3D அச்சிடுதல் முதன்முதலில் துரித முன்மாதிரிக்கான (prototyping) வழிமுறையாகத்தான் உருவாக்கப்பட்டது
பாரம்பரிய உட்செலுத்து அச்சு (injection moulding) மூலம் வடிவமைக்கப்பட்ட முன்மாதிரியைத் தயாரிக்க, பல லட்சங்கள் செலவாகும் மற்றும் பல வாரங்கள் எடுக்கும். ஒவ்வொரு புதிய மறு செய்கையிலும் வடிவமைப்பை மேம்படுத்த முயற்சிக்கிறீர்கள் என்றால் அது ஒருக்காலும் நடைமுறைக்கு ஒத்தே வராது. 3D அச்சிடுதல் தொழில்நுட்பம் பாரம்பரிய உற்பத்தியில் தேவைப்படும் முன்னீடு (lead times) நேரங்களை வெகுவாகக் குறைக்கிறது. ஒரு முன்மாதிரிக்குப் பல வாரங்கள் எடுக்காமல் சில மணிநேரங்களிலேயே குறைந்த செலவில் உருவாக்க வழி செய்கிறது. முக்கியமாக வாகன மற்றும் விண்வெளித் தொழில்கள் உற்பத்தியில் இம்மாதிரி 3D அச்சு தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்தைப் பரவலாகப் பயன்படுத்துகின்றன.
பேரளவு உற்பத்தியில் பாரம்பரிய முறையே செலவைக் குறைக்கும்
பாரம்பரிய உற்பத்தி முறையே பேரளவு உற்பத்தியில் (mass production) மிகவும் செலவு குறைந்ததாகும். ஒரே மாதிரியான தயாரிப்பு பெருமளவில் உற்பத்தி செய்யப்படாத சூழ்நிலைகளில், 3D அச்சு முறை சிறந்தது. ஏனெனில் இது ஒரு தயாரிப்பை குறைந்த எண்ணிக்கைகளில் மற்றும் தனித்தனியாக உற்பத்தி செய்ய அனுமதிக்கிறது.
மேகக் கணிமைத் தொழில்நுட்பங்கள் இன்று மிகவும் பரவலாக இருப்பதால், நுகர்வோருக்கு 3D அச்சு எந்திரம் வாங்கும் செலவு கிடையாது. பாகங்கள் மற்றும் தயாரிப்புகளை தொலைவிலிருந்து உருவாக்கக்கூடிய மேகக் கணிமை அடிப்படையிலான பொருள் உற்பத்தி சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் இப்போது உள்ளன.
பெருந்திரள் தனிப்பயனாக்குதல் (mass customization) போன்ற சேவைகளுக்கு 3D அச்சிடல் அவசியம்
நிறுவனங்கள் இப்போது பெருந்திரள் தனிப்பயனாக்குதல் சேவைகளை வழங்குகின்றன. இவற்றில் நுகர்வோர் எளிய இணைய அடிப்படையிலான தனிப்பயனாக்குதல் மென்பொருளின் மூலம் பொருட்களைத் தங்களுக்குப் பிடித்த மாதிரி வடிவமைத்துக் கொள்ளலாம். இதன் விளைவாக கைப்பேசியின் வெளியுறைகள் (mobile phone cases) போன்ற தனித்துவமான 3D அச்சிடப்பட்ட பொருட்களை இணையத்தில் வாங்கலாம்.
தனிப்பயனாக்கத்தின் அடிப்படைக் கொள்கை என்னவென்றால் வாடிக்கையாளர்களுக்கு உருவாக்கும் செயல்பாட்டில் பங்கேற்கும் திறனை வழங்குவதும், இந்த உள்ளீட்டை பேரளவு உற்பத்தி அளவில் ஒருங்கிணைப்பதும் ஆகும். இந்த அணுகுமுறையைத் தேர்ந்தெடுப்பது சில சவால்களை எதிர்கொள்கிறது. ஏனெனில் இது மிகவும் திறமையான மற்றும் மெலிந்த விநியோகச் சங்கிலி (supply chain) அமைப்பையும், அத்துடன் நெகிழ்வான, தானியங்கி உற்பத்தி செயல்முறையையும் நம்பியுள்ளது.
நன்றி
இத்தொடரில் அடுத்த கட்டுரை: கலைப்பொருட்கள் மற்றும் ஆபரண உற்பத்தி
மெழுகு வார்ப்பு (lost wax process). தனித்துவமான நகைகள் மற்றும் ஆபரணங்கள் உற்பத்தி செய்ய இயலும். 3D அச்சிட்ட சிற்பங்கள் மற்றும் பீங்கான் குவளைகள்.