ஒலிபெருக்கிக்கு பின்னால் இருக்கக்கூடிய அறிவியல் என்ன? | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 8

தொடர்ந்து கடந்த சில கட்டுரைகளாக, டையோடுகள்,ட்ரான்சிஸ்டர்,மின்தடை உள்ளிட்ட அடிப்படை தகவல்கள் குறித்து எலக்ட்ரானிக்ஸ் பகுதியில் பேசி இருந்தோம்.

ஆனால், இந்தக் கட்டுரையில் நாம் பொது வாழ்வில் அனுதினமும் காணக்கூடிய,  ஒலிபெருக்கிகளில்(loud speakers)புதைந்திருக்க கூடிய அறிவியலை எளிமையாக அறிந்து கொள்ளலாம்.

அதற்கு முன்பாக, என்னுடைய எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளை நீங்கள் படிக்க விரும்பினால்! கீழே வழங்கப்பட்டுள்ள பட்டனை பயன்படுத்தி பார்வையிடவும்.

விழா காலங்கள் என்றாலே, ஒலிபெருக்கிகள் ( loud speakers) இல்லாமல் நிறைவடையாது. நீங்கள் பென்டிரைவ் அல்லது ப்ளூடூத் இல் இருந்து பாடல்களைப் பாட செய்யும்போது,  ஒலிபெருக்கியின் மூலமாக அதன் ஒலி அளவு பன்மடங்கு அதிகரிக்கிறது.

அதற்காக amplifier அதாவது ஒலி வீச்சு பெருக்கி எனும் கருவியை பயன்படுத்துகிறோம். ஆனால், அதற்குப் பின்னாலும் ட்ரான்சிஸ்டர்  தான் பயன்படுத்தப்படுகிறது.

முதலில், அடிப்படையான ஒலிவாங்கி அதாவது microphone இல் இருந்து தொடங்குவோம்.

ஒலிவாங்கி என்பது, நீங்கள் பேசக்கூடிய ஒலி அலைகளை மின்சார அலைகளாக(sound waves to electric signals) மாற்றக்கூடியது. ஒலி வாங்கி அமைப்புக்குள் ஒரு சக்தி வாய்ந்த காந்தம் இருக்கும். நீங்கள் பேசக்கூடிய செவி உணர் ஒலி அலைகள் இந்த ஒலிவாங்கியில் மின்சார அலைகளாக மாற்றப்படுகின்றன.

இவ்வாறு மின்சார அலைகளாக மாற்றப்படும் ஒளி அலைகள், வீச்சு அலையேற்றிக்கு(amplifier) வழங்கப்படுகிறது.

அளையேற்றி அமைப்பில் மின்சார அலைகளின் வீச்சு(amplitude)  அதிகரிக்கப்படுகிறது. அதாவது ட்ரான்சிஸ்டர் சுற்றுக்கு வழங்கப்படும் ஆற்றல் குறைந்த அலைகள்(weak signals), வெளிவரும்போது ஆற்றல்மிக்க அதிக வீச்சு கொண்ட அலைகளாக(high intensity waves) கிடைக்கின்றன.

ஆனால், நமது செவிகளால் இந்த அலைகளை கேட்க முடியாது. மேலும் இந்த அலைகள் 180 பாகை திசை மாற்றம்(180° phase difference )அடைந்து வெளியிடப்படுகிறது.

இந்த மின்சார அலைகளை மீண்டும் ஒலி அலைகளாக, அதாவது செவி உணர்வு ஒளி அலைகளாக(hearable sound waves)மாற்ற வேண்டிய பொறுப்பு ஒலிபெருக்கியின் வேலை தான்.

அதாவது, அலையேற்றியோடு இணைக்கப்பட்டுள்ள ஒலிபெருக்கிகளில்(connected speakers) உள் செலுத்தப்படும் மின்சார அலைகள், வெளியில் செவி உணர் அலைகளாக மாற்றப்படுகின்றன.(Input electric signals converted into sound waves)

முதலிலேயே சக்தி வாய்ந்த காந்தத்தை பயன்படுத்தி செவி உணர் அலைகளை மின்சார அலைகளாக மாற்றியதாக குறிப்பிட்டிருந்தேன்.

அதே செயல்பாடை கிட்டத்தட்ட தலைகீழாக செய்வதால், மின்சார அலைகளை உங்களால் செவியுணர் அலைகளாக மாற்ற முடியும்..(changing electric signals in to sound waves)

கேட்பதற்கு மிகவும் பெரிய செயல்பாடு போல தோன்றினாலும், வினாடியில் பல லட்சத்தில் ஒரு பங்கு நேரத்தில், இவை அனைத்தும் நடந்து முடிந்து விடுகின்றன.

இதனால்தான் ஒரு பாடல் நிகழ்ச்சியில் பாடகர் பாடிக் கொண்டிருக்கும் போதே, எவ்வித தாமதமும் இன்றி ஒலிபெருக்கியில் நம்மால் அந்த சத்தத்தை கேட்க முடிகிறது.

நீங்கள் முதலில் பாடிய வீச்சை விடவும், பல்லாயிரம் மடங்கு அதிகமான வீச்சில்(high amplitude output) சத்தம் பார்வையாளர்களின் செவிகளுக்கு விருந்தளிக்கிறது.

இதுதான் ஒலிபெருக்கிக்கு பின்னால் இருக்கக்கூடிய அடிப்படையான அறிவியல்.

நம்மில் பலரும் எலக்ட்ரானிக்ஸ் தொடர்பாக பல நுண்ணிய தகவல்களை கற்றுக் கொள்கிறோம். ஆனால், நம்மை சுற்றி நடக்கும் இது போன்ற அடிப்படையான நிகழ்வுகளில் அறிந்து கொள்வதில்லை.

எனவே எலக்ட்ரானிக்ஸ் தொடர்பாக எழுதும் கட்டுரைகளில்,  தினசரி வாழ்வில் பயன்படுத்தும் எலக்ட்ரானிக்ஸ் தொடர்பாகவும் எழுத உள்ளேன்.

மேற்படி இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் என்னுடைய அனுபவத்தின் அடிப்படையில் இங்கே எழுதப்பட்டுள்ளது.

மேற்படி இந்த கட்டுரை குறித்து உங்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் இருந்தால், தயங்காது என்னுடைய மின்மடல் முகவரிக்கு மடல் இயற்றவும்.

மீண்டும் ஒரு எலக்ட்ரானிக்ஸ் கட்டுரையில் உங்களை வந்து சந்திக்கிறேன்.

கட்டுரையாளர்:-

ஸ்ரீ காளீஸ்வரர்.செ,

இளங்கலை இயற்பியல் மாணவர்,

(தென் திருவிதாங்கூர் இந்து கல்லூரி,

நாகர்கோவில் – 02)

இளநிலை மொழிபெயர்ப்பாளர் மற்றும் கட்டுரையாளர்,

கணியம் அறக்கட்டளை.

மின் மடல் முகவரி: srikaleeswarar@myyahoo.com

%d bloggers like this: