தொடர்ந்து பல எலக்ட்ரானிக் தகவல்கள் குறித்து பார்த்து வருகிறோம்.
கடந்த கட்டுரையில் கூட, மெமரி கார்டுகள் எவ்வாறு வேலை செய்கிறது? என்று விவாதித்திருந்தோம்.
இன்றைய கட்டுரையில் நாம் பார்க்க இருப்பது ஆப்டோ ஐசோலேட்டர்கள்(opto isolators).
நான் முதலில் சார்ஜர்கள் தொடர்பான ஒரு கட்டுரையை எழுதலாம் என முடிவு செய்திருந்தேன். அதற்கான தரவுகளை சேகரித்துக் கொண்டிருக்கும் போது தான், சார்ஜர்களின் உள்ளாக ஆப்டோ ஐசோலேட்டர்கள் எனும் எலக்ட்ரானிக் சாதனம் பயன்படுத்தப்படுவது குறித்து அறிந்து கொண்டேன்.
நான் இதுவரை ஆப்டோ ஐசோலேட்டர்கள் குறித்து படித்தது கிடையாது.
எனவே, இந்த கட்டுரையில் ஏதேனும் தவறுகள் இருந்தால் தயங்காமல் என்னிடம் தெரிவிக்கவும்.
நான் கற்றுக் கொண்ட தகவல்களை இந்த கட்டுரையின் மூலமாக உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
என்னுடைய இன்ன பிற எளிய எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளையும் நீங்கள் பார்வையிட விரும்பினால், கீழே வழங்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தவும்.
ஆப்டோ ஐசோலேட்டர்கள் என்பது எலக்ட்ரானிக் துறையில் பயன்படுத்தப்படக்கூடிய ஒரு குறிப்பிடத்தக்க எலக்ட்ரானிக்ஸ் சாதனம்.
ட்ரான்சிஸ்டர் மற்றும் எல்இடி தொழில்நுட்பத்தை இணைத்து ஆப்டோ ஐசோலேட்டர்கள் உருவாக்கப்படுகின்றன.
இவை ஆப்டோ கப்லர்ஸ்(couplers) என்றும் அழைக்கப்படுகின்றன.
இந்த ஆப்டோ ஐசோலேட்டர்களின் ஒருமுனையில் அகச்சிவப்பு ஒளியை உமிழக்கூடிய எல்இடி விளக்குகள் இருக்கும் மறுமுனையில் ஒளிமின் ட்ரான்சிஸ்டர்கள் இருக்கும்.
எப்படி சோலார் பேனல்கள் வேலை செய்கிறதோ! எவ்வாறு led விளக்குகள் வேலை செய்கிறதோ! அவை இரண்டையும் இணைத்து இந்த ஆப்டோ ஐசோலேட்டர்கள் இயங்குகின்றன.
உதாரணமாக, நீங்கள் ஆப்டோ ஐசோலேட்டரின் ஒருமுறைக்கு மின் இணைப்பை வழங்கும்போது, அந்த மின்சாரமானது எல்இடி விளக்கில் அகச்சிவப்பு ஒளி கற்றைகளாக மாற்றப்படுகிறது. இவ்வாறு எல்.இடிலிருந்து உமிழபடும் அகச்சிவப்பு ஒளி கற்றைகள் மறுமுனையில் இருக்கக்கூடிய ஒளிமின் ட்ரான்சிஸ்டர் களை அடைகின்றது.
இவ்வாறு அடையக்கூடிய ஒளியானது மீண்டும் மின்சாரமாக மாற்றப்படுகிறது.
இதற்கு நேரடியாகவே நாம் மின்சாரத்தை வழங்கி விடலாமே என்று நீங்கள் நினைக்கலாம்.
ஆனால் ஐசோலைட்டர்கள் என்று பெயரிலேயே இருப்பது போல இதனுடைய பணியும் அதுதான்.
சில நுணுக்கமான மின் சுற்றுகளை கையாளும்போது அதிக மின்னழுத்தத்தை நேரடியாக வழங்க முடியாது.
அத்தகைய சூழலில் நேரடியான தொடர்பு இன்றி, இவ்வாறாக ஒளிவடிவில் மின்சாரத்தை வழங்க முடியும்.
நம் அனைவர் வீட்டிலும் மொபைல்களை சார்ஜ் செய்ய சார்ஜர்களை பயன்படுத்துகிறோம்.
இந்திய வீடுகளில் 220 வோல்ட் மின்சாரம் வருகிறது. ஆனால் நம்முடைய சார்ஜர்கள் 5-15 வோல்ட் வரை மட்டுமே மின்சாரத்தை எடுக்க கூடியவை.
இதற்குப் பின்னால் மின்மாற்றிகள், டையோடுகள், ட்ரான்சிஸ்டர்கள் உள்ளிட்ட பல கருவிகள் பொதிந்து இருந்தாலும்.
இந்த அனைத்து கருவிகளாலும் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அதிகமான மின்சாரத்தை தாங்க முடியாது.
உதாரணமாக, மின்னல் தாக்கும்போது பல லட்சம் வோல்ட் அளவிலான மின்சாரம் பாயக்கூடும்.
அவ்வாறு அதிகப்படியான மின்னழுத்தம் ஏற்படும் போது, நிச்சயமாக இந்த எலக்ட்ரானிக் சாதனங்கள் சேதமடைந்து விடும்.
ஆப்டோ ஐசோலேட்டர்கள் இந்த பிரச்சனைக்கு தீர்வாக வருகின்றன.
ஆப்டோ ஐசோலேட்டர்களால் சில ஆயிரம் வோல்டு மின்சாரம் வரை தாங்க முடியும். அவ்வாறு வரக்கூடிய அதிகப்படியான மின்னழுத்தத்தை மட்டுப்படுத்தி, கருவிகளில் இருக்கக்கூடிய குறைந்த மின் அழுத்தத்தில் இயங்கக்கூடிய எலக்ட்ரானிக் சாதனங்களை பாதுகாக்கிறது.
ஒரு மிக முக்கியமான பாதுகாப்பு பணிக்காகவே ஆப்டோ ஐசோலேட்டர்கள் பயன்படுத்தப்படுகிறது.
மேலும், உயர் மின்னழுத்த நிலையில் இருந்து குறைந்த மின்னழுத்த கருவிகளை பிரித்து வைக்கக்கூடிய ஒரு பணியை செய்கிறது.
ஒளி வடிவில் மின்சாரம் கடத்தப்படுவதால் அதிகப்படியான மின்சாரம் செல்வது தவிர்க்கப்படுகிறது.
தற்காலத்தில் கணினிகள், வீட்டு உபயோக எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் உட்பட எலக்ட்ரானிக் உலகின் முக்கியமான பல கருவிகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
குறிப்பாக, உங்கள் வீட்டில் உள்ள மொபைல் சார்ஜர்களில் நிச்சயமாக ஆப் டோ ஐசோலேட்டர்கள் இருக்கும்.
மேலும் மின்சாரத்தில் இருக்கும் இரைச்சலை(electrical noise)கூட இதனால் சரி செய்ய முடியும்.
மேலும், இவற்றில் அகச்சிவப்பு ஒளியை கடந்து பலவிதமான ஒளியை உமிழக்கூடிய வகையிலான, ஆப்டோ ஐசோலேட்டர்களும் காணக் கிடைக்கின்றன.
அவற்றின் பணிக்கு ஏற்றார் போல ட்ரான்சிஸ்டர் வகை,ரெசிஸ்டர் வகை திடநிலை வகை, டையோடு வகை, triac வகை என பல வகைகளில் ஆப்டோ ஐசோலேட்டர்கள் கிடைக்கின்றன.
அடிப்படையில், நான் முன்பே கூறியது போல ஒளிமின் டையோடு மற்றும் எல்இடி விளக்கு ஆகியவற்றின் தத்துவத்தை பயன்படுத்தி தற்கால எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களில் தவிர்க்க முடியாத பொருளாக மாறி இருக்கிறது ஆப்டோ ஐசோலேட்டர்கள்.
இந்தக் கட்டுரையின் மூலமாக ஆப்டோ ஐசோலேட்டர்கள் குறித்த அடிப்படை தகவல்களை அறிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
மேற்படி, இந்த கட்டுரை குறித்து உங்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் தயங்காமல் என்னுடைய மின்மடல் முகவரிக்கு மடல் இயற்றுங்கள்.
உங்களுடைய கருத்துக்கள் எப்போதும் வரவேற்கப்படுகிறது.
மீண்டும் ஒரு எளிய எலக்ட்ரானிக் கட்டுரையோடு உங்களை சந்திக்கிறேன்.
கட்டுரையாளர்:-
ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
(தென் திருவிதாங்கூர் இந்து கல்லூரி, நாகர்கோவில் – 02)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின்மடல் முகவரி : srikaleeswarar@myyahoo.com
இணையம் : ssktamil.wordpress.com