நம்முடைய பெரும்பாலான எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளில் மின்தடைகள்,மின் தேக்கிகள், டையோடுகள்,ட்ரான்சிஸ்டர்கள் உட்பட பலவிதமான எலக்ட்ரானிக் பொருட்கள் குறித்து பார்த்திருக்கிறோம்.
என்னுடைய பிற எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளை படிக்க: kaniyam.com/category/basic-electronics/
இத்தகைய எலக்ட்ரானிக் பொருட்களை, வெறும் ஒரு சிறிய எலக்ட்ரானிக்ஸ் சாதனத்திற்குள் அடக்கி விட முடியுமா? என்று கேட்டால் மிகவும் கடினமான ஒன்றுதான் என்று உங்களுக்கு தோன்றலாம்.
உதாரணமாக, உங்களுடைய மொபைல் ஃபோன்களிலும் மின்தேக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன. அதே நேரம், நமது வீட்டில் பயன்படுத்தக்கூடிய மின்விசிறிகளில் கூட மின்தேக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன.
அதே அளவில் உள்ள மின்தேக்கியை கொண்டு, உங்களுடைய மொபைல் போனில் பயன்படுத்த முடியாது.
ஆனால், நீங்கள் எலக்ட்ரானிக் துறையில் இந்த வார்த்தையை நிச்சயமாக கடந்து கொண்டிருப்பீர்கள். அதுதான் ஐசி(IC ) . ஆங்கிலத்தில் இன்டகிரேட்டட் சர்க்யூட்(integrated circuit) என அறியப்படும் உள்ளார்ந்த மின் சுற்றுதான் எளிமையாக ஐ சி என அறியப்படுகிறது.
ஐ சி என்பதில் நீங்கள் கற்பனை செய்து பார்ப்பதை விடவும், அதிகமான எலக்ட்ரானிக் பொருட்களை ஒரு சில சென்டிமீட்டர் அளவுடைய சிலிகான் துண்டுக்குள் அடக்கி விட முடியும்.
உதாரணமாக, நீங்கள் மேலே பார்த்துக் கொண்டிருக்கும் மின்சுற்று படம் என்பது ஏதோ மிகப்பெரிய இயந்திரத்தின் மின்சுற்று படம் அல்ல.
சில சென்டிமீட்டர் அளவு மட்டுமே கொண்டு ஒரு உள்ளார்ந்த மின் சுற்றுப்படம் தான் மேலே வழங்கப்பட்டுள்ளது.
சில சென்டிமீட்டர் மட்டுமே கொண்ட இந்த ஐ சி சிப்பில் சுமார் 20 ட்ரான்சிஸ்டர்கள் வரை பயன்படுத்தப்படுகிறது.
சுமார் பத்திற்கும் அதிகமான, மின்தடைகள், சில மின்தேக்கிகள் ஆகிய அனைத்தும் சில சென்டிமீட்டர்களுக்குள் அடங்கி விடுகிறது.
உண்மையில், நீங்கள் இந்த பொருட்களை தனித்தனியாக வைத்து ஒரு மின்சுற்றை உருவாக்கினாலும் கூட இந்த ஐசியின் செயல் திறனை(power and performance )அதனால் ஈடு செய்ய முடியாது.
மிகவும் குறுகிய இடத்தில், அதிகப்படியான எலக்ட்ரானிக் கருவிகள் பிரிண்ட் செய்யப்பட்டு இருக்கின்றன.
ஐசி என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக உங்கள் மொபைல் போனில் இருக்கக்கூடிய சிம்கார்டுகளை கூட குறிப்பிட முடியும்..
ஏன்? நீங்கள் ஏடிஎம் இயந்திரங்களில் பயன்படுத்தும் ஏடிஎம் கார்டுகளில் இருக்கும் சிப்புகள் கூட இந்த அடிப்படையிலானது தான்.
எலக்ட்ரானிக் உலகின் மிகப்பெரிய விந்தை என அறியப்படுவது ஐசி தான்.
இன்றைக்கு நாம் பெரிய அளவில் பேசிக் கொண்டிருக்கும் கணினிக்கான i7 பிராசஸர்கள் ,மொபைல் போனுக்கான மீடியா டெக், ஸ்னாப் டிராகன் , ஆப்பிள் ஏ சீரிஸ் போன்ற அனைத்து சிப்புகளும் அடிப்படையில் ஐசிகள் தான்.
எந்த அளவிற்கு அதிகமான எலக்ட்ரானிக் பொருட்கள் பொதிந்து இருக்கின்றனவோ! அந்த அளவுக்கு செயல் திறனும்(performance )இருக்கும்.
ஐ சி துறை என்பது ஒரு மிகப்பெரிய கடல். குறை கடத்தியிலிருந்து முன்னேறி, இறுதியாக தற்போதைய மிக உச்சபட்ச தொழில்நுட்பம் ஐசி தான்.
அதை பதிலீடு செய்யக்கூடிய சில சர்க்யூட் தொழில்நுட்பங்கள் போன்றவை ஆராய்ச்சி நிலையத்தில் ஆய்வுகளில் இருப்பதாக அறிய முடிகிறது.
பெட்டி அளவிற்கு இருந்த ரேடியோ கருவிகள், நமது சட்டை பாக்கெட்டுக்குள் அடங்கிப் போனதற்கு நாம் ஐசி தொழில்நுட்பத்திற்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.
இருந்த போதிலும், ஐசி சுற்றுகளுக்கும் சில செயல்திறன் குறைபாடுகள் இருக்கின்றன. குறிப்பாக, இவற்றில் குறிப்பிட்ட பிக்கோ பாரட்(pico farad) அளவிற்கு அதிகமான மின் தேக்கிகளை பயன்படுத்த முடியாது.
மேலும், இவற்றிற்கு உள்ளாக மின்மாற்றிகளை(transformers) பொருத்த முடியாது .
ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அதிகமாக மின் தடைகளை(resistor) பயன்படுத்த முடியாது.
ஆனால், ஒருவேளை வருங்காலத்தில் இதற்கு ஏற்ற தொழில்நுட்பங்கள் வரலாம்.
இன்றைக்கு நாம் வீட்டில் பயன்படுத்தி வரும் மிக்ஸி, கிரைண்டர் போன்ற எலக்ட்ரிக்கல்(electrical) பொருட்களும் இன்னும் சிறிது ஆண்டுகளில் எலக்ட்ரானிக்(electronic) பொருட்களாக மாற்றமடையும்.
எப்படி நம்முடைய பழைய டிவிகள்,புதிய எல்ஈடி டிவிகளாக மாற்றமடைந்தனவோ! அது போல தான்.
நானே சிறுவயதில் ஆச்சரியப்பட்டு இருக்கிறேன்! வெறும், கட்டைவிரல் நகம் அளவிற்கு இருக்கக்கூடிய ஒரு மெமரி அட்டையில்(memory card) எவ்வாறு ஆயிரக்கணக்கான பாடல்களை பதிவு செய்ய முடியும் என்று.
ஆனால், அதற்குப் பின்பு இருக்கும் எலக்ட்ரானிக் விந்தைகளை அறியும்போது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.
ஆனால், என்னதான் இருந்தாலும் சுற்றுச்சூழல் விவகாரங்களில் உள்ளார்ந்த மின் சுற்றுகள் சிறப்பாக செயல்படுவதில்லை.
அதற்கு மிக முக்கியமான காரணம் நீங்கள் வழக்கமாக பயன்படுத்தக்கூடிய எலக்ட்ரிக்கல்(electrical) பொருட்கள் பழுதடைந்தால் உங்களால் எளிமையாக சரி செய்ய முடியும்..
ஆனால், தற்காலத்தில் வழியாக கூடிய எலக்ட்ரானிக்(eletronic) பொருட்களை உங்களால் எளிமையாக சரி செய்ய முடியாது.
குறிப்பாக, உள்ளார்ந்த மின்சுற்றுகளை நீங்கள் சரி செய்ய வேண்டும் என்று நினைத்தால், அது கனவில் கூட நடக்காத காரியமாக போகலாம்.
இதன் காரணமாக, அவற்றை குப்பைக்கு அனுப்ப வேண்டிய கட்டாயத்திற்கு நாம் தள்ளப்படுகிறோம்.
இதன் காரணமாக, ஆண்டு தோறும் பல லட்சம் டன் அளவிலான எலக்ட்ரானிக் கழிவுகள் உலகமெங்கும் சுற்றுச்சூழல் பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன.
மேலும், அதிகப்படியான மின்சாரத்தை கையாளும் திறனை தற்பொழுது வரை ஐ சி கள் பெற்று இருக்கவில்லை.
அதிகப்படியான மின்னழுத்த வேறுபாட்டில் பயன்படுத்தும் போது, மிக எளிமையாக பழுதடைந்து விடுகிறது இந்த உள்ளார்ந்த மின்சுற்றுகள்.
இதுபோல, சில குறைபாடுகள் இருந்தாலும் தற்கால எலக்ட்ரானிக் உலகில் தவிர்க்க முடியாத ஒரு தொழில்நுட்பமாக உள்ளார்ந்த மின்சுற்றுகள் திகழ்கின்றன.
இந்த விந்தை மிகுந்த எலக்ட்ரானிக் உலகில் வருங்கால மின் சுற்றுகள் என்னவாக இருக்கப்போகிறது? என்று உங்களுக்கு ஏதேனும் கணிப்புகள் இருந்தால், என்னுடைய மின் மடல் முகவரிக்கு மடல் இயற்றவும், அதையும் ஒரு கட்டுரையாக எழுத முயற்சிக்கலாம்.
கட்டுரையாளர்:-
ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
( தென் திருவிதாங்கூர் இந்து கல்லூரி ,
நாகர்கோவில்-02 )
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின்மடல் முகவரி: srikaleeswarar@myyahoo.com
இணையம்: ssktamil.wordpress.com