எளிய தமிழில் VR/AR/MR 6. VR அசைவூட்டத்துக்குக் கட்டற்ற திறந்தமூலக் கருவிகள்

முப்பரிமாண அசைவூட்டம் (3D animation)

முப்பரிமாண அசைவூட்டம்

முப்பரிமாண அசைவூட்டம்

3D அசைவூட்டம் உருவாக்கும் செயல்முறையை மூன்று கட்டங்களாகப் பிரிக்கலாம். முதலாவது மாதிரியமைத்தல் (modelling). முப்பரிமாணப் பொருட்களை அல்லது வடிவங்களை உருவாக்கி ஒரு காட்சியில் (scene) வைக்கிறோம். அடுத்து இடுவெளி (layout) மற்றும் அசைவூட்டம். இது காட்சியில் உருவங்கள் எவ்வாறு நகர்கின்றன மற்றும் திரும்புகின்றன போன்றவற்றைக் குறித்தல். கடைசியாக முழு அசைவூட்டத்தையும் தோற்ற அமைவாக (rendering) வெளியிடுதல்.

மாதிரியமைத்தலில் பொருட்கள் அல்லது உருவங்களின் வெளிப்பரப்பைக் காட்ட  படத்தில் காண்பதுபோல் நாற்கோணக் கண்ணிகளை (quadrilateral meshes) அல்லது முக்கோணக் கண்ணிகளைப் பயன்படுத்துகிறோம். ஏனெனில் இது தோற்ற அமைவு வெளியிடுவதை எளிதாக்குகிறது.

தோற்ற மெய்ம்மை (VR) அசைவூட்டம் உருவாக்கும் இணையதளம் பேட்சஸ் (Patches)

இணைய உலாவிகளில் வேலை செய்யும் WebGL காட்சி உருவாக்க ஜாவாஸ்கிரிப்ட் நிரலகம் three.js பயன்படுத்தலாம் என்று முன்னர் பார்த்தோம். இந்த இணையதளம் three.js பயன்படுத்துகிறது. ஆகவே நாம் நிறுவத் தேவையில்லை. WebGL தவிர WebVR காட்சிகளும் உருவாக்கலாம். வடிவங்களை அமைத்தல், வண்ணங்களை தேவைப்படி மாற்றுதல், அசைவூட்டத்தின் வேகத்தை மாற்றுதல் போன்ற வேலைகளைச் செய்யலாம். நீங்கள் உருவாக்கிய அசைவூட்டத்தின் முன்னோட்டத்தை அதற்குள்ளேயே ஓட்டியும் பார்க்கலாம். எல்லாம் சரியாக இருந்தால் உங்கள் காட்சியின் இணைய முகவரியை எடுத்து VR சாதனத்தில் போட்டுப் பார்க்க முடியும்.

எளிய VR அசைவூட்டங்கள் உருவாக்க ஓபன்ஸ்பேஸ் 3D (OpenSpace3D) 

இதைப் பயன்படுத்த நிரல் எழுதத் தெரிவது அவசியமில்லை. பெரும்பாலான கோப்பு வடிவங்களில் 3D மாதிரிகளை இறக்குமதி செய்யலாம். உங்கள் பொருட்களைச் சேர்க்கலாம், நகலி எடுக்கலாம், நகர்த்தலாம் மற்றும் அசைவூட்டம் செய்யலாம். அடுத்து எந்த VR சாதனத்தில் காட்சிப்படுத்த வேண்டுமோ அதைத் தேர்வு செய்து ஏற்றுமதி செய்து கொள்ளலாம். அந்த சாதனத்தில் ஓடத் தேவையான எல்லாக் கோப்புகளையும் உருவாக்கிவிடும்.

மேம்பட்ட VR அசைவூட்டங்கள் உருவாக்க  பிளெண்டர் (Blender)

Next Gen என்ற முழுநீள அசைவூட்டப் படம் அனேகமாக முழுமையாக பிளெண்டரில் உருவாக்கி Netflix இல் வெளியிடப்பட்டது. இதுபோல் பல வணிக ரீதியான படங்கள் தயாரிக்கும் அளவுக்கு பிளெண்டர் ஆற்றலுடைய மென்பொருள். நவம்பர் 2020 வெளியீடு 2.91 அல்லது அதன்பின் வந்த வெளியீடுகளை VR அசைவூட்டங்கள் உருவாக்கப் பயன்படுத்தலாம். VR தொழில்துறையில் பயன்படுத்தப்படும் OpenXR என்ற தரநிலையை பிளெண்டர் ஆதரிக்கிறது. ஆகவே இவற்றில் தயாரித்த VR காட்சிகள் பெரும்பாலான VR சாதனங்களில் வேலை செய்யும். 

மொனாடோவில் (Monado) முப்பரிமாண VR அசைவூட்டம் ஓட்டலாம்

சரி, உங்களுக்குப் பிடித்த காட்சியை உருவாக்கிவிட்டீர்கள். உங்களிடம் இருக்கும் கணினிக்குத் தக்க VR ஓட்டும் மென்பொருள் தேவை. இதற்கு கட்டற்ற திறந்தமூல மொனாடோ பயன்படுத்தலாம். இது உபுண்டு லினக்ஸ், ஆன்டிராய்டு ஆகியவற்றிலும் ஓடும்.

நன்றி

  1. 3D Animation & 3D Rendering – Panther Studio

இத்தொடரில் அடுத்த கட்டுரை: VR அசைவூட்ட வளங்கள் பதிவிறக்கம்

VR அசைவூட்ட glTF கோப்புகள். முப்பரிமாண மாதிரிகள். இயற்பொருள் சார்ந்த தோற்ற அமைவு (Physically based rendering  – PBR). நிழலமைப்புகள் (shaders). இழையமைப்புகள் (textures).

ashokramach@gmail.com

%d bloggers like this: