எளிய தமிழில் VR/AR/MR 20. இடஞ்சார்ந்த ஒலி அமைவு (Spatial Audio)

VR/AR/MR க்கு இடஞ்சார்ந்த ஒலி அமைவு ஏன் முக்கியம்?

மூழ்கவைக்கும் அனுபவத்துக்கு இடஞ்சார்ந்த ஒலி அமைவும் ஒரு முக்கிய அம்சம். முப்பரிமாணப் படம் அல்லது காணொளியை முன்னும் பின்னும், இடமும் வலமும், மேலும் கீழும் திரும்பி மற்றும் நகர்ந்து பார்க்கும்போது அதற்குத் தோதாகப் படமும் காணொளியும் திரும்புவது மற்றும் நகர்வது மூழ்கவைக்கும் அனுபவத்துக்கு மிக அவசியம் என்று முன்னர் பார்த்தோம். அதேபோல இடஞ்சார்ந்த ஒலி அமைவும் மிக அவசியம். இது நம்முடைய VR/AR காட்சிகளில் மூழ்கவைக்கும் அனுபவத்தை ஏற்படுத்த மேலும் துணை புரிகிறது.

முப்பரிமாண அல்லது இடஞ்சார்ந்த ஒலி அமைவு

ஒலி அமைவு வகைகள்

ஒலி அமைவு வகைகள்

முப்பரிமாண அல்லது இடஞ்சார்ந்த ஒலி அமைவு என்றால் என்ன? பழைய தொழில்நுட்பத்தில் ஒற்றை ஒலிபெருக்கி (mono) மட்டுமே பயன்படுத்தினால் எல்லா ஒலியும் அந்த ஒரு இடத்திலிருந்து மட்டுமே வருவதுபோல் தெரியும். அடுத்து இரட்டை ஒலிபெருக்கிகள் (stereo) பயன்படுத்தி ஓரளவு ஒலியின் மூலத்தை மேடையின் இடது பக்கம் மற்றும் வலது பக்கம் என்று பிரித்துக் காட்ட முயன்றோம். பின்னர் வந்த 5.1 சூழொலி (surround sound) தொழில்நுட்பத்தில் ஐந்து ஒலிபெருக்கிகள் வைத்து ஒலியை நம்மைச் சுற்றிலும் கேட்க முடிந்தது. முப்பரிமாண அல்லது இடஞ்சார்ந்த ஒலி அமைவில் நம்மைச் சுற்றிலும் மட்டுமல்லாமல் மேலும் கீழும் ஆக 360 பாகைகளிலும் ஒலியின் திசை மற்றும் தூரத்தின் உணர்வை அறிய முடியும். 

தலை திருப்புவதைப் பின்தொடர்தல் (head tracking)

ஒரு அரங்கில் இசைக்கச்சேரியோ அல்லது நாடகமோ பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். தலையைத் திருப்பினாலும் ஒலியின் மூலம் மாறாது அல்லவா? வழக்கமான காதணிகள் அல்லது தலையணிகளில், உங்கள் தலையைத் திருப்பினால் ஒலியின் மூலமும் அத்துடன் திரும்பும். ஆனால் தலை திருப்புவதைப் பின்தொடர்தல் உள்ள தலையணியோ தலையைத் திருப்பினால் உங்கள் கேட்கும் கோணத்தையும் துல்லியமாக மாற்றுகிறது. உங்களுக்கு அரங்கில் இருப்பது போலவே தோன்றும்.

நன்றி

  1. VRTL to Launch Spatial Sound Course

இத்தொடரில் அடுத்த கட்டுரை: கலந்த மெய்ம்மை (Mixed Reality – MR)

மெய்நிகர் பொருட்களுடன் ஊடாடுதல் (virtual object interaction) அல்லது கையாளுதல் (manipulation). மெய்யுலகமும் மெய்நிகர் வடிவங்களும் பின்னிப்பிணைந்தவை (intertwined).

ashokramach@gmail.com

%d bloggers like this: