சுழற்செலுத்தி (Transmission) அல்லது பல்லிணைப் பெட்டி (Gear box) என்பது ஒரு இயந்திர சாதனமாகும். இது ஊர்தியின் வேகத்தை மாற்றுவதற்கும் பின்னோக்கிச் செல்லவும் பல்லிணைகளைப் பயன்படுத்துகிறது. தற்போது தயாரிக்கப்படும் பெரும்பாலான பயணிகள் கார்களின் சுழற்செலுத்திகள் 5 முன்னோக்கிய பல்லிணை விகிதங்களும் ஒரு பின்னோக்கிய பல்லிணை விகிதமும் கொண்டவை.
தானியங்கி சுழற்செலுத்தி (Automatic Transmission)
முன்னோக்கிய வேகத்திற்குத் தகுந்தவாறு தானியங்கியாக பல்லிணை மாற்றுவதற்கு (automatic gear shifting) ஓட்டுநரிடமிருந்து எந்த உள்ளீடும் தேவையில்லை.
சுழற்செலுத்தி கட்டுப்பாட்டகம் (Transmission Control Unit – TCU) அல்லது பல்லிணைப் பெட்டி கட்டுப்பாட்டகம் (Gearbox Control Unit – GCU) என்பது பொதுவாக ஊர்தியில் இருந்து உணரிகளும் பொறிக் கட்டுப்பாட்டகமும் (ECU) வழங்கும் தரவுகளை வைத்து, உகந்த செயல்திறன், எரிபொருள் சிக்கனம் மற்றும் சீரான மாற்றுக்காக ஊர்தியில் பல்லிணையை எப்படி, எப்போது மாற்ற வேண்டும் என்பதைக் கணக்கிடுகிறது.
சுழற்செலுத்தி கட்டுப்பாட்டகம் பயன்படுத்தும் முக்கியமான உணரிகள்
அடுத்து சுழற்செலுத்தி கட்டுப்பாட்டகம் எந்தெந்த உணரிகளை முக்கியமாகப் பயன்படுத்துகிறது என்று பார்ப்போம்.
ஊர்தி வேக உணரி (Vehicle speed sensor – VSS)
நீங்கள் கையால் பல்லிணை மாற்றும்போது (manual gear shift) ஊர்தியின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க முதல், இரண்டாம், மூன்றாம், நான்காம் பல்லிணைக்கு மாற்றுவீர்கள் அல்லவா? அதேபோல பல்லிணை மாற்றம் எப்போது நிகழ வேண்டும் என்பதைத் தீர்மானிக்க TCU ஊர்தி வேகத்தைப் பயன்படுத்துகிறது.
சக்கர வேக உணரி (Wheel speed sensor – WSS)
ஊர்தி பள்ளத்தில் இறங்குகிறதா அல்லது மேட்டில் ஏறுகிறதா என்பதைத் தீர்மானிக்கவும் ஊர்தியின் உண்மையான வேகத்தைத் தீர்மானிக்கவும் நவீன தானியங்கி சுழற்செலுத்திகளில் (automatic transmissions) இந்த உணரி உண்டு. சுழற்செலுத்தி சாலை வேகத்திற்கு ஏற்ப பல்லிணையை மாற்றுகிறது.
முடுக்கி நிலை உணரி (Throttle position sensor – TPS)
முடுக்கி நிலை உணரி என்பது ஒரு பொறியின் காற்று உட்கொள்ளலைக் கண்காணிக்கப் பயன்படும் உணரி ஆகும். நவீன முடுக்கி நிலை உணரிகள் தொடத் தேவையற்ற மின் தூண்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன.
திறன் பொறித்தொடர் (Powertrain) கட்டுப்பாட்டகம்
பொறியிலிருந்து (engine) சக்கரங்களுக்கு சுழற்சியைக் கொண்டு சேர்க்கும் அனைத்து பாகங்களையும் சேர்த்து திறன் பொறித்தொடர் என்று சொல்கிறோம். இது பொறி (Engine), உரசிணைப்பி (Clutch), சுழற்செலுத்தி (Transmission) என்ற பல்லிணைப் பெட்டி (Gearbox), உந்துத் தண்டு (Propeller shaft), வேறுபாட்டுப் பல்சக்கரம் (Differential), ஓட்டும் அச்சு (Drive Axle) ஆகிய யாவற்றையும் உள்ளடக்கியது. இவை யாவற்றையும் ஒரே தொகுப்பாகச் சொல்லும்போது இதைத் திறன் பொறித்தொடர் (Powertrain) என்று சொல்கிறோம். இவை யாவற்றையும் கட்டுப்படுத்த ஒரே கூறாக (Module) இருந்தால் அது PCM (Powertrain Control Module அல்லது Power Control Module).
நன்றி
இத்தொடரில் அடுத்த கட்டுரை: நிறுத்தக் கட்டுப்பாடு
சறுக்காமல் நிறுத்தும் அமைப்பு (Antilock Braking System – ABS). இழுவைக் கட்டுப்பாடு (Traction Control System – TCS). மேடு ஏறும் கட்டுப்பாடு (Hill-hold control). வேக உணரிகள் (Speed Sensors). ஊர்தி தரிப்பு உணரிகள் (Parking Sensors).