விக்கிபீடியா எழுத்தாளர் கி.மூர்த்திக்கு விருது

By | August 2, 2025

விக்கிபீடியா தளமானது கட்டற்ற முறையில் உலகளாவிய தரவுகளை நம் விரல் நுனிகளில் கொண்டு வந்து சேர்க்கும் தரவு களஞ்சியமாக விளங்குகிறது. இத்தகைய சிறப்புமிக்க விக்கிப்பீடியா தளத்தில், தமிழிலும் 1,50,000 + கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.

தமிழ் விக்கிபீடியா தளத்தில் முதல் நபராக பத்தாயிரம் கட்டுரைகளை நிறைவு செய்த பெருமையை கொண்டவர் திரு.கி.மூர்த்தி அவர்கள். விக்கிபீடியாவில் இத்தகைய ஒரு சாதனையை நிகழ்த்தியதற்காக பல்வேறு தளங்களில் இருந்தும் அவருக்கு பாராட்டுதல்கள் கிடைத்திருந்தன.

பெரும் சாதனையை சலனமின்றி  நிகழ்த்திவிட்டு எளிமையாக பேசக்கூடிய பண்பை கொண்டவர். அவர் பத்தாயிரம் கட்டுரைகளை நிறைவு செய்த பிறகு, ஒரு நாள் ஒரு மணி நேரம் அளவிற்கு அவரோடு பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. தன்னுடைய அலுவலக பணிகளுக்கு மத்தியில் கட்டுரைகளை எழுதுவதில் இருந்த சிக்கல், விடாத தமிழ் மீதான ஆர்வம், கவிக்கோ அப்துல் ரகுமானின் மாணவர் என பல்வேறு சுவாரசியமான தகவல்களை என்னோடு பகிர்ந்து கொண்டிருந்தார்.

அன்னாரின் சிறப்புகளை பாராட்டி,  தமிழ் பெரும் எழுத்தாளர், மறைந்த பேராசிரியர் மா. நன்னன் அவர்களின் நினைவாக நடைபெற்ற 22 ஆவது நன்னன் குடி விழாவில், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் கையால் செம்மல் நினைவு விருதை பெற்றிருக்கிறார் விக்கிபீடியா எழுத்தாளர் திரு. கி.மூர்த்தி அவர்கள்.

அன்னாரது நீண்ட நெடிய பயணத்தில் இது வெறும் சிறிய மைல்கல் தான். எவ்வித சுய லாப நோக்கமும் இன்றி தமிழ் தனை உலகறியச் செய்யும் உயரிய சிந்தனையோடு விக்கிபீடியாவில் எழுதிக் கொண்டிருக்கும் மூர்த்தி அவர்களுக்கு கிடைத்திருக்கும் இந்த அங்கீகாரம் நம் தமிழ் வளர்ச்சிக்கான நீடித்த நிலைத்து கால கண்ணாடி.

அன்னாரின் வழியில் இளைய சமூகமும் இணையத்தில் தமிழ்தனை வளர்த்து, தொழில்நுட்பங்களை தமிழ்தனில் படைத்து, தொடர்ந்து என்றும் இளம் மொழியாய் நம் தமிழ் மொழியை உலகறியச் செய்வோம்.

விருது பெற்றமைக்காகவும், தொடர்ந்து மென்மேலும் பல விருதுகளை பெறுவதற்காகவும் திரு.கி.மூர்த்தி அவர்களை வாழ்த்துவதில் பெருமை கொள்கிறது கணியம் அறக்கட்டளை. தொடரட்டும் அன்னாரது அரும்பணி. செழிக்கட்டும் தமிழ் மொழி.

கட்டுரையாளர்:-

ஸ்ரீ காளீஸ்வரர் செ,

இளம் அறிவியல் எழுத்தாளர்,

முதுகலை இயற்பியல் மாணவர்,

ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி,

நாகர்கோவில் -03

தொடர்புக்கு : srikaleeswarar@myyahoo.com

வலைதளம்: ssktamil.wordpress.com

Leave a Reply