்கு போதியமான நிபுணர் வட்டம் இருக்க வேண்டும்.

அந்தக் கட்டுரையில் நான் படித்த மற்றுமொரு தகவல் என்னை மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாகியது.

வெறும் 11% கட்டற்ற செயலிகள் மட்டுமே முறையாக பராமரிக்கப்படுகின்றன.

உதாரணமாக, நமது கணியம் இணையதளத்தை எடுத்துக் கொள்வோம்.கட்டற்ற நோக்கத்தோடு தொடங்கப்பட்ட கணியம் போன்ற எத்தனையோ இணையதளங்கள், தற்பொழுது செயல்பாட்டில் இல்லாமல் இருப்பது கவனிக்க முடிகிறது.

நம்முடைய கணியம் இணையதளம் கூட நன்கொடைகள் மற்றும் எதிர்பார்ப்பற்ற பங்களிப்பாளர்கள் அடிப்படையில் தான் தொடர்ந்து சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது.

அனைத்து தொழில்நுட்ப வல்லுனர்களுக்கும், நிரலாக்க கலைஞர்களுக்கும் கட்டற்ற இணையதளங்களுக்கும் போதியமான நன்கொடைகள் கிடைப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.

நான் ஒவ்வொரு முறை விக்கிபீடியா இணையதளத்திற்குள் செல்லும்போதும், குறைந்தபட்சம் 25 ரூபாயாவது நன்கொடை செய்யுங்கள் எனும் கோரிக்கை என்னிடம் வருகிறது.

என்னால் இயன்ற தொகையை மாதம் தோறும்  கட்டற்ற கடலுக்கு(wikipedia) நன்கொடையாக வழங்கி வருகிறேன்.

நம்மில் அனைவரும் தரவுகளுக்காக விக்கிபீடியாவை பயன்படுத்துகிறோம். ஆனால், அதற்கு நன்கொடை வழங்குவது என்றால் ஏன்? வழங்க வேண்டும் எனும் எண்ணம் நமக்குள் தோன்றுகிறது.

அடிப்படையில் நமக்காக எவ்வித லாப நோக்கமும் இன்றி நடத்தப்படும் ஒரு இணையதளத்திற்கு, நம்மால் இயன்ற பணத்தை கொடையாக வழங்குவதில் எந்த தவறும் இல்லை.

இலவசம் என்கிற பெயரில் நிமிடத்திற்கு,நிமிடம் விளம்பரங்களை பார்க்க வைக்கும் பல நிறுவனங்களோடு ஒப்பிடும்போது மரியாதையாக நன்கொடை கேட்கும் நிறுவனங்கள் குறைந்தவை அல்ல.

இலவசம் என்கிற பெயரில் நம்முடைய தரவுகளை திருடக்கூடிய எத்தனையோ நிறுவனங்கள் இருக்கின்றன.

ஆனால், எவ்வித எதிர்பார்ப்புமின்றி கட்டற்ற இயங்குதளமாக “லினக்ஸ்” 31 ஆண்டுகள் சிறப்பாக இயங்கி வருகிறது.

சிறந்த அலுவலகப் பணிகளை செய்யும் செயலியாக libre office ஆண்டாண்டு காலமாக தொடர்ந்து வருகிறது.

ஆனால், நம்மில் எத்தனை பேர் எத்தகைய கட்டற்ற செயலிகளுக்கு நன்கொடை வழங்குகிறோம் என்று நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டிய தருணம் இது.

நன்கொடை என்றால் பணமாக வழங்குவது மட்டுமல்ல! இத்தகைய செயலிகளுக்கு உங்களுடைய நிரலாக்க திறமையை சில நிமிடங்கள் பரிசளிப்பதும் கூட சிறந்த நன்கொடையாக அமையும்.

உதாரணமாக, எத்தனையோ தன்னலமற்ற உள்ளங்கள் ஆயிரக்கணக்கான கட்டுரைகளை விக்கிப்பீடியாவில் எழுதுகின்றனர்.

நமது கணியம் இணையதளத்தில் கூட சாத்திரத்தான், ஸ்ரீ பாலசுப்பிரமணியம் உட்பட சில விக்கிபீடியா நாயகர்கள் குறித்து பார்த்திருந்தோம்.

நமக்கு உதவக்கூடிய எவ்வித தன்னல நோக்கமற்ற, இந்த கட்டற்ற தொழில்நுட்பங்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்.

உங்களுடைய திறமையை சில வினாடிகள் பரிசளியுங்கள்! உங்களது திறமை பிறரது வாழ்வை மேலும் சிறப்பு ஆக்கும்.

ஒற்றுமையாக செயல்படுவோம்! உலகின் ஆகச்சிறந்த கட்டற்ற தொழில்நுட்ப சமூகத்தை உருவாக்குவோம்!

கட்டுரையாளர்:-

ஸ்ரீ காளீஸ்வரர் செ,

இளங்கலை இயற்பியல் மாணவர்,

(தென் திருவிதாங்கூர் இந்து கல்லூரி,

நாகர்கோவில் – 02)

இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,

கணியம் அறக்கட்டளை.

மின்மடல் முகவரி: srikaleeswarar@myyahoo.com

Blog: ssktamil.wordpress.com

%d bloggers like this: