ஜிட்சி – வீடியோ கான்பிரன்சிங் – இலவச கட்டற்ற மென்பொருள்

ஜிப்சி – இராஜூ முருகன் இயக்கத்தில் அண்மையில் வெளி வந்த படம். படத்தின் நாயகன் ஊர் ஊராக நாடோடி வாழ்க்கை வாழ்பவன். அதனால் ஜிப்சி என்று பெயர் வைத்திருப்பார் இராஜூ முருகன். கொரோனா சூழ் இன்றைய சூழலில் யாராலும் ஜிப்சியாகத் திரிய முடியாது. ஒன்றிய அரசின் 21 நாள் ஊரடங்கு உத்தரவு – ஊரையே உள்ளே அடக்கியிருக்கிறது.

ஜிப்சியாகத் திரிந்த பலரும் என்ன செய்வது என்று தெரியாமல் முடங்கிப் போய் இருக்கிறார்கள். இத்தகைய நிலையில் வீட்டில் இருந்த படியே, நண்பர்களுடன் காணொலி வழியாகப் பேசுவது, தெரிந்த செய்திகளைப் பகிர்ந்து கொள்வது, கணினித் திரைகளைப் பகிர்ந்து பாடம் சொல்லிக் கொடுப்பது – ஆகியவற்றிற்கு உதவும் கட்டற்ற மென்பொருள் தான் ஜிட்சி! (Jitsi) வீட்டில் இருந்தபடியே ஜிட்சி உதவியோடு ஜிப்சியாகலாம்!

இதற்குத் தான் ஜூம்(Zoom), கோடூமீட்டிங்(GoToTeeting),ஸ்கைப்(Skype) ஆகியன இருக்கின்றனவே! இதில் என்ன புதுசு? என்கிறீர்களா? முதலில் ஜூம், கோடூமீட்டிங் ஆகியன கட்டற்ற மென்பொருட்கள் இல்லை. எனவே, அவற்றைத் தரவிறக்கிய பிறகு உங்கள் கணினியில் என்ன நடந்தாலும் உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. ஸ்கைப் போன்ற கார்ப்பரேட் மென்பொருளைப் பயன்படுத்தி விட்டு, “ஐயோ, இந்தக் கார்ப்பரேட்டுகளைப் பார்த்தீர்களா – எல்லோருடைய தகவல்களையும் திருடி எப்படிக் காசாக்குகிறார்கள் – இதைக் கேட்பதற்கு யாரும் இல்லையா? ” என்று வெளியே வந்து கதறினால் உதை நமக்குத் தான் கிடைக்கும். ஆனால், ஜிட்சி கட்டற்ற மென்பொருள். தைரியமாகப் பயன்படுத்தலாம்.

இரண்டாவது, ஜூமின் இலவசப் பதிப்பை ஒரு நாளைக்கு 45 நிமிடங்களுக்கு மேல் பயன்படுத்த முடியாது. கோடூமீட்டிங்கைப் பதினான்கு நாட்களுக்கு மேல் இலவசமாகப் பயன்படுத்த முடியாது. இந்தச் சிக்கல்கள் எவையும் ஜிட்சியில் கிடையாது. எத்தனை பேரோடு வேண்டுமானாலும் உரையாடலாம். எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் உரையாடலாம்.

இவை தவிர, உரையாடலைப் பதிவு செய்வது, தொலைபேசி வழியே பேசுவது, ஜிட்சியை நம்முடைய இணையத்தளம், செயலி ஆகியவற்றோடு இணைப்பது என எல்லா வசதிகளும் உள்ளன. வேறென்ன வேண்டும் நமக்கு? இதெல்லாம் சரி! ஆண்டிராய்டில் வேலை செய்யுமா? லினக்சில் வேலை செய்யுமா? என்கிறீர்களா? ஆண்டிராய்டு, லினக்ஸ், விண்டோஸ், மேக், ஐஓஎஸ் என எல்லாத் தளங்களிலும் வேலை செய்யும்.
போதுமா?

கூட்டு உரையாடல்களுக்கு: meet.jit.si
ஆண்டிராய்டு செயலி: play.google.com/store/apps/details?id=org.jitsi.meet&hl=en

மேலதிக விவரங்களுக்கு: jitsi.org/user-faq/

%d bloggers like this: