எளிய தமிழில் Arduino – அறிமுகம்

By | March 31, 2026

தொடர்ந்து 52 கட்டுரைகளில் எலக்ட்ரானிக்ஸ் தொடர்பான பல்வேறு முக்கியமான மற்றும் அடிப்படையான தகவல்களை கணியம் வலைதளத்தில் எழுதி இருக்கிறேன். ஆனால் இன்றைக்கும் மாணவர்கள் மத்தியில் எலக்ட்ரானிக்ஸ் என்றால் ஏதோ மெஷின்களுக்கு இடையே செய்யப்படும் விசித்திரமான தகவல் தொடர்பு என்ற கருதுகோள் நிலவுகிறது.

அடிப்படையில், எம்படெட் (Embedded- உட்பொதிக்கப்பட்ட) மின்சுற்றுகளை உருவாக்குவதற்கு ஆழ்ந்த மின்னணுவியல் அறிவு தேவைப்படுகிறது. மேலும், பொறியியல் சார் நிபுணர்களால் மட்டுமே இவற்றை வடிவமைத்து, எலக்ட்ரானிக் கருவிகளை தயாரிக்க முடியும்.

ஆனால் இந்த சிக்கல்களுக்கு எல்லாம் விடை சொல்லும் இடைமுகமாய் வந்தது தான் ஆர்டினோ. இது ஒரு கட்டற்ற மின்சுற்று ஆகும். இதை உங்கள் விருப்பப்படி உங்களால் வடிவமைத்துக் கொள்ள முடியும். இதை பயன்படுத்தி உங்களுக்கு விருப்பமான எலக்ட்ரானிக் கருவிகளை உருவாக்க முடியும்.

என்ன நாலு சீரியல் லைட் எரிய வைக்கிற சர்க்யூட் தானே என கேட்கிறீர்களா? சீரியல் லைட்டுகளை எரிய வைப்பது தொடங்கி சீரியஸாக AI உடன் விவாதிப்பது வரை, ஆர்டினோ மின் சுற்றுகளால் முடியாத செயல்கள் இல்லை. நீங்களாகவே நிரல் எழுதி, நீங்களாகவே ஓயர்களை இணைத்து புதுப்புது கருவிகளை வடிவமைத்து காட்டலாம்.

தானியங்கி கேமராக்கள், வெப்பநிலைமானிகள், பருவநிலை மாறுபாட்டுக் கருவிகள், தொலைதூர தகவல் தொடர்பு சாதனங்கள், இணையத்துடன் இணைந்த சாதனங்கள், செய்யறிவு இடைமுகங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான கருவிகளை வடிவமைக்க முடியும். இதற்கு தேவையான சென்சார்களை ஒன்றன்பின் ஒன்றாக இணைத்து தேவையான மின்சுற்றுகளை உருவாக்கிக் கொள்ளலாம்.

தற்போது இருக்கக்கூடிய சூழலில் ஆர்டினோ மின் சுற்றுகளின் விலை சுமார் 500 ரூபாயிலிருந்து தொடங்குகிறது. பல்வேறு நிறுவனங்களும் இதை தயாரிக்கின்றன. இவற்றிற்கு மின்சாரம் அளிப்பதற்கு மிக சிறிய அளவிலான ஐந்து வோல்ட் மின்னழுத்த வேறுபாடு போதுமானதாகும்.

இவற்றிற்கு பொருத்தக்கூடிய சென்சார்கள் கடைகளில் குறைந்த விலையில் கிடைக்கின்றன. இவற்றை வடிவமைத்துப் பார்ப்பதற்கான நூற்றுக்கணக்கான குறிப்புகள் இணையத்தில் சிதறி கிடக்கின்றன. அவை அனைத்தையும் ஒருங்கிணைத்து, தொகுத்து “எளிய தமிழில் ஆர்டினோ” எனும் முன்னோடி புத்தகமாக உங்கள் கைகளில் இணையத்தின் வழியாய் கொண்டு சேர்ப்பதே எனது நோக்கம். வெறும் எழுத்துக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல், இம்முறை எழுத்தோடு சேர்ந்து நிரல்களும் இடம் பெறும்.

மேலும், சில இணைய இடைமுகங்களை பயன்படுத்தி “மாதிரி மின் சுற்றுகளை” (Virtual Circuits) வழங்கப் போகிறேன். இவற்றை நேரடியாக நீங்கள் பரிசோதித்து பார்க்கலாம். முற்றிலும் வேறுபட்ட மற்றும் தனித்துவமான எழுத்து நடையோடு இந்த தொடர் இனிதே இன்றே தொடங்குகிறது. அடுத்த கட்டுரையில் ஆர்டினோவின் வரலாறு, தேவைகள், நுட்பங்கள் உள்ளிட்ட அறிமுகங்களை இனிதே காணலாம்.

கட்டுரையாளர்:

ஸ்ரீ காளீஸ்வரர் செ,

இளம் அறிவியல் எழுத்தாளர்,

முதுகலை இயற்பியல் மாணவர்,

ஸ்காட் கிருத்தவ கல்லூரி,

நாகர்கோவில் – 03.

Leave a Reply