ஃபெடோரா விஞ்ஞானம்- அமித் சாஹா அவர்களுடன் ஒரு நேர்காணல்

ஃபெடோரா விஞ்ஞானம் என்பது அறிவியல் வல்லுனர்களும், கணித வல்லுனர்களும் கணினியில் பயன்படுத்தக் கூடிய ஏராளமான நூலகங்களையும் மென்பொருள்களையும் உள்ளடக்கிய ஒரு தொகுப்பாகும்.அதன் பொறுப்பாளாரான திரு.அமித் சாகா அவர்களுடன் அறிவியல் வல்லுனர்களுக்கும் பொறியியல் வல்லுனர்களுக்குமான இலவச திறவூற்று மென்பொருள் லிப்ர்ரேயின் நிருபர் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடத்திய நேர்காணலின் தமிழாக்கம் இந்தக் கட்டுரை.

 

F4S: வணக்கம் அமித். இந்த நேர்காணலுக்கு ஒத்துக் கொண்டதற்கு நன்றி. முதலில் உங்களைப் பற்றி எங்களுக்கு ஒரு சிறிய அறிமுகம் தாருங்களேன்.

அமித்: என் பெயர் அமித். நான் ஆஸ்திரேலியாவிலிலுள்ள நியூசவுத்வேல்ஸ் பல்கலைக் கழகத்தில் Ph.D பட்டத்திற்கான ஆராய்ச்சிகள் செய்து வருகிறேன். பத்துவருடங்களுக்கு முன்னால் லினிக்ஸ் எனக்கு அறிமுகமானதிலிருந்து நான் திறவூற்று திட்டப் பணிகளில் அவ்வப்போது பணியாற்றி வருகிறேன்.லினிக்ஸ் செய்திப் பத்திரிக்கைகளிலும் அடிக்கடி எழுதுகிறேன்.

 

F4S: ஃபெடோரா விஞ்ஞானம் என்றால் என்ன?

அமித்: அறிவியல், கணித வல்லுனர்கள் ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தக் கூடிய திறவூற்று கணக்கீட்டுச் சாதனங்களை ஃபெடோரா KDE மேசைக் கணினியுடன் இணைத்து ஒரே மென்பொருளாகத் தருவது தான், ஃபெடோரா விஞ்ஞானம். சுருக்கமாகச் சொன்னால் பொழுதுபோக்காகவும் வேலை நிமித்தமாகவும் லினிக்ஸ் கணினிகளைப் பயன் படுத்தும் அறிவியல் கணித வல்லுனர்களுக்கென்று பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட ஃபெடோரா லினிக்ஸ் தான், ஃபெடோரா விஞ்ஞானம்.

 

F4S: ஃபெடோரா விஞ்ஞானம் எப்போது, எதனால் வெளிவந்தது?

அமித்: என் தேவையை நானே பூர்த்தி செய்து கொள்ள வேண்டிய நிலையின் விளைவு தான், ஃபெடோரா விஞ்ஞானம். நான் ஆராய்ச்சியில் ஈடுபட்ட ஒரு சில காலத்திலேயே அபரிதமான அறிவியல் கருவிகள், நூலகங்கள் ஆகியவற்றைப் பற்றி அறிந்து கொண்டேன்.லினிக்ஸை கணினியில் நிறுவும் ஒவ்வோரு முறையும் திரும்பத் திரும்ப இந்த முக்கியமான சாதனங்களை என் மேசைக் கணினியில் நிறுவுவது நேரத்தை வீணாக்குவதாகவும், அநாவசியமானதாகவும் எனக்குப் பட்டது. கணினியை முதல் முறையாக நிறுவும் போதே இந்த சாதனங்களையும் நிறுவ ஒரு வழி கிடைக்காதா என்று ஏங்கினேன். என்னுடைய பிரத்யேகத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவையானக் கருவிகளைத் தேடி, ஒரு ஃபெடோரா சூழலை உருவாக்கினேன். என்னுடைய ஆராய்ச்சி இப்போது நடைமுறையில் இருப்பதைப் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

 

F4S: இது எந்த இயக்குதளத்தில் இயங்குகிறது? ஏன்?

அமித்: இது ஃபெடோரா லினிக்ஸ் இயக்குதளத்தில் இயங்குகிறது. இந்த சுழற்சி முறையை உருவாக்குவது மிகவும் எளிது. மேலும் இந்த சுழற்சியை ஏற்கனவே பயன்படுத்தும் வாடிக்கையாளர்களும் இருந்ததால், நான் ஃபெடோராவைத் தேர்ந்தெடுத்தேன்.

 

F4S: ஃபெடோரா விஞ்ஞானத்தினால் பயன்பெறுபவர்கள் யார்?

அமித்: அறிவியல் மற்றும் கணிதத் துறையில் உள்ள கணக்கீட்டு பணி நிமித்தமாகவோ அல்லது பொழுதுபோக்காகவோ செய்பவர்கள் இதைப் பயன்படுத்தலாம்.

 

F4S:எப்படிப்பட்ட விஞ்ஞான மென்பொருட்கள் ஃபெடோரா விஞ்ஞானத்தில் அடங்கியுள்ளன என்று சொல்ல முடியுமா?

அமித்: தற்போது கிடைக்கும் மென்பொருட்களின் பட்டியல் இந்த இணையச்சுட்டியில்(https://fedoraproject.org/wiki/Scientific_Packages_List) கிடைக்கும். முக்கியமாக நான்கு வகை சாதனங்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளன.

 

  • விஞ்ஞான கணக்கீடுகளுக்கானக் கருவிகளும் அதற்கான சூழல்களும்:

    எண் கணிதக் கணக்கீடுகளுக்கானத் தொகுப்புக்களாகிய GNU Octave, front-end wxMaxima, the Python scientific libraries SciPy, NumPy மற்றும் Spyder (a Python environment for scientific computing) போன்ற மென்பொருட்கள் ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும். இவை தவிர புள்ளியியல் மென்பொருளான Rன் வளர்ச்சி சூழலும்( development environment) இணைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் மிகப் பெரிய அளவிலான புள்ளி விவரங்களை அலசி ஆராய உதவும் மூலக் கருவிகளும்(ROOT tools) இணைக்கப்பட்டுள்ளன.

  • அனைத்துக்கும் பொதுவான நூலகங்கள்:

    GNU C/C++ and FORTRAN compilers, the OpenJDK Java development tools, and the IDEs NetBeans and Eclipse ஆகிய மென்பொருட்கள் இதில் அடங்கியுள்ளன. autotools, flex, bison, ddd valgrind போன்ற மென்பொருட்கள் கூட இதில் இணைக்கப்பட்டுள்ளன.

  • இயக்கத் திட்டச் செயலாக்கமும், பகிர்ந்தளிப்பதும் இணையாக வெளிவர உதவும் கருவிகள், நூலங்கள்:

    OpenMPI, PVM, and the shared-memory programming library OpenMP போன்ற இயக்க திட்ட செயலாக்க கருவிகளும் நூலகங்களும் இணைக்கப்படுள்ளன. தொகுதிகளைப் பதனிடும் முறை(batch-processing system) யில் உதவும் Torque resource manager-ம் இதில் இணைக்கப்படுள்ளது

  • படங்களை வரையவும், திருத்தி அமைக்கவும் பார்வை ஏற்பிகளாகவும் பயன்படுத்தப்படும் மென்பொருட்கள்:

    ஆராய்ச்சியின் புள்ளி விவரங்களைத் தொகுத்து வரை படங்களாக்கி பிரசுரத்திற்கு ஏற்ற வகையில் கட்டுரைகளைத் தயாராக்க உதவக் கூடிய கருவிகளான Gnuplot, xfig, MayaVi, Dia மற்றும் Ggobi ஆகியவையும் புள்ளிகளை மையமாகக் கொண்டு படம் வரையும் Inkscape-ம் இதில் இணைக்கப்பட்டுள்ளது.

  • பதிப்புரு கட்டுப்படுத்துதல்,பாதுகாப்புக்கான சேமித்தல்,ஆவணங்களை நிர்வகித்தல்:

    Subversion, Git and Mercurial போன்ற மென்பொருட்களும், ஆதார நூல் விவர அட்டவணை தயாரிக்க உதவும் மென்பொருளான BibTool-ம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த நான்கு முக்கியமான பிரிவுகளைத் தவிர hevea–the awesome LaTex-to-HTML converter, GNU Screen மற்றும் IPythonஆகியவையும் இணைக்கப்பட்டுள்ளன.

 

F4S: ஃபெடோரா விஞ்ஞானத்திற்கு உத்திரவாதம் அளிப்பவர் யாரும் இருக்கின்றனரா?

அமித்: ஃபெடோரா விஞ்ஞானம், ஃபெடோராவின் அதிகாரப்பூர்வமான வெளியீடு என்பதனால் ஃபெடோரா சமுகத்தினர் இதற்கு பொறுப்பு அளிக்கின்றனர்.

 

F4S: தோராயமாக ஃபெடோரா விஞ்ஞானத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை எவ்வளவு இருக்கும்?

அமித்: இதுவரை ஏறத்தாழ 650 தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இன்னும் பலருக்கு இந்த முயற்சி பற்றித் தெரிய வரும் என்று நம்புகிறேன்.

 

F4S: ஃபெடோரா விஞ்ஞானம் எங்கேப் பயன் படுத்தப்படுகிறது என்று தெரியுமா?

அமித்: ஃபெடோரா விஞ்ஞானம் பல்கலை கழகங்களிலும், ஆராய்ச்சி செய்யும் நிறுவனங்களிலும் பயன்படுத்தப் படுகின்றது.

 

F4S:இந்தத் திட்டத்தை எத்தனை நபர்கள் செயல்படுத்தி பயன் பெறுபவர்களாக இருக்கின்றனர்?

அமித்: தற்போது இந்தத் திட்டம் ஃபெடோரா அறிவியல் தொழில் நுட்ப வல்லுனர்கள் குழுவின் குடையின் கீழ் இயங்குகிறது.

F4S: ஃபெடோரா விஞ்ஞானத்தின் வளர்ச்சியின் எந்தப் பிரிவில் உங்களுக்கு உதவித் தேவைப் படுகிறது?

அமித்: இப்போதுள்ள தொகுப்பில் இல்லாத, நடைமுறையில் இருக்கும் புதிய தொகுப்புகளை இணைப்பதற்கும் ஃபெடோராவின் களஞ்சியத்தில் இல்லாத மென்பொருட்களை இணைப்பது பற்றியும் கருத்துக்கள் தேவையாய் இருக்கிறது.

F4S: இந்தத் திட்டத்தில் மற்றவர்கள் எப்படிக் கலந்து கொள்ளலாம்?

அமித்: இப்போதைக்கு அனைவரும் ஃபெடோரா சுழற்சியைப் பயன் படுத்தி தங்களின் தனித் தேவைக்கு ஏற்ற படி மாற்றிக் கொள்ள வேண்டும். தங்களுக்குத் தேவையான மென்பொருட்களை இணைத்துக் கொள்வதும், தங்களுக்கு விருப்பமானக் கணினித் திரை ஓவியங்களை சேர்த்துக் கொள்வதையும் எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். ‘fedoraproject.org/wiki/SIGs/SciTech’ என்ற இணையச் சுட்டியின் வழியாகத் தங்கள் மின்னஞ்சலை மடற்குழுவில் பதிவு செய்து கொள்ளலாம்.

F4S: வேறு என்னென்ன சிறப்பியல்புகள் எதிர்காலத்தில் நாங்கள் எதிர்பார்க்கலாம்?

அமித்: சில புதிய பயன்பாடுகள், பிரத்யேக முறையில் சுழற்சியை வடிவமைக்கும் வகை என்று ஃபெடோரா விஞ்ஞான சுழற்சியை மெருகு படுத்தும் நோக்கம் இருக்கிறது.

F4S: உங்களுடையத் துறையில் இலவச திறவூற்று மென்பொருட்கள் எப்படி உதவுகின்றன?

அமித்: “அறிவியல் ஆராய்ச்சியும், திறவூற்று மென்பொருட்களும் புதுமை புகுத்தும் நூதன முயற்சிகளை உற்சாகமூட்டி வரவேற்கின்றன. அதனால் இவை இரண்டும் இணைந்து செயல்படுவதற்கான தேவை இருக்கின்றது” என்று நான் நினைகின்றேன்.

F4S: ஃபெடோரா விஞ்ஞானத்தைப் பற்றி தெரிந்து கொள்ள, உங்களை எப்படி தொடர்பு கொள்ளலாம்?

Fedora Scientific Home: spins.fedoraproject.org/scientific-kde/

My blog: echorand.me

Email: amitsaha.in@gmail.com

ஃபெடோரா விஞ்ஞானத்தை அறிவியல் வல்லுனர்களும் கணித வல்லுனர்களும் பயன்படுத்துவதன் மூலம் அவர்களின் ஆராய்ச்சியைக் கணினி வழி திறம்பட இலவசமாக செயல்படுத்த முடியும் என்ற நம்பிக்கை வருகிறது. அவர்கள் இத்தகைய திறவூற்றுச் சாதனங்களைப் பயன்படுத்துவது மூலம் திறவூற்றுத் துறையில் பணிபுரிபவர்களுக்கு உற்சாகமும் ஊக்கமும் அளிப்பது மட்டுமில்லாமல், இத்துறை வளரவும் வழி வகுக்கிறார்கள்.

ஆங்கில மூலம் :-

www.floss4science.com/fedora-scientific-amit-saha/

 

சுகந்தி வெங்கடேஷ்

%d bloggers like this: