எளிய தமிழில் Car Electronics 15. ஊர்திக் கம்பிதைத்தல்

இன்று கார்களில் பல மின்னணு பாகங்கள் பொருத்தப்படுகின்றன என்று நாம் பார்த்தோம். இவை நகர்தல், திருப்புதல், நிறுத்துதல் போன்ற அடிப்படைச் செயல்பாடுகள் தவிர, பல்வேறு தகவல், பொழுதுபோக்கு செயல்பாடுகளையும் செய்கின்றன. இந்த மின்னணு பாகங்களைக் கட்டுப்படுத்துவதற்கும், ஊர்தியின் ஒவ்வொரு பகுதிக்கும் சக்தியையும் சமிக்ஞைகளையும் கடத்துவதற்கும் மின்கம்பிகள் இன்றியமையாதவை. கம்பிதைத்தல் (Wiring Harness) என்பது இம்மாதிரியுள்ள பல நூற்றுக்கணக்கான மின்கம்பிகளை உறைகளுக்குள் கட்டித் தொகுத்து, அடையாளமிட்டு, ஒழுங்கமைத்து வைப்பதற்கான ஒரு பயனுள்ள அமைப்பு ஆகும். இது மின் கம்பிகளை மையத்தில் வைத்துச் சுற்றியுள்ள இணைப்பிகள் (connectors), முனையங்கள் (terminals), கவ்விகள் (clamps), உறைகள் (sheaths) போன்ற பிற பாகங்களையும் உள்ளடக்கியது.

Automotive-wiring-harness

கார் கம்பிதைத்தல்

ஊர்திகளில் பயன்படுத்தும் கம்பிகள்

செம்பு, அலுமினியம் ஆகிய இரண்டு முக்கிய உலோகங்களில் ஊர்திக் கம்பி தயாரிக்கப்படுகிறது. அலுமினியத்தை விட செம்பு அதிகக் கடத்தும் தன்மை கொண்டது, நெகிழ்வானது மேலும் அரிக்கும் (corrosion) வாய்ப்பும் குறைவு. ஆனால் செம்பு அதிக எடை கொண்டது மட்டுமல்லாமல் விலை ஏற்ற இறக்கங்களுக்கும் ஆளாகிறது. 

மின்னோட்ட செயல்பாட்டு வரம்பு

ஒரு கம்பியால் கையாளக்கூடிய மின்னோட்டத்தை ஆம்பியர்களில் சொல்கிறோம். எடுத்துக்காட்டாக வீட்டில் விளக்கு, மின்விசிறி ஆகியவற்றுக்கு நாம் பயன்படுத்துவது 5 ஆம்பியர் கம்பி. கம்பியின் தடிமனை கேஜ் (American Wire Gauge – AWG) அல்லது விட்டம் மிமீ (mm) இல் சொல்கிறோம். எடுத்துக்காட்டாக 18 கேஜ் கம்பியின் விட்டம் சுமார் 1 மிமீ இருக்கும்.

ஊர்திக் கம்பியின் மேல் பொதுப்பயன் நெகிழி (General Purpose Thermoplastic – GPT) அல்லது குறுக்கு-இணைப்பு (cross-link) மின்காப்பு (insulation) பூசலாம். GPT செலவு குறைந்தது ஆனால் குறுக்கு-இணைப்பு மின்காப்பு அதிக வெப்பத்தைத் தாங்கக் கூடியது, அத்துடன் நீடித்தும் உழைக்கும்.

சமிக்ஞைகளை அனுப்பும் கம்பிகளுக்கு மின்காந்தக் குறுக்கீட்டிலிருந்து (Electromagnetic Interference – EMI) பாதுகாக்கக் கவசம் (shield) தேவைப்படுகிறது. கம்பி வடத்தின் (cable) தேவைகளைப் பொறுத்து இதற்கு உலோக மென்தகடு (foil) அல்லது பின்னல் (braid) கவசம் பயன்படுத்தப்படுகிறது.

திறந்த மூல வயர்விஸ் (WireViz)

இம்மாதிரியுள்ள பல நூற்றுக்கணக்கான மின்கம்பிகளை எவ்வாறு வடிவமைப்பது? இதைக் கைமுறையாகச் செய்வதென்றால் எவ்வளவு மெனக்கெடவேண்டும்? 

வயர்விஸ் திறந்த மூலப் பைதான் (Python) கருவி நாம் படிக்கக்கூடிய YAML உள்ளீட்டுக் கோப்புகளை எடுத்து, நம் திட்டத்தில் உள்ள அனைத்துக் கம்பிகளும் எங்கு செல்கின்றன என்பதை மின் சுற்று வடிவப்படங்களாகக் (wiring diagrams) காட்டும். தேவையான கம்பிகளின் நீளத்தையும் எல்லாவற்றையும் இணைக்கத் தேவையான இணைப்பிகளின் வகைகளையும் ஆவணப்படுத்தவும், பாகங்களின் பட்டியல் (Bill of Materials – BOM) உருவாக்கவும் செய்கிறது.

எந்த உரைத் தொகுப்பியிலும் YAML கோப்பைத் திறந்து பார்க்கலாம். ஆனால் தொகுப்பதற்கு எக்லிப்ஸ் (Eclipse) போன்ற IDE அல்லது நோட்பேட்++ (Notepad++) போன்ற நிரல் தொகுப்பியைப் பயன்படுத்துவது சிறந்தது. இவை தொடரியலை அதற்குறிய வண்ணத்தில் காட்டுதல் (color syntax highlighting), சரிபார்த்தல் (validation),  தானியங்கு வடிவமைத்தல் (auto format), பிழைகளைச் சுட்டிக்காட்டுதல் (linter) போன்ற பல அம்சங்கள் கொண்டவை.

நன்றி

  1. Benefits And Applications Of Automotive Wire Harnesses – Miracle Electronic Devices Pvt. Ltd.

இத்தொடரில் அடுத்த கட்டுரை: மின்னணு இயக்கத் தடுப்பி (Electronic Immobilizer)

கம்பிகளை நேரடியாக இணைத்துப் பழைய கார்கள் திருட்டு. சில பாகங்களை முடக்குவதன் மூலம் இயக்கத் தடுப்பி செயல்படுகிறது. இந்த அமைப்பில் உள்ள சில சிக்கல்கள்.

ashokramach@gmail.com

%d bloggers like this: