வேர்ட்பிரசு – சுழியத்திலிருந்து…01

வேர்ட்பிரசு – சுழியத்திலிருந்து…

 

கடந்த 2003 ஆம் ஆண்டு மேட் முல்லன்வெக், (Matt Mullenweg) மற்றும் மைக் லிட்டில் (Mike Little) வேர்ட்பிரசு (WordPress) என்ற கட்டற்ற மென்பொருளை வலைப்பதிவுகளை நிர்வகிப்பதற்காக உருவாக்கிய போது அதை சீந்துவோர் யாருமில்லை, உருவாக்கியவர்களோடு சேர்த்து பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கை பத்தைக் கூடத் தாண்டவில்லை. அதற்கு முன்பு வெளிவந்த b2 cafelog என்ற வலைப்பதிவு மென்பொருளின் தொடர்ச்சியாகத்தான் வேர்ட்பிரசை மேட்டும், மைக் லிட்டிலும் உருவாக்கினார்கள். அது வெறும் வலைப்பதிவுகளை உருவாக்குவதற்கான கருவியாகத்தான் இருந்தது. ஆனால், இன்று வேர்ட்பிரசு வெறும் வலை பதிவதற்கான கருவி மட்டுமல்ல, பல நாளிதழ்கள், தனியார் மற்றும் அரசாங்க நிறுவனங்கள், இணையதள உள்ளடங்களை நிர்வகிக்கும் கருவியாக (Web Content Management Service) வேர்ட்பிரசை இன்று பயன்படுத்தி வருகிறார்கள்.

ஒரு மென்பொருளின் முதல் பதிப்பை உடனே வெளியிட்டு விடுங்கள், அது சொதப்பினாலும் பரவாயில்லை

இது மேட் உதிர்த்த ஒரு மேற்கோள். இப்படித்தான் முதல் பதிப்பில் சில பேர் மட்டும் பயன்படுத்திய வேர்ட்பிரசு இன்று சில கோடி பயனர்களைக் கொண்டுள்ளது. இந்த வளர்ச்சியின் பின்னால் இருக்கும் பல்வேறு காரணிகளையும், வேர்ட்பிரசை முழுமையாகவும் திறம்படவும் கையாள உதவக்கூடிய பல்வேறு சாத்தியங்களையும் வழிமுறைகளையும் விளக்குவதே இத்தொடரின் நோக்கம். மிகவும் துவக்கநிலையில் இருந்து சிறந்த பயன்பாட்டாளராக, உருவாக்குநராக (Developer) உருப்பெறுவது வரையிலான பல நிலைகளை இக்கட்டுரைகள் கொண்டிருக்கும். சமூக வலைத்தளங்கள் இன்று கோலோச்சுவதைப் போல, அந்த காலகட்டத்தில் வலைப்பதிவுகள் தான் உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்திருந்த வேதாளம். ஒவ்வொருவரும் அதைத் தங்கள் முதுகுகளில் ஏற்றிக்கொள்ளத் துடித்துக் கொண்டிருந்தார்கள். கூகிளும் தன்னுடைய blogspotஐ வெளியிட்டது. அதே சமயத்தில் வேர்ட்பிரசும் தன்னுடைய வழங்கியில் இலவசமாக வேர்ட்பிரசை பயனர்களுக்கு வழங்கும் சேவையை வழங்கி வந்தது. இன்றும் இந்தத் துறையில் பலர் போட்டியில் இருந்தாலும் இவர்கள் இருவர் தான் உச்சியில் நிற்கும் சாகச வீரர்கள்.

 மெல்ல மெல்ல அடுத்தடுத்த பதிப்புகளில் சேவைகளைக் கூட்டி வந்தார்கள். நீட்சிகளை (Plugins) அறிமுகப்படுத்தும் வசதியை 2004ஆம் ஆண்டு கொண்டுவந்தார்கள். அதற்கு அடுத்த ஆன்டு நிலையான பக்கங்களை (Pages) உருவாக்கிக் கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டது. (blogspotஇல் இந்த வசதி மிகச் சமீபத்தில் 2009ஆண்டுதான் வழக்கத்திற்கு வந்தது. அதுவும் 10 பக்கங்களை மட்டுமே உருவாக்க முடியும் என்ற வரன்முறையோடு). இதே ஆண்டுதான் வார்ப்புருக்களை(Themes) பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பை வழங்கினார்கள்.  நிரலாக்கம் (coding) தெரியாத சாதாரன பயனர்களும் வேர்ட்பிரசை பயன்படுத்த வழி ஏற்பட்டது இந்த வெளியீட்டுக்குப் பிறகுதான்.  வேர்ட்பிரசை பொறுத்தவரை, இரு வகையான சேவை வழங்கப்படுகிறது. ஒன்று, அவர்களுடைய வழங்கியில் (Server) பயன்டுத்திக்கொள்வது. இங்கு தளத்தின் பெயர் துணைத் தளப் பெயர்களாக (Sub domains) இருக்கும். உதாரணமாக http://kaniyam.wordpress.com என்ற பெயரில் இயங்கும். நாம் விரும்பினால், நம்முடைய பெயரைப் பதிவு செய்து அவர்களுடைய வழங்கியையே பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் எக்கச்சக்க கட்டுப்பாடுகள் உண்டு, (இந்த இடத்தில் கட்டற்ற, சுதந்திரம் போன்ற பல கோட்பாடுகள் செயலிழந்து போகின்றன.) நாம் பயன்படுத்தும் வார்ப்புருவில் எத்தகைய மாற்றங்களையும் செய்ய முடியாது. (மிகச்சமீபத்தில் தான் வார்ப்புருக்களை நமக்கேற்றபடி திருத்தம் செய்து கொள்ளும் வாய்ப்பை வழங்கியிருக்கிறார்கள், அதுவும் கட்டணம் செலுத்தி மட்டுமே பெற முடியும்.) அதே போல, நாம் விரும்பும் நீட்சிகளையும் நிறுவி பயன்படுத்த முடியாது.  இரண்டாவது வகை, வேர்ட்பிரசைத் தரவிறக்கி நம்முடைய வழங்கியில் நிறுவி நிர்வகித்துக் கொள்ளுதல். வழங்கியைப் பயன்படுத்திக் கொள்வதற்கான சந்தாத் தொகை, நம் தளப் பெயருக்கான சந்தாத் தொகை ஆகியவை மட்டுமே செலவு. மற்றபடி வேர்ட்பிரசு மென்பொருளைப் பயன்படுத்திக் கொள்வதற்காக நாம் எந்த கட்டணமும் செலுத்தத் தேவையில்லை.  நான் கட்டற்ற மென்பொருட்கள், கட்டற்ற சுதந்திரம் போன்றவையெற்றலாம் முழுதாக பயன்படுத்தியது வேர்ட்பிரசில் தான். (பிற கட்டற்ற மென்பொருட்களில் நான் பயணர் மட்டுமே)

இதன்பிறகு கூடிவந்த பயனர் எண்ணிக்கை மலைக்க வைக்கும் அளவுக்கு இருந்ததால் வேர்ட்பிரசு தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்ட பலரும் அதற்கான வார்ப்புருக்கள்(Themes) மற்றும் நீட்சிகளை(Plugins) உருவாக்கத் தொடங்கினார்கள். பயனர்களின் எண்ணிக்கையோடு, உருவாக்குநர்களுடைய (Developers) எண்ணிக்கையும் உயர்ந்தது.

 

சந்தையின் வளர்ச்சி, கட்டண வார்ப்புரு மற்றும் நீட்சிகளின் (Premium Extensions) உருவாக்கத்தில் பல நிறுவணங்கள் உருவாக காரணமாக அமைந்தது. உதாரணமாக, StudioPress, Woo themes, DIY themes, iThemes, Thematic, Pagelines போன்ற பல நிறுவனங்கள் இன்று ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இவற்றில் பெரும்பாலான நிறுவனங்கள், தங்களுக்கென ஒரு முதன்மை வார்ப்புருவை (Parent theme/Frame work) உருவாக்கி வைத்துள்ளன. இந்த முதன்மை வார்ப்புருவை ஒட்டி பல சேய் வார்ப்புருக்களை (Child themes) உருவாக்கி வருகின்றன. Theme forest, Elegant themes, Mojo themes போன்ற நிறுவனங்கள் இந்த முதன்மை வார்ப்புருக்களைச் சாராத பல தனித்த வார்ப்புருக்களையும் விற்பனை செய்கின்றனர்.

 இதேபோல, நீட்சிகளிலும் சில நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. பல நீட்சிகள், வேர்ட்பிரசின் கட்டமைப்புக்கு உட்பட்டு பல புதிய சாத்தியங்களை உருவாக்கியிருக்கின்றன. உதாரணமாக  Woo themes நிறுவனம் WOO COMMERCE என்ற நீட்சியை வெளியிட்டதானது வேர்ட்பிரசின் முகத்தையே மாற்றியமைத்து விட்டது என சொல்லலாம். இதன் மூலம், இணையம் வழியான வணிகம் சார்ந்த தளங்களை (e-commerce websites) வேர்ட்பிரசை கொணட உருவாக்குவதற்கான சாத்தியங்கள் அதிகரித்திருக்கிறது.  இப்படி, வார்ப்புருக்களின் வளர்ச்சி வேர்ட்பிரசு தளங்களை அழகாக்கியதில் முக்கிய பங்கு வகித்தன, அதே போல நீட்சிகளின் வளர்ச்சி வேர்ட்பிரசு தளங்களை பல்வேறு வகைப்பட்ட தளங்களை உருவாக்க காரணமாக அமைந்தன.  இதெல்லாம் சரி, நான் ஏன் வேர்ட்பிரசை பயன்படுத்த வேண்டும்?
  • முதலாவது இது ஒரு கட்டற்ற மென்பொருள்.

  • கடந்த ஆன்டு (2011) நடத்தப்பட்ட புள்ளிவிவரத்தில் வேர்ட்பிரசு பயனர்களில் பெரும்பாலானோர், நீங்கள் வேர்ட்பிரசை பயன்படுத்த காரணம் என்ன எனக்கேட்டபோது கூறியது EASE OF USE” . இதன் பயணர் இடைமுகப்பும், செயல்பாடுகளும் சாதாரணமாகவே புரிந்து கொள்ளக் கூடியது. வேர்ட்பிரசு மென்ருளை நீங்கள் பயண்படுத்த தொடங்கிய சில தினங்களிலேயே இதில் நீங்கள் திறமை பெற்றுவிடக்கூடிய அளவுக்கு மிகவும் சுலபமானது.

  • வேர்ட்பிரசு, நிறுவும் வழிமுறையில் மிக சுலபமானது. பெரும்பாலும் எல்லா வழங்கி சேவைகளிலும் நிறுவிக்கொள்ள முடியும். வேர்ட்பிரசுக்கு மட்டுமே தனியான சேவையை வழங்கும் பல நிறுவனங்களும் இருக்கின்றன. One click install, fantastico போன்ற கருவிகளின் மூலம் எளிதாக நிறுவிக்கொள்ள முடியும். இந்த கருவிகள் இல்லாத வழங்கிச் சேவைகளிலும், “ஐந்து நிமிட நிறுவல் முறை” என அழைக்கப்படும் முறையில் எளிதாக நிறுவிக்கொள்ளலாம்.

  • சில ஆயிரக் கணக்கில் வார்ப்புருக்களும், நீட்சிகளும் உள்ளன. எந்தவிதத் திருத்தங்களும் இன்றியே இந்த வார்ப்புருக்களை நீங்கள் பயண்படுத்திக்கொள்ளலாம். அப்படித் திருத்தங்கள் செய்ய வேண்டும் என்றாலும் அதைச் செய்வதும் சுலபமே.

  • வடிவமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ள சிறிதளவு CSS பற்றிய புரிதல் இருந்தாலே போதும்.

  • கூடுதல் செயல்திறனை உருவாக்கவோ, செயல்பாடுகளை மாற்றுவதற்கோ சிறிதளவு PHP பற்றிய தெரிதலே போதும். இந்தப் புரிதலை ஏற்படுத்திக் கொள்வதற்காக வேர்ட்பிரசின் codex [http://codex.wordpress.org] என்னும் பகுதி உள்ளது.

  • Community Support, ஆதரவு என்ற விதத்தில் வேர்ட்பிரசு பயணர்களை அடித்துக்கொள்ள முடியாது. வேர்ட்பிரசு மன்றங்களின் (Forums) எண்ணிக்கை மட்டுமே எக்கச்சக்கமாக இருக்கிறது. அதேபோல கட்டண வார்ப்புரு மற்றும் நீட்சிகளை வழங்கும் நிறுவனங்கள் மன்றங்களை நிர்வகிக்கின்றன.

  • நீங்கள் மட்டுமே படிக்கக்கூடிய, ரகசியமாக புத்தக அலமாரியில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு நாட்குறிப்பாக உங்கள் தளத்தை நீங்கள் பயன்படுத்தாத வரை, தேடு இயந்திரங்களுக்கு ஏற்றபடி உங்கள் தளத்தை அமைக்க வேண்டியது இன்றைய சூழ்நிலையில் மிக முக்கியமானது. “தேடு பொறிகளுக்கு ஏற்றபடி” தளத்தை அமைக்கக் கூடிய வகையில் மற்ற எல்லா இணைய உள்ளடக்க நிர்வாக கருவிகளையும் விட வேர்ட்பிரசு பல படிகள் முன்னே நிற்கிறது. உதாரணமாக, கூகிளானது, தள முகவரியில் அதிகமான குறிகள் இடம் பெறுவதைத் தவிர்க்க வலியுறுத்துகிறது. இதை நீங்கள் செய்து முடிக்க பிற மென்பொருட்களில் அதிகம் சிரமப்பட வேண்டியிருக்கும் (துவக்க நிலை பயனர்களுக்கு). ஆனால், வேர்ட்பிரசை பொறுத்தவரை, இதை நீங்கள் சுலபமாக செய்து முடிக்க முடியும்.

  • பல வேர்ட்பிரசு உருவாக்குநர்களும், வேர்ட்பிரசு பற்றிய வலைப்பதிவுகளையும், உதவிகளையும் வழங்கி வருகின்றனர். தடுக்கிவிழுந்தால் எதாவதொரு வேர்ட்பிரசு உதவிப் பக்கம் உங்கள் கண்களில் படும் வாய்ப்பு அதிகம், மற்ற உள்ளடக்க நிர்வாக மென்பொருட்களை விட ஆதரவு இங்கு அதிகம்.

     

  • வேர்ட்பிரசில் பாதுகாப்பு இல்லை, அடிக்கடி தாக்குதலுக்கு உள்ளாகும் என்ற கருத்து சில பல நூற்றாண்டுகளாகவே நிலவி வருகிறது. சமீபகாலத்திய வேர்ட்பிரசின் மேம்படுத்தல்களில் பாதுகாப்பு குறித்த கவனம் அதிகரித்து வருகிறது. பாதுகாப்புக்கு என்றும் சில நீட்சிகள் அறிமுகப்படுத்தப் பட்டு உள்ளன.

  • அது தவிர நம்முடைய தரவுத்தளத்தை அடிக்கடி நாம் நகலெடுத்து வைக்கும் பழக்கம் எந்த தாக்குதல்களிலிருந்தும் நம் தளத்தை உடணடியாக மீட்டுக்கொண்டு வர வழி வகுக்கும். WordPress database backup, backup buddy, backup to dropbox… போன்ற பல நீட்சிகள் இந்த வேலையை நமக்காக செய்கின்றன. Backup buddy என்ற நீட்சி நம் தரவுத்தளம் மட்டுமல்லாது, ஒட்டு மொத்த தளத்தையும் நகலெடுக்கிறது, இதன் மூலம் சில வினாடிகளில் தளத்தை மீண்டும் கொன்டு வர முடியும்.

  • பெரும்பாலும் தாக்குதலுக்கு உள்ளாகும் தளங்கள் பல மேம்படுத்தல்களை (Updates) செயற்படுத்தாமல் இருப்பவையாக இருக்கும். இவை தவிர வார்ப்புருக்களை, நீட்சிகளை மேம்படுத்தாமல் இருப்பதும் இத்தகையத் தாக்குதல்களுக்கு வழிவகுக்கும். வேர்ட்பிரசு தன்னுடைய நீட்சிகளுக்கான பெட்டகத்திலேயே இப்போது அதிக நாட்களாக (இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக) மேம்படுத்தாத நீட்சிகளின் தலைக்கு மேலேயே, இந்த நீட்சி இத்தனை நாட்களாக மேம்பாடு எதுவும் செய்யப்படாமல் இருக்கிறது, என்ற அறிவிப்பைத் தொங்கவிட்டிருக்கிறது. இத்தகைய வழிமுறைகளை நாம் செயல்படுத்தும் போது நம் தளத்தை பல்வேறு தாக்குதல்களிலிருந்தும் தவிர்க்க முடியும்.

நம் தளத்தின் பாதுகாப்பு நம்முடைய கைகளிலேயே இருக்கிறது.

(தொடரும்…)

 

சுப. தமிழினியன்

கணினிகளை இயக்கக் கற்ற பிறகு, வின்டோசின் கட்டுப்பாடுகள் நமக்கு ஒத்துவராது என்று மனதுக்குத் தோன்றிய நாள் முதல் திறந்த உலகத்தை நாடி வந்தேன். கட்டற்ற மென்பொருட்கள் எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்க்க இடம் கொடுத்தது. கட்டற்ற மென்பொருட்கள் தந்த சுதந்தரத்தால் வரலாற்றுத் துறையிலிருந்து வெளிவந்து இணையதள வடிவமைப்பாளராக பணிபுரிந்து கொண்டிருக்கிறேன்.

மின்னஞ்சல் : thamiz@iniyan.in | iniyan.in | thamiziniyan.com

%d bloggers like this: