USB cable க்குள் என்னதான் இருக்கிறது? | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 41

By | March 12, 2025

எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியில் பல்வேறு விதமான எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் குறித்து பார்த்து வருகிறோம். தற்கால கணினி மற்றும் மொபைல் துறையின் வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது USB (யு.எஸ்.பி)என அழைக்கப்படும் universal serial Bus தொழில்நுட்பம் தான்.

1995 ஆம் ஆண்டு மைக்ரோசாஃப்ட்,IBM உள்ளிட்ட ஏழு நிறுவனங்கள் இணைந்து யு.எஸ்.பி தொழில்நுட்பத்தை வடிவமைக்க தொடங்கியது. இதன் பயனாக, 1996 ஆம் ஆண்டு usb தொழில் நுட்பமானது அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தொழில்நுட்பத்தில் version ஒன்று தொடங்கி இப்பொழுது நான்கு வரை காணக் கிடைக்கிறது(Usb version 1 to 4).

இந்த தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டதன் மிக முக்கியமான நோக்கம் என்னவென்றால், அனைத்து விதமான கருவிகளிலும், ஒரே விதமான இணைப்பு முறையை பயன்படுத்துவது மற்றும் தரவுகள், மின்சாரம் ஆகிய அனைத்தையும் ஒரே இணைப்பு வடத்தின் மூலமாக கொண்டு செல்வது போன்றவை அடிப்படையாக கவனத்தில் கொள்ளப்பட்டன(universal connecting as well as  data and current transfer) .

தற்காலத்தில் யுஎஸ்பி தொழில்நுட்பமானது, பல்வேறு வகையில் மாற்றங்களை சந்தித்து இருக்கிறது type A,B,C என பலவகையாக usb தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. மேலும், இந்த தொழில்நுட்பத்தில் இருக்கக்கூடிய மிகப்பெரிய சிறப்பம்சம் என்னவென்றால் usb கேபிள்களை பயன்படுத்தி உங்களால் தரவுகளைப் பகிர முடியும், இணைப்பை வழங்க முடியும், அதே நேரம் மின்சாரத்தையும் கடத்த முடியும்.

தற்காலத்தில் பழமையான யுஎஸ்பி இணைப்புகள், டைப் சி வகையிலான இணைப்புகளின் மூலம் பதிலீடு செய்யப்பட்டு கொண்டு வருகிறது(Type C is replacing traditional USB). ஐரோப்பிய ஒன்றியம் போன்ற உலகளாவிய நாடுகள், டைப் சி தொழில்நுட்பத்திற்கு மாற தொடங்கியிருக்கின்றன.ஆனால், இதுவும் ஒருவகையில் usb-யின் கடைக்குட்டி தான்.

இந்த தொழில்நுட்பத்திற்கு பின்னால் பல்வேறு விதமான விந்தைகள் ஒழிந்து இருக்கிறது. ஆனால், நாம் அடிப்படையாக இந்த யுஸ்பி கேபிள்-ஐ வெட்டிப் பார்த்தால், நான்கே நான்கு நிற ஒயர்கள்(wires )மட்டும்தான் உங்கள் கண்களில் படும்..

இதில் சிவப்பு மற்றும் கருப்பு நிற இணைப்பு வடங்கள் முறையே ஐந்து வோல்ட் மற்றும் தரை இணைப்பிற்கு(Ground )பயன்படுத்தப்படுகிறது. தற்காலத்தில், வெளியாக கூடிய சில யுஎஸ்பி கேபிள்கள் அதிகப்படியான வோல்டேஜ் மின்சாரத்தை கூட தாங்கும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. ஆனாலும், பரவலாக பயன்படுத்தப்படும் யு எஸ் பி வடங்களில், உங்களுக்கு 5volt மின்னழுத்தத்தை பராமரிக்கும் வகையிலேயே தயாரிக்கப்படுகிறது.

சரி இந்த ரெண்டு wire களையும் விட்டுவிடுவோம். அதற்குள்ளே இன்னும் இரண்டு நிற ஒயர்கள் உங்களுக்கு காண கிடைக்கும்.அவை தான் வெள்ளை மற்றும் பச்சை. இவைதான் மிக மிக முக்கியமானவை. இந்த வெள்ளை வடமானது உங்களுக்கு தரவுகளை பெறுவதற்கு பயன்படுகிறது(Data+). அதேநேரம் பச்சை வடத்தின் மூலம், உங்களால் தரவுகளை கடத்த முடியும்(data-). அதனால்தான், ஒரே யுஎஸ்பி கேபிள் வைத்துக் கொண்டு ஒரே நேரத்தில் உங்களால் தரவுகளை அனுப்பவும் முடியும், தரவுகளை பெற முடியும். கேட்பதற்கு ஏதோ எளிமையாக இருக்கலாம்.ஆனால், அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தி கவனிக்க தவறும் ஒரு மிக முக்கியமான அம்சம் இது.

அந்த காலத்தில் எல்லாம் ஒயர்களின் வழியாக மின்சாரத்தை மட்டுமே அனுப்ப முடியும் என நினைத்துக் கொண்டிருந்த நமக்கு ,விந்தைகளைக் கொண்டு வந்து சேர்த்தது இந்த usb கேபிள். என்றும் கூட எச் டி எம் ஐ (HDMI),வி ஜி ஏ (VGA)போன்ற கேபிள்களை பயன்படுத்துகிறோம்.ஆனால், இவற்றில் இன்றளவும் மின்சாரத்தை கடத்த முடியாது. சரி டைப் சி தொழில்நுட்பத்தில், அப்படி என்னப்பா சிறப்பு இருக்கிறது? என்று கேட்டால் usb யை விடவும் டைப் சி சற்றே முன்னேறியது. டைப் சி தொழில்நுட்பத்தில், உங்களால் இன்னும் சிறப்பாக மின்சாரத்தையும் அதே நேரம் தரவுகளையும் பகிர முடியும்.

என்னதான் யுஎஸ்பி தொழில்நுட்பம் தரவுகளைப் பரப்ப,பகிர சிறப்பாக அமைந்தாலும் இங்கே சில குறைபாடுகளும் இருக்கத்தான் செய்கிறது. உதாரணமாக, என்னதான் ஏவி(AV )கேபிள், எச்டிஎம்ஐ(HDMI) கேபிள் களை போல இதனாலும் செயலாற்ற முடிந்தாலும், உடனுக்குடன் செட்டாப் பாக்ஸில் இருந்து தொலைக்காட்சிக்கு தரவுகளை கடத்துவதற்கு usb உகந்த தொழில்நுட்பம் அல்ல.

மேலும் அன்பு நண்பர்கள் வெளியூருக்கு பயணிக்கும் போது, தெரியாத இடங்களில் உங்களுடைய மொபைல் கருவிகளை சார்ஜ் செய்ய நேரிட்டால், அதற்காக வெறும் மின்சாரத்தை மட்டும் கடத்தும் யுஎஸ்பி(charging only usb cable) வடங்களை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இதை நான் ஏன் குறிப்பிடுகிறேன் என்றால்! உங்களுடைய usb வடத்தை வைத்து உங்களுடைய தரவுகளை மிக எளிமையாக திருட முடியும். இன்றளவில் நடத்தப்படக்கூடிய பெரும்பாலான தொழில்நுட்ப தகவல் திருட்டுகளுக்கு, இந்த யுஎஸ்பி வடங்களும் ஒரு மிக முக்கிய காரணம்.

மேலும், என்னதான் மிகக் குறைவான மின்னழுத்தம் வெளிப்பட்டாலும், இது போன்ற யுஎஸ்பி வடங்களை குழந்தைகளிடம் கொடுப்பதை தவிருங்கள்.இத்தகைய usb வடங்களை பற்களால் கடித்த குழந்தைகள் மின்னதிர்ச்சியால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த செய்திகளை கூட நான் பலமுறை கவனித்திருக்கிறேன். என்னதான் தொழில்நுட்ப பாதுகாப்பு அம்சங்கள் இருந்தாலும், எலக்ட்ரானிக் கருவிகளையும் கவனமாக கையாள வேண்டியது முக்கியமானது.

மேலும் தரம் குறைந்த usb கேபிள்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும். ISI certificate போன்ற முத்திரை கொண்ட, பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த usb கேபிள்களை மட்டும் வாங்கவும். தரம் குறைந்த கேபிள்கள், எளிதில் அறுந்து விட வாய்ப்பு இருப்பதோடு, மின்னதிர்ச்சி,தீப்பிடித்தல் போன்ற பிரச்சனைகள் கூட ஏற்படலாம். மேலும், உங்களுடைய மொபைல் பேட்டரிக்கும் அது உகந்ததாக அமையாது.

அதுபோல, ஏற்கனவே அறுந்து போன யுஎஸ்பி கேபிள்களை கண்டபடி ஒட்டவைத்து பயன்படுத்தாதீர்கள். ஏனெனில், இதனால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படும், மேலும் சிலர் ஒட்ட வைக்கிறேன்! என்கிற பெயரில் டேட்டாவை கடத்தும் வடத்தையும், மின்சாரத்தை கடத்தும் வடத்தையும் தெரிந்தும் தெரியாமல் இணைத்து விடுவார்கள். இதனால், உங்கள் மொபைல் போனில் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

மேலும், இது போன்ற யுஎஸ்பி கேபிள்களில் என்னதான் வெப்ப காப்பு(heat resistive )நடவடிக்கைகள் செய்யப்பட்டாலும், இத்தகைய கேபிள்கள் அருந்துவிட்டது, என்றால் அவற்றை பயன்படுத்தாது முறைப்படி அப்புறப்படுத்துவது நல்லது. அதை விடுத்து, மேலே டேப்பை சுற்றி பயன்படுத்தும் போது, வெப்பத்தின் காரணமாக தீ விபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக, தரம் குறைந்த usb கேபிளாக இருந்தால் பிரச்சனை அதிகமாக கூடும்.

இவை அனைத்தையும் நான் கவனித்த அனுபவத்தின் அடிப்படையில் குறிப்பிடுகிறேன். ஏனெனில், பல தருணங்களில் வருமுன் காப்பது சாலச்சிறந்தது.

அன்பு நண்பர்கள் ஒரு புதுவித தொழில்நுட்ப தகவலை எளிமையாக அறிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

மீண்டும் ஒரு எலக்ட்ரானிக்ஸ் பகுதியில் உங்களை வந்து சந்திக்கிறேன்.

கட்டுரையாளர்:-

ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
(தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி, நாகர்கோவில் – 02)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின்மடல் : srikaleeswarar@myyahoo.com
இணையம்: ssktamil.wordpress.com