வெள்ளத் தனைய மலர்நீட்ட மாந்தர்தம்
உள்ளத் தனைய உயர்வு
என்று ஒருவரின் வெற்றிக்கும் செயல் திறனுக்கும் ஊக்கத்தை அளவு கோலாக வைக்கிறார் வள்ளுவர். கணினித் துறையும் கட்டற்ற தொழில் நுட்பமும் இன்று இந்த அளவு வளர்ந்து வருகிறது என்றால் அதற்குக் காரணம் அத்துறையில் ஈடுபட்டுள்ள ஒவ்வோருவரின் தனி ஈடுபாடும் ஊக்கமும் ஒரு முக்கியமானக் காரணம். ஒரு கணினிப் பயனீட்டாளருக்கு ஒரு மென்பொருளோ ஒரு சேவையோ இலவசமாகக் கிடைக்கிறது என்றால் அதன் பின்னால் பலரின் சுயநலமற்ற உழைப்பு ஒளிந்து இருக்கிறது.எனவே இங்கு பகிர்ந்து கொள்ளப்படும் ஒவ்வொரு விஷயமும் நம் அனைவருக்கும் உபயோகமாக இருப்பதோடு ஊக்கம் அளிப்பதாகவும் அமைந்து விடுகிறது.அப்படிப்பட்ட ஒரு முயற்சி தான் www.oswd.org என்ற இணைய தளம்.
இந்த இணைய தளம் திறவூற்று இணைய தள வடிவமைப்பு வார்ப்புருக்களை(template) இலவசமாகவும் ஒரு சில வடிவமைப்பு வார்ப்புருக்களை(விலைக்கும் அளிக்கிறது .இணைய தளங்களை அழகாக வண்ணமயமாக கலை நயத்தோடு வடிவமைப்பது என்பது எல்லோருக்கும் எளிதாக வருவதில்லை. எனவே இணைய தளங்கள் தயாரிக்க உதவும் பல் மெபொருட்கள்கள் பயனீட்டாளர்களை ஊக்குவிக்கும் வகையில் முன்மாதிரியாக வடிவமைத்த வார்ப்புருக்களை கொடுத்து உதவுகின்றன. இவை தவிர பல இணைய தளங்கள் மாதிரி இணையப் பக்கங்கங்கலை வடிவமைத்து விலைக்கு விற்கின்றன. இதே வேலையை .www.oswd.org என்ற இணைய தளத்தைச் ஒரு சேவையாக செய்கிறார், ஒரு மாணவர். அவர் தான் ஃப்ரன்ஸிஸ்.ஜெ.ச்டெட்டீனோ.
அமெரிக்க நாட்டில், பென்சில்வேனியா மாகாணத்திலிருக்கும் ட்ரெக்ஸெல் பல்கலைக் கழகத்தில் கணினித் துறௌம் மனிதவள மேம்பாடும் பற்றிப் படிக்கும் இந்த மாணவர் கடந்த பன்னிரெண்டு வருடங்களாக இந்த இணைய தளத்தை நடத்தி வருகிறார். இவருடன் இணைந்து பல இணைய தள வடிவமைப்பாளர்கள் தங்களுடைய கலை ஆர்வத்தை தணிக்கும் விதமாக இதில் பங்கு கொண்டு பணி யாற்றி வருகிறார்கள். கிட்டத்தட்ட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட .XHTML CSSலிருந்து HTML5, CSS3 வரை பல தரமான அழகாக வடிவமைக்கப்பட்ட இணையப் பக்க வடிவமைப்புக்கள் இலவசமாகக் கிடைக்கின்றன.அவை அனைத்தையும் கிரியேட்டிவ் காமண்ச் லைசன்ஸ் முறையில் பொது மக்கள் இலவசமாக தரவிறக்கம் செய்யலாம்.தரவிறக்கம் செய்து எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம். எதற்கு வேண்டுமானாலும் பயன் படுத்திக் கொள்ளலாம்.ஆனால் இணைய தள வடிவமைப்பின் காப்புரிமை வடிவமைத்தவர்களுக்கே சொந்தம் என்ற அறிவிப்பு மட்டும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார்கள் வடிவமைப்பாளர்கள்.
இந்த இணைய தளத்தில் பலநாடுகளிலிருந்தும் தள வடிவமைப்பாளர்கள் பங்கு கொள்கிறார்கள். இந்த இணைய தளத்தை நடத்துவதற்கான பொருளை ஈட்டுவதற்காக இணைய தளத்தில் விளம்பரங்கள் காணப்படுகிண்றன. பல நூறு தள வடிவமைப்புக்கள் விலைக்கும் விற்கப்படுகிண்றன இவ்வளவு முயற்சி எடுத்து தன்னலம் இல்லாமல் சேவை செய்யும் இந்த மாணவர் தன்னைப் பற்றிச் சொல்லிக் கொள்வது மிகவும் சில வரிகளே!மற்றவர்களுக்குப் பயன் படும் வகையில் விடா முயற்சியோடு ஊக்கத்துடன் செயல் படும் ஒருவரின் செயல் அவரை மட்டுமல்லாமல் மற்றவர்களையும் உயரத்தில் கொண்டு போய் வைக்கிறது என்பதற்கு இந்த இணையதளம் ஒரு உதாரணம். உங்களின் தேவைக் கேற்ப இந்த இணைய தளத்தைப் பயன் படுத்திக் கொள்ளலாம் என்பதோடு நம் திறமைகளை வளர்த்துக் கொள்ள, வெளிக்காட்ட ஒரு இடமாகவும் நாம் இதை எடுத்துக் கொள்ளலாம்.
நான் இந்த இணையதளத்தைப் பற்றியும் இந்த மாணவரைப் பற்றியும் கணியத்தில் எழுதுவதற்குக் காரணம், கணியமும் இது போல ஒரு சிலரால் தொடங்கப்பட்டு இப்போது தான் தவழத் தொடங்கியிருக்கிறது. தமிழ் மொழியில் இப்படிப்பட்ட ஒரு முயற்சி வரவேற்கப்பட வேண்டியது மட்டுமல்லாமல் ஊக்கமளிக்க வேண்டியதும் கூட. இந்த ஒரு சிலருடைய முயற்சிகள் தங்கு தடைகளைத் தாண்டி வளரவேண்டும்.
~சுகந்தி