கணினி அல்லது விளையாட்டு முனையம் (gaming console) VR தலையணி
கணினி அல்லது விளையாட்டு முனையத்தில் (game console) ஓடும் விளையாட்டு அல்லது செயலிக்கு காட்சி சாதனமாக செயல்படும் கம்பியால் இணைக்கப்பட்ட தோற்ற மெய்ம்மை (VR) தலையணிகள். எல்லா வேலைகளையும் கணினி அல்லது விளையாட்டு முனையம் செய்து விடும். ஆகையால் தலையணி எடை குறைவாக இருக்கும். ஆனால் கம்பியால் இணைத்திருப்பது தொந்தரவாக இருக்கலாம்.
திறன்பேசி (smartphone) VR தலையணி
திறன்பேசியைப் பொருத்தக்கூடிய வில்லை (lens) வைத்த அட்டைப்பெட்டி போன்ற தலையணிகளும் உள்ளன என்று முன்னர் பார்த்தோம். இரண்டு கண்களுக்கும் சற்றே விலகிய இரு காட்சிகளைக் (stereoscopic) காட்டும். ஆகவே உங்களால் முப்பரிமாணத்தை உணர முடியும். மேலும் தலையைத் திருப்பும்போது காட்சியையும் திருப்பும். ஆகவே உங்களுக்கு மூழ்கவைக்கும் அனுபவம் கிடைக்கும். திறன்பேசியிலேயே VR விளையாட்டு அல்லது செயலி ஓடும். உங்களிடம் திறன்பேசி இருந்தால், இதுதான் மிகக்குறைந்த செலவில் பார்க்கக்கூடிய VR.
தனித்தியங்கும் (standalone) VR தலையணி
தலையணியில் ஒருங்கிணைந்த VR அனுபவங்களை வழங்கத் தேவையான அனைத்துக் கூறுகளையும் கொண்ட சாதனங்கள். கம்பிகள் எதுவும் இல்லாததால் தளையற்ற முறையில் நீங்கள் தலையைத் திருப்பவும், நகரவும் முடியும். இவை விலை மற்றும் எடை அதிகமாக இருக்கும் மற்றும் திறனும் (power) குறைவாக இருக்கலாம்.
கைகளின் நகர்வு உணர்தல் (hand tracking)
VR சாதனத்தை இயக்கப் பயனர் கையில் கட்டுப்படுத்தியை (controller) வைத்திருப்பது ஒரு வழி. ஆனால் பல பயனர்கள் எந்தப் பொத்தானை அழுத்துவது என்று கண்டு கொள்ள சிரமப்படுகிறார்கள். கைகளின் நகர்வு உணர்தல் வைத்து சில விளையாட்டுகள் வந்துவிட்டன. இது VR சாதனத்திற்கு உள்ளீட்டு முறையாக கைகளின் அசைவைப் பயன்படுத்துகிறது.
நன்றி
இத்தொடரில் அடுத்த கட்டுரை: நிகழ்பட ஆட்டம் மற்றும் வரைகலைப் பொறிகள்
நிகழ்பட ஆட்டம் மற்றும் வரைகலைப் பொறிகள் (Game and graphics engines) ஏன் தேவை? பிளே கேன்வாஸ் (PlayCanvas). கோடோ விசை (Godot Engine). பாண்டா 3D (Panda3D).