ஶ் – அறிமுகம்


இந்த எழுத்தை இதுவரை அறிந்திடாதவர்களுக்கு, இது ஒரு கிரந்த எழுத்து. இவ்வெழுத்து பொதுவாக சமஸ்கிருதச் சொற்களைத் தமிழில் எழுதப் பயன்படுத்தப்படுகிறது. ஸ, ஷ, க்ஷ, ஜ, ஹ ஆகியவற்றைப் போல் அல்லாமல், இவ்வெழுத்து ஒருங்குறியில் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டது. ஆனால், இந்து சமய உரைகளின் அச்சு வடிவில் ஶ நீண்டகாலமாகவே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

குறியீட்டுப் புள்ளிகளும் க்ளிஃப்களும்

தமிழ் எழுத்துக்கள் ஒருங்குறியில் எப்படிக் கையாளப்படுகிறது என்று முதலில் பார்ப்போம். உயிர்மெய் எழுத்துக்கள் கூட்டெழுத்தாக (complex glyph) கருதப்படுகின்றன. அதாவது ஒவ்வொரு எழுத்தும் ஒன்றுக்கு மேற்பட்ட தனிக் குறியீட்டுப் புள்ளிகள் (code points) கொண்டு குறிப்பிடப்படுகிறது. எடுத்துக்காட்டாக, ‘க்’ என்பது க + ் (புள்ளி) என்று குறியிடப்படுகிறது. (க் உயிர்மெய் எழுத்தல்ல என்றாலும் ஒருங்குறியைப் பொறுத்தவரை ‘க’ தான் ககர வரிசையின் மூல அழுத்து. எனவே தமிழின் மெய்யெழுத்துகள் குறியீட்டிற்காக உயிர்மெய் எழுத்துகளைப் போன்று கருதப்படும்). இவ்வாறு பல எழுத்துக்களின் குறியீடுகள் தொடர்ச்சியாக வரும் போது அவற்றை ஓரெழுத்தாகக் காட்டவேண்டும் என்று எழுத்துரு (font) தீர்மானிக்கிறது. இதனால் தான் தமிழ் உள்ளிட்ட பிராமிய எழுத்துக்களின் எண்ணிக்கையானது குறியீட்டு முறைப்படி கணக்கிடப்படும்பொழுது இயல்பானதை விட அதிகமாக இருக்கும். கெரார்டின் இந்தப் பதிவைப் பாருங்கள்.

ஸ்ரீ = ஸ் + ரீ என்பது ஶ் + ரீ ஆன மாற்றம்

ஒருங்குறி 4.1 வரை ஶ -ற்கு ஒருங்குயில் குறியீட்டுப் புள்ளி இல்லை. அதனால் ஶ்ரீ என்பது ஸ் + ரீ என்று குறியிடப்பட்டது. பின்னர் ஶ்ரீ என்பது ஶ் + ரீ என்று கொள்ளப்பட்டது. மொழியியலின்படி சரியாகச் சொல்லவேண்டுமென்றால், ஶ்ரீ = ஶ் + ரீ என்றே குறியிட வேண்டும்; அதுவே சரியான உச்சரிப்பு. ஶ் என்கிற எழுத்தும் ஶ்ரீ என்கிற எழுத்தும் வடிவத்தில் ஓரளவு ஒத்திருப்பதைக் காணலாம். ஆனால், மொழிகள் காலத்திற்கேற்ப மாற்றங்கள் பெறும் என்பதையும் (ஶ்ரீ பற்றிய முந்தைய பதிவைப் பார்க்கவும்) சமய உரைகளைத் தவிர வேறெங்கும் வழக்கத்தில் இருந்ததில்லை என்பதையும் ஏற்றுக்கொண்டால் ஶ்ரீ = ஸ் + ரீ என்பதை ஏற்றுக்கொள்ளலாம். ஸ் + ரீ என்பது சேர்க்கப்படாமல் ஸ்‌ரீ என்று குறிப்பிடப்படுவதன் பயன்பாடுகள் குறித்து கா.சேது அவர்கள் எழுதியுள்ளார். அதைப் பார்க்கும்பொழுது, ஶ்ரீ குறியீட்டு முறையின் மாற்றம் நல்லதாகவே படுகிறது.

ஶ்ரீயின் இரட்டைக் குறியீடு / மறுகுறியீடு

குறியீட்டை மாற்றும் பொழுது ஏற்கனவே இருக்கும் உரைகளை மறுகுறியீடாக்கம் செய்ய வேண்டி வரும் என்பதை ஒருங்குறிக் குழுவினர் ஏன் யோசிக்கவில்லை என்று தெரியவில்லை. ஒருவேளை அப்பொழுது தமிழ் ஒருங்குறி ஆரம்பகட்டத்தில்தான் இருப்பதாகவும் அதிக உரைகள் தமிழ் ஒருங்குறியில் இல்லையென்றும் அவர்கள் கருதியிருக்கலாம். ஒருங்குறி 4.1 வெளியிடப்பட்டு 7 ஆண்டுகளுக்குப் பிறகு நான் இப்படியொரு கட்டுரையை எழுதுகிறேன் என்பது வேதனைக்குரியது. பெரும்பாலான ஒருங்குறி எழுத்துருக்கள் 4.1-ற்கு முந்தையவை. எனவே அவை இன்னும்  ஶ்ரீ = ஸ் + ரீ என்ற விதியையே பின்பற்றுகின்றன. உள்ளீட்டு முறை உருவாக்குவோரும் ஒருங்குறியின் இந்த மாற்றங்களைப் பெரிதாய் சட்டை செய்யவில்லை. தொலைநோக்குப் பார்வை இல்லாமல் எழுத்துருக்கள் தற்சமயம் காட்டும் முறையை மட்டும் அவர்கள் கருத்தில் கொண்டார்கள் போலும்.

 

ஆனால், இவர்களைப்போல் இல்லாமல் ஒருங்குறி மாற்றங்களுக்கேற்ப தங்களை மேம்படுத்திக் கொண்டவர்களும் உண்டு. பெரிய கணினி நிறுவனங்களை எடுத்துக்கொண்டால், ஆப்பிள் ஒருங்குறியினை முற்றிலும் செயல்படுத்தியுள்ளது.

இதனால்தான் மேக் (Mac) / iOS கருவிகளில் தமிழ் உரைகளை உள்ளிடுவதும், படிப்பதும் சிக்கலானதாக உள்ளது. மேக் அல்லாத உள்ளீட்டுக் கருவிகளில் உள்ளிடப்படும் ஶ்ரீ, ஸ்+ரீ என்று குறியிடப்படுகிறது. அதனால் ஆப்பிள் எழுத்துருக்கள் இதனை ஓரெழுத்தாகக் காட்டாமல் ஸ்‌ரீ என்று காட்டுகிறது. இன்னொருபுறம், மேக்-ல் உள்ளிடப்படும் ஶ்ரீ மற்ற கணினிகளில் தனித்தனி குறியீடுகளாகத் தெரியும். ஆக, ஒருங்குறியின் உள்ளியக்கத்தன்மை தொலைந்து போய்விட்டது. இந்த உரைகளைத் தேடுவது பற்றி யோசித்துப் பாருங்கள் – ஒருங்குறிக்கு முந்தைய காலத்தில்தான் இருக்கிறோம். லோகித் தமிழ் போன்ற எழுத்துருக்கள் ஸ்+ரீ, ஶ்+ரீ இரண்டையுமே ஓரெழுத்தாகவே காட்டுகின்றன. இது ஒருங்குறிக்கு மாறானது என்றாலும் பயன்படும் தன்மையில் ஒரு படி முன்னேற்றம் என்ற சொல்லலாம்.

தீர்வுகள்

  1. அனைவரையும் ஒருங்குறியின் புதிய வடிவத்திற்கு புதுப்பிக்கச் செய்வது. சொல்வதை விடச் செய்வது கடினம்தான்.

     

  2. ஸ்ரீ, ஶ்ரீ இரண்டும் இணையானவை என்று அறிவிக்குமாறு ஒருங்குறிக் குழுவிற்கு வேண்டுகோள் வைக்கலாம். ஆனால் இது ‘இலக்கணத்தைச் சிறிதும் பிறழாமல் பயன்படுத்த வேண்டும், மொழி மாற்றங்களுக்கு உள்ளாகாத ஒன்று’ என்று கருதுவோருக்கும் புதுமையை விரும்புவோருக்கும் இடையிலான கலாச்சாரப் பிரச்சினையாக உருவெடுக்கும்.

பி.கு: தனித்தமிழ் ஆர்வலர்களுக்கு இது ஒரு பிரச்சினையாகவே இருக்காது. ஆனால் தமிழ் பெருங்குடி மக்கள் இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும் வரை சமாளித்துத்தான் ஆக வேண்டும்.

 

ஆங்கில மூலம் :-

logic10.tumblr.com/post/26208368477

விக்னேஷ் நந்த குமார் ஓர் இணைய வடிவமைப்பாளர் (web designer), கட்டற்ற மென்பொருள் கோட்பாட்டின் மேல் அசையாத நம்பிக்கை கொண்டவர். கட்டற்ற இணைய வடிவமைப்புத் தொழில்நுட்பங்களான HTML, CSS, Javascript ஆகியவற்றுடன் விளையாடுவதில் தீவிர ஆர்வம் கொண்டவர். வலைப்பதிவுகள் எழுதுதல், புகைப்படம் எடுத்தல், வலை உலாவல் ஆகியன இவரது ஓய்வுநேரச் செயல்கள்.

 

 

 

 

 

 

 

 

 

மின்னஞ்சல்: viky.nandha AT gmail DOT com

வலைத்தளம்: vigneshnandhakumar.in

%d bloggers like this: