இன்று ஸ்வேச்சா பயிற்சிப்பட்டறையின் ஐந்தாவது நாள். நேற்று தனித்தனி அணிகளை உருவாக்கினார்கள். நான் இருப்பது பதினோராவது அணி. அதற்கெனத் தனியே கட்செவி(வாட்சப்) குழு உருவாக்கப்பட்டிருக்கிறது. அணி உறுப்பினர்களாகவே தனியாக இணைந்து இந்தக் குழுவை உருவாக்கியிருக்கிறார்கள். காணொளி இயங்கலையில் பிக் புளூபட்டன், விவாதங்களுக்கு discuss.swecha.org, படிப்பதற்கு மூடுல்(moodle) என எல்லாவற்றிலும் கட்டற்ற மென்பொருட்களை எவ்வித சமரசத்திற்கும் இடம் கொடுக்காமல் செய்து வரும் ஸ்வேச்சா வாட்சப் குழு உருவாக்கச் சொல்லவில்லை. இருந்தாலும் உறுப்பினர்கள் ஒன்றாகச் சேர்ந்து ஒரு கட்செவிக் குழுவை உருவாக்கியிருக்கிறார்கள். இன்னும் நாட்கள் போகப் போக, இந்தக் குழு சிக்னல்(signal) குழுவாகவோ, டெலிகிராம் குழுவாகவோ மாறி விடும் என்று நினைக்கிறேன்.
இன்று காலையில் இருந்து பவபுத்தி(Bhavabhuthi), நவீன், ஸ்ருஜனா(Srujana) ஆகிய மூவரும் இன்றைய நாளை ஒருங்கிணைத்திருந்தார்கள். இன்று காலை ஒருமணிநேரம் தேர்வு இருந்தது. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் முறையில் 23 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. கேள்விகளில் ஆங்கில வாசிப்புப் புரிதல், கணக்கு, சின்னச்சின்ன நிரல்கள், சில கேள்விகள் தரவுக் கட்டமைப்பு(Data Structure) ஆகியவற்றில் இருந்து கேட்கப்பட்டிருந்தன. ரொம்ப நாள் கழித்து இது போன்ற தேர்வு – புதுத் தெம்பைக் கொடுத்தது. வீட்டில் இருப்பவர்கள் எல்லோரிடமும் ஒருமணி நேரம் என்னை இடைஞ்சல் செய்யாதீர்கள். ‘நான் தேர்வு எழுதப் போகிறேன், தேர்வு எழுதப் போகிறேன்’ என்று பறை சாற்றிக் கொண்டேன். ஒருவழியாகத் தேர்வு எழுதினேன் – எழுதும் போதே – ஆறு கேள்விகளுக்கு விடை தெரியாது என்று தெரிந்து விட்டது. அந்த ஆறு, அது போக ஒரு கேள்விக்குப் பாதி விடை என 6.5 தவறாக முடிந்தது.
learning.swecha.org இல் மிக நேர்த்தியாகக் கேள்விகள், தேர்வு முடித்தவுடன் எந்தெந்தக் கேள்விகளுக்கு விடை சரி, எவையெல்லாம் தவறு, எவை பாதி சரி என்பதை எல்லாம் ஒழுங்கமைத்திருந்தார்கள். அதன் பிறகு பத்து நிமிட இடைவெளி கொடுத்தார்கள்.
சமூகத்திற்குப் பயன்படும் திட்டப்பணிகள்:
அதன் பிறகு, discuss.swecha.org/ பற்றியும் அதில் இருக்கும் திட்டப்பணி பற்றிய கருத்துகளையும் எடுத்துச் சொன்னார்கள். இந்தத் தளம் ஸ்டேக் ஓவர்ஃபுளோ(StackOverflow) இருக்கிறது அல்லவா! அதைப் போலத்தான் என்று விரிவாக எடுத்துச் சொன்னார்கள். discuss.swecha.org/ தளத்தை நன்றாகப் பயன்படுத்தக் கேட்டுக் கொண்டார்கள். அதில் இருக்கும் திட்டப்பணி பற்றிச் சரியாகப் பங்கேற்று நட்சத்திரக் குறிகள் பெறச் சொன்னார்கள். இந்தத் தளத்தில் பிற நண்பர்களையும் சேரச் சொல்லலாமா என்று கேட்டேன். ‘கட்டாயம் சேருங்கள்! ஆனால் தளத்தைக் குப்பையாக்காமல் பொறுப்பாகப் பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று கேட்டுக் கொண்டார்கள். எனவே, நண்பர்களே! நீங்களும் மேல் சொன்ன தளத்தில் பயனராகப் பதிந்து கொள்ளுங்கள். நிறைய சமூகம் சார்ந்த திட்டப்பணிகளை அங்கே பார்க்க முடிகிறது. இதைப் பற்றிப் பேசும் போது, பவபுத்தி – “எப்படி முகநூல், அமேசான் போன்ற தளங்கள் நம்மை ஏமாற்றுகின்றன என்பதை எடுத்துச் சொன்னார். முகநூலில் நீங்கள் மிக எளிதாகக் கணக்கு தொடங்கிவிடலாம். ஆனால் வெளியேறுவது ரொம்பக் கடினம். அமேசானில் கணக்குத் தொடங்க முடியும். வெளியேறவே முடியாது என்பதைச் சொன்னார். பல தளங்களை நீங்கள் திறக்கும் போது நினைவி(Cookies)கள் மூலம் உங்களைப் பற்றிய தரவுகளை எடுப்பதும் தகவல் திருட்டில் அடக்கம் தான்!” என்பதை எடுத்துச் சொன்னார்.
நண்பர்கள் திட்டப்பணிகள் பற்றி வேறு கருதுகோள்கள் வேண்டும் என்றால் goinggnu.wordpress.com/2014/07/23/need-50-ideas-for-a-python-hackathon/ தளத்திலும் போய்ப் பார்க்கலாம். நிரலாக்கத்தின் தொடக்கக் கட்டத்தில் இருப்பவர்கள் இந்தப் பக்கத்தைப் போய்ப் பார்க்கலாம்.