ஃபெடோரா ப்ராஜெக்ட் என்பது கட்டற்ற மென்பொருள் ஆர்வலர்களும் அவற்றைப் பயன்படுத்துவோரும், அவற்றை உருவாக்குவோரும் இணைந்த ஓர் உலகளாவிய சமூகம். ஒரு சமூகமாய் வேலை செய்து, கட்டற்ற நிரல்களை உருவாக்குவதிலும் அவற்றைப் பரப்புவதிலும் முன்னோடியாய்த் திகழ்வதே எங்கள் குறிக்கோள். உலகின் மிக நம்பகமான திறமூல மென்பொருள் தொழில்நுட்பங்களை வழங்கும் நிறுவனமான ரெட் ஹேட் (Red Hat) ஃபெடோராவிற்கு நிதியுதவி வழங்கி வருகிறது. கூட்டாக இணைந்து உழைப்பதை ஊக்குவிக்கவும் புதுமையான கட்டற்ற மென்பொருட்கள் உருவாக வழிசெய்யவுமே ரெட் ஹேட் நிறுவனம் ஃபெடோராவிற்கு நிதியுவி செய்கிறது.
ஃபெடோராவை எது தனித்துவப்படுத்துகிறது?
கட்டற்ற மென்பொருட்களின் மதிப்பை நம்பும் நாங்கள், எல்லோரும் பயன்படுத்தவும் பகிர்ந்துகொள்ளவும் வல்ல தீர்வுகளைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் போராடி வருகிறோம். ஃபெடோரா இயங்குதளம் கட்டற்ற மென்பொருட்கள் கொண்டு உருவாக்கப்பட்டது மட்டுமல்ல, அதனை உங்களுக்கு வழங்குவதிலும் முழுக்க முழுக்க கட்டற்ற மென்பொருட்களே பயன்படுத்தப்படுகின்றன. லட்சக்கணக்கான மக்களுக்கு சேவை செய்து வரும் இந்த இணையதளம் கூட கட்டற்ற மென்பொருட்கள் கொண்டு உருவாக்கப்பட்டதுதான்.
மேலும், கூட்டு உழைப்பின் ஆற்றலை நாங்கள் நம்புகிறோம். எங்கள் வல்லுநர்கள் உலகெங்கிலும் உள்ள கட்டற்ற மென்பொருள் பணித்திட்டக் குழுக்களுடன் இணைந்து பணிபுரிகிறார்கள். இக்குழுக்கள் “அப்ஸ்ட்ரீம்” (upstream) என்று அழைக்கப்படுகின்றன. இவர்கள்தான் ஃபெடோராவில் காணப்படும் பெரும்பாலான மென்பொருட்களை உருவாக்குகின்றனர். எங்கள் பணியிலிருந்து எல்லோரும் பலன்பெறவும், ஏற்படும் மேம்பாடுகள் எல்லோருக்கும் மிக விரைவாய்க் கிடைக்கும் வண்ணம் அமையவும் நாங்கள் இவர்களோடு நெருங்கிப் பணியாற்றுகிறோம். இந்தக் குழுக்கள் செல்லும் அதே திசையில் நாங்களும்
பணியாற்றுவதன் மூலம், கட்டற்ற மென்பொருட்கள் ஒன்றோடு ஒன்று இணைந்தும் நன்றாகச் செயல்படுவதையும், பயனருக்கு மிகச்சிறந்த அனுபவத்தைத் தருவதையும் உறுதி செய்கிறோம். மேலும் பயனர்களுக்கு மட்டுமின்றி அப்ஸ்ட்ரீம்-க்கும் உதவக்கூடிய மேம்பாடுகளையும் நாங்கள் விரைவாய் கொண்டுவர முடியும்.
கட்டற்ற இயங்குதளம் பற்றிய தங்கள் பார்வையை ஒவ்வொருவரும் தங்கள் விருப்பப்படி செயல்படுத்த அதிகாரம் அளிக்கவேண்டும் என்று நம்புகிறோம். ஃபெடோராவை யார் வேண்டுமானாலும் மாற்றியமைத்து புதிய பெயரில் கூட வெளியிடலாம். அதற்கான மென்பொருட்களை நாங்கள் ஃபெடோராவிலேயே வழங்குகிறோம். சொல்லப்போனால், ரெட்ஹேட் எண்டர்ப்ரைஸ் லினக்ஸ்(RHEL), ஒரு குழந்தைக்கு ஒரு மடிக்கணினித் திட்டத்தின் XO கணினி, க்ரியேட்டிவ் காமன்ஸ்-ன் Live Content DVDகள் எனப்பல வழிப்பொருட்கள் தோன்ற அடித்தளம் அமைத்துக் கொடுத்தது ஃபெடோரா.
ஃபெடோராவின் மைய விழுமங்கள் என்ன?
சுதந்திரம், நண்பர்கள், அம்சங்கள், முதன்மை என்னும் நான்கும் ஃபெடோராவின் மைய விழுமங்கள் ஆகும். அவை கீழே விளக்கபட்டுள்ளன.
சுதந்திரம்
கட்டற்ற மென்பொருட்களை முன்னேற்றும் குறிக்கோளை நிறைவேற்ற, நாங்கள் வினியோகிக்கும் மென்பொருட்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது எங்கள் நம்பிக்கை. ஃபெடோராவை முற்றிலும் கட்டற்றதாகவும் எல்லோரும் பகிர்ந்துகொள்ளத் தக்கதாகவும் ஆக்க, தனியுரிம மென்பொருட்களுக்கு இணையான கட்டற்ற மென்பொருள்களை வழங்குகிறோம். ஆகவே, நாங்கள் உருவாக்கியதை யார் வேண்டுமானாலும் தங்கள் சொந்தத் தேவைகளுக்கு எந்தவொரு சட்டச் சிக்கலும் இல்லாமல் பயன்படுத்தலாம்; கட்டற்ற மென்பொருட்களை மேலும் பரப்பலாம்.
நண்பர்கள்
உலகெங்கிலும் உள்ள மக்கள் ஓர் உறுதியான சமூகமாய் இணைந்து உழைக்கும்போது வெற்றி கிட்டும் என்பது எங்கள் நம்பிக்கை. எங்கள் விழுமங்களுக்கு மதிப்பளித்து உதவ விழையும் யார்க்கும் ஃபெடோராவில் இடமுண்டு. பிறருடன் வெளிப்படையாக இணைந்து பணியாற்றுவதோடு, எங்களுக்கு நிதியதவி செய்வோருடன் உள்ள திடமான கூட்டணியின் மூலமும் பல உயரங்களை நம்மால் எட்ட முடியும்.
அம்சங்கள்
புதிய அம்சங்களை உருவாக்குவதற்கான கடின உழைப்பு கட்டற்ற மென்பொருட்களை மேலும் ஆற்றல்மிக்கதாகவும், நெகிழ்தன்மை கொண்டதாகவும், பல லட்சம் மக்களுக்குப் பயனுள்ளதாகவும் ஆக்குகிறதென்று நம்புகிறோம். கட்டற்ற மென்பொருட்களை இன்னும் முன்னோக்கி எடுத்துச் செல்வதானால், அதற்காக எங்கள் நிலைப்பாடுகளை மாற்றிக்கொள்ள நாங்கள் தயங்குவதில்லை. பல மென்பொருள் சமூகங்களோடு நேரடியாக இணைந்து பணியாற்றி, அவர்கள் உருவாக்கியதை ஃபெடோராவின் மூலம் எல்லோர்க்கும் கிடைக்கச் செய்கிறோம். இப்படியாக, ஃபெடோராவைப் பயன்படுத்தவோர், அல்லாதோர் என அனைவரும் பலனடைகிறார்கள்.
முதன்மை
புதுமையான எண்ணங்களின் ஆற்றலை நம்பும் நாங்கள், அவற்றை எங்களது ஒவ்வொரு வெளியீட்டிலும் வெளிப்படுத்தி வருகிறோம். எங்கள் வெளியீடுகள் வருடம் இருமுறை வருவதால், புதிய மென்பொருட்களைப் பயன்படுத்த நீண்ட காலம் காத்திருக்கத் தேவையில்லை. அதே சமயம், ஃபெடோராவிலிருந்து உருவாக்கப்பட்ட சில லினக்ஸ் இயங்குதளங்கள் நீண்டநாள் உறுதிப்பாட்டிற்கு உகந்தவை. ஆனால், எப்போதும் எதிர்காலத்தை நீங்கள் முதலில் பார்க்கும் வண்ணம், ஃபெடோராவை நாங்கள் புதுப்பித்துக்கொண்டே இருப்போம்.
மேலும் அறிய வேண்டுமா?
ஃபெடோரா என்பது ஒரு சிறப்பான இயங்குதளம் மட்டுமல்ல; கட்டற்ற மென்பொருட்களை மேம்படுத்தப் பாடுபடும் மக்களின் ஓர் அற்புதமான சமூகமும் ஆகும். நீங்களும் உதவ விரும்பினால் அதற்கும் வழிகள் உள்ளன. மேலும் அறிந்துகொள்ள கீழ்க்காணும் சுட்டிகளைப் பாருங்கள், ஃபெடோரா இயங்குதளம் பற்றியும், ஃபெடோரா பணித்திட்டம் பற்றியும், அதனைச் சாத்தியமாக்கும் மனிதர்களைப் பற்றியும் தகவல்கள் நிறைந்தது.
- Fedoraவை எப்போதே பதிவிறக்கு!
- Read an overview of the Fedora Project
- எங்களின் மைய விழுமங்களை பற்றி படியுங்கள்
- Read documentation for using and contributing to Fedora
- Fedoraவின் வாராந்திர செய்திகளை படியுங்கள்
- See common Fedora issues and how to handle them
- Report a new bug or request a change
விக்னேஷ் நந்த குமார் ஓர் இணைய வடிவமைப்பாளர் (web designer), கட்டற்ற மென்பொருள் கோட்பாட்டின் மேல் அசையாத நம்பிக்கை கொண்டவர். கட்டற்ற இணைய வடிவமைப்புத் தொழில்நுட்பங்களான HTML, CSS, Javascript ஆகியவற்றுடன் விளையாடுவதில் தீவிர ஆர்வம் கொண்டவர். வலைப்பதிவுகள் எழுதுதல், புகைப்படம் எடுத்தல், வலை உலாவல் ஆகியன இவரது ஓய்வுநேரச் செயல்கள்.
மின்னஞ்சல்: viky.nandha AT gmail DOT com
வலைத்தளம்: vigneshnandhakumar.in