ஒன்று மட்டும் தான்… | அறிவியல் புனைவு கதை | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 50 |

By | April 30, 2025

அன்றைய தினம் இரவு 9:30 மணிக்கு, குடும்பங்கள் அனைத்தும் டிவி திரைக்கு முன்பு காத்துக் கிடந்தது. கார், ரயில் என பயணத்தில் இருந்தவர்கள் கூட தங்கள் மொபைல் ஃபோன்களை ஆன் செய்து வைத்துக் கொண்டு, அந்த நிகழ்ச்சியை காண ஆவலாக காத்திருந்தனர். ஒரு நபர், அந்த ஒரே நபர்!!!! அப்பப்பா அவருக்குள் அவ்வளவு திறமையா? ஒரு நபர் தன்னுடைய புத்தகத்தின் மூலம், உணர்வற்று அலைந்து கொண்டிருந்த உலகிற்கு வெளிச்சத்தை பாய்ச்சி விட முடியுமா?

என்னப்பா இப்படி கேட்டு விட்டாய்! வரலாறு கூறும் புத்தகங்கள் தான், வரலாற்றின் அடுத்தடுத்த பக்கங்களுக்கு அச்சரம் போட்டது என காலம் காலமாக அறிந்து வந்தது தானே! ஆனால், தொழில்நுட்பம் இந்த அளவிற்கு வளர்ந்து விட்ட காலத்திலும் கூட, போயும் போயும் ஒரு புத்தகத்திற்கு இவ்வளவு பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகுமா?

சரி எப்படியோ எழுதி இவ்வளவு பெரிய இடத்திற்கு வந்துவிட்டார். புத்தகம் எழுதியும், ஒரு வருடம் கடந்து விட்டது. ஆனால், ஒரு கோடி பிரதிகளை கடந்து விட்ட போதும், அந்த புத்தகத்தை எழுதிய புண்ணியவான் முகத்தை இன்னும் ஒருத்தரும் பார்க்கவில்லை. என்னடா இது புது பிரச்சனையாக இருக்கிறது. பெயரைக் கேட்டால், 01001000 01101101 01100011 01101100 01101100 00100001 என ஏதோ பைனரி(சங்கேத) எழுத்தில் எழுதி வைத்திருக்கிறார். அதை எப்படி decode செய்து பார்த்தாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை. சரி, புத்தகத்தையாவது ஒரு மொழியில் எழுதி தொலைத்தாரா? கேட்டால் உலகத்திற்கே புரியும் மொழி என்று, சங்கேத மொழியிலேயே சங்கீதம் வாசித்திருக்கிறார்.

அதையும், மக்கள் மொழிகளில் மொழிபெயர்ப்பதற்கு ஒரு ஓபன் சோர்ஸ் கூட்டம் வேறு. அதுவும் புத்தகத்தை போட்டதும் போட்டார். கட்டற்ற உரிமையோடு போட்டுவிட்டார். பிரின்டிங் மிஷின் இருந்தவர் எல்லாரும், புத்தகம் வெளியிடத் தொடங்கி விட்டார்கள். கம்ப்யூட்டர், மொபைலில் படித்தது போதாது என்று, பிரதி எடுத்து வீட்டில் பொக்கிஷமாக பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படியானால், ஒரு கோடி பிரதிகள் தான் வெளியாகி இருக்கிறது என பத்திரிக்கையில் வந்து செய்திகள் பொய்யா? இல்லை இல்லை தற்போது வரை அங்கீகரிக்கப்பட்ட வெளியீட்டாளர்கள் வெளியிட்ட என் தான் ஒரு கோடியை கடந்து இருக்கிறது. அந்த நபர் கதைகள் எழுதவில்லை. கவிதைகள் பாடவில்லை. தத்துவத்தை விளக்கவில்லை. எதார்த்தம் என்கிற பெயரில், இருக்கின்ற ஒன்றை, இதுவரை நாம் காணாத பாணியில் அனைவரும் அறிய செய்து விட்டார்.

என சிறப்பு விருந்தினருக்கு விளக்கம் கொடுத்து முடித்துவிட்டு, நெறியாளர் கான்பிரன்ஸில் இணைந்திருந்த,  மர்ம எழுத்தாளரை அனைவருக்கும் அறிமுகப்படுத்தினார். மெலிந்த தேகம், கூர்மையற்ற பார்வை, கோபமற்ற முக வடிவம், கண்ணீரும் வறண்டு போன கண்கள், சுருண்டும் சுருளாமலும் அரைகுறையாய் காய்ந்திருக்கும் சிகை. ஆங்காங்கே கரை தெரியும் தொள தொள வெள்ளை சட்டையில், அளவுக்கு அதிகமான அளவிலிருந்த பாக்கெட்டில் ஒரு பழைய பேனா மட்டும் சொருகி இருந்தது.

“யோவ் உனக்கே இது நியாயமா இருக்கா? ஊருக்கே முகத்தை காட்டப் போவதாக சொல்லிவிட்டு, ஏண்டா மாஸ்க் போட்டு மூடி இருக்கிற?”என புலம்பும் குரல்கள், வீதி எங்கும் நிறைந்திருந்தன. சலனங்கள் ஏதும் இன்றி, அந்த நபரின் மெல்லிய  குரல் காற்றை வந்து சேர்ந்தது. அனைத்து நாடுகளிலும் இருக்கக்கூடிய தொலைக்காட்சிகள், செய்யறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்த!, மர்ம நபரின் பேச்சை தாய் மொழிக்கு தாரை வார்த்தன.

அந்த நபரின் பேச்சு உங்களுக்காக,

“நிறைவாய் நிறைந்திருக்கும் மக்களே! போயும் போயும் நான் எழுதியதெல்லாம் படித்திருக்கும் உங்களை நினைத்தால் எனக்கு சிரிப்பு தான் வருகிறது. என்னவோ யதார்த்தத்தை சொல்லிவிட்டேனாம். நான் யார்? என்று தெரிந்து கொள்ள வேண்டுமாம். உங்களுக்கெல்லாம் வேற வேலை இல்லையா?, போய் ஏதாவது உருப்படியாக இருந்தால் பாருங்கள்.”

உடனே குறுக்கிட்ட நெறியாளர்,”சார் சார் ரொம்ப கஷ்டப்பட்டு, உங்களை வீடியோ கான்பரன்ஸ் என்று அழைத்து இருக்கிறோம். இப்படி பாதியில் ஓடிப் போனால் என்ன அர்த்தம். ஸ்பான்சர்களுக்கு என்ன பதில் சொல்ல முடியும்?”

“சரி உங்களுக்கு என்ன தான் தெரிந்து கொள்ள வேண்டும்?, என்னை பற்றி தானே?”

“ஆமா சார்! ஆமா”

“ஒன்று சொல்லட்டுமா? நான் என்று ஒன்று இல்லவே இல்லை.”

“என்ன சார் சொல்றீங்க?”என நெறியாளர் தலையை சொறிந்து கொண்டார்.

“சொல்கிறேன். இதோ உங்கள் கண் முன்னால், நான் ஒரு நாற்காலியில் அமர்ந்து இருப்பதாக உங்களுக்கு தோன்றுகிறது அல்லவா?, உண்மையில் இது நாற்காலியே இல்லை. நீங்கள் ஏதோ ஒரு இடத்தில் இருந்து கொண்டு, ஏதோ ஒரு திரையின் ஊடாக இந்த காட்சியை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் பயன்படுத்தும் திரை தொடுதிரையாகவும் இருக்கலாம். சாதாரண திரையாகவும் இருக்கலாம். கோடிக்கணக்கான LED விளக்குகளின் கோர்வை தான், நீங்கள் பயன்படுத்தும் திரையாக இருக்கலாம். சரி எந்த வகை திரையாக இருந்தாலும்,அந்தத் திரையில் என் உருவம், உங்கள் முன்னால் வீற்றிருக்கிறது. நான் பேசும் குரலோ, உங்கள் திரைக்குப் பின்னால் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஒலிபெருக்கியின் மூலம், மின்னோட்ட அலைகளிலிருந்து செவியுணர் அலைகளாக மாற்றப்படுகிறது.

ஒருவேளை, நான் இறந்து போய் இருநூறு ஆண்டுகள் கூட ஆகி இருக்கலாம். ஆனாலும் நான் பேசுவதை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். காரணம், நான் எனும் இந்த உருவம் ஒரு சேமிப்பு தகட்டுக்குள் சேமிக்கப்பட்டு இருக்கிறது. ஆகையால்,திரும்பத் திரும்ப  உங்களால் என்னை பார்க்க முடிகிறது.

ஒருவேளை நாம் உண்மையிலேயே நேரலையில் சந்தித்து இருந்தாலும், ஏதோ ஒரு இடத்தில் இருக்கும் இணைய இணைப்பின் மூலம், என்னுடைய காணும் ஒளியானது,  என் கணினியில் இருக்கும் கேமரா கண்களின் மூலம் உணரப்பட்டு, அதன் சில்லுவின் மூலம், சங்கேத குறியீடுகளாக(binary codes)மாற்றப்பட்டு, என் மொபைல் கருவி அலைகளாய் கடன் கொடுத்த இணைய இணைப்பின் உதவியோடு(Hotspot), கணினியில் இருக்கும் அலை வழங்கின் மூலம்(transmitter) காற்றில்  அலைகளாய் பயணித்து, உங்கள் இல்லத்தின் அருகில் இருக்கும் செல்போன் கோபுரத்தை அடைந்து, அங்கிருந்து ஒளி வடத்தின்(fibre optic cable)உதவியோடு கடல் கடந்து நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் எலக்ட்ரானிக் கருவியை இறுதியாக வந்தடைகிறது.

இத்தோடு தான் முடிந்து போய் விட்டதா? நான் பேசும் ஒலி அலைகளும், மின்னோட்ட அலை,மீண்டும் செவி உணர் ஒலி அலை என பல வடிவம் கண்டு, உங்கள் மூளை நியூரான்களை வந்தடைகிறது. இவை அனைத்தும், நீங்கள் கண்மூடி கண்களுக்கும் வினாடிப் பொழுதின் லட்சத்தின் ஒரு பங்குக்கும் குறைவான நேரத்திற்குள் நடந்து முடிந்து விடுகிறது.ஆனால், இவ்வளவு பெரிய விந்தைக்குப் பின்பும் இருப்பது ஒன்றே!

ஆம் ஒன்று மட்டும்தான். ஒன்று மட்டும் தான்.1 மட்டும்தான்.1 ஒன்று என்றால் உண்டு.0 என்றால் இல்லை. நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் கருவி இல்லை என்றால் இல்லை தான். அந்தக் கருவி இருப்பதால்தான் திரையின் ஊடாக நீங்கள் என்னை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். இதுதான் தர்க்கவாதத்தின்(logic)அடிப்படை. இந்த பரந்து விரிந்த பிரபஞ்சத்தில் இரண்டே கோட்பாடுகள் தான். ஒன்று இருக்க வேண்டும் அல்லது இல்லாதிருக்க வேண்டும்.

ஒன்றில் நீங்கள் உயிரோடு இயங்க வேண்டும். அல்லது உயிரற்ற ஜடமாக  இயற்கையோடு கலந்திட வேண்டும். பெரு வெடிப்பு நடந்ததால், பிரபஞ்சம் தோற்றுவிக்கப்பட்டதென நம்புகிறது அறிவியல். ஒருவேளை பெரு வெடிப்பு நடக்கவில்லை என்றால், பிரபஞ்சம் என்றொன்று இருந்திருக்காது. ஆம் எங்கும் இரண்டே வாய்ப்புகள் தான்.

பார்த்துக் கொண்டிருக்கும் அன்பான மக்களே! உங்கள் இல்லத்தில் இருக்கும் மின் விளக்குகளை வினாடிப் பொழுதேனும் அணைத்து விட்டு மீண்டும் போடவும்.

செய்து விட்டீர்களா? ஆம்! இப்போது இந்த பிரபஞ்ச வெளிக்கு நீங்கள் இருக்கிறீர்கள் என சமிக்ஞை அனுப்பி இருக்கிறீர்கள். ஆம், ஒரு வினாடி இல்லை என சொல்லி விளக்கனைத்து பின்பு விளக்கை எரிய விட்டதால், உங்களது இருப்பு மீண்டும் ஒருமுறை உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

கற்காலத்தில் குகைகளில் வாழ்ந்த உங்கள் முன்னோரும் கற்களை உரசி கண்டுபிடித்ததற்கு பின்பும், இந்த தர்க்கவாத தத்துவம் தான் நிறைந்து இருக்கிறது. இந்த எலக்ட்ரானிக்ஸ் விந்தையில், இல்லாத நான் இன்று உங்கள் மத்தியில் பேசிக் கொண்டிருக்கிறேன். யாரடா இவன், பைத்தியக்காரன் போல இவ்வளவு நேரம் உளறுகிறானே என பார்க்கிறீர்களா?” என பேசிக்கொண்டே தான் அணிந்திருந்த முகமூடியை கழற்றினார் அந்த மர்ம நபர்.

“என்னடா இது ஆச்சரியமாக இருக்குது?!”

“நம்ம கரோட்ரோ கிரகத்தில் வாழும் பிரஜைகளின் முகத்தில் நெற்றிக்கு கீழே நீல நிறத்தில் அல்லவா? இருக்கும். என்ன இந்த நபருக்கு வேறு நேரத்தில் இருக்கிறது???”

செல்போன் திரைகளையும் தாண்டி, இந்த சந்தேக குரல்  தெருவீதி எங்கும் பரவியது

“உங்கள் சந்தேகம் சரிதான்” மர்ம நபர் பதிலளிக்க தொடங்கினார். “நான் பூமி எனும் கிரகத்தை சேர்ந்தவன். அது சரி பூமிக்கு என்ன? பிரபஞ்சத்தில் போஸ்ட் கார்டு அட்ரஸ் ஆ இருக்கிறது?” எனச் சொல்லிக் கொண்டே தன்னுடைய திரையில் பிரபஞ்ச வரைபடத்தை திறந்த மர்ம நபர்,” பிரபஞ்சத்தின், இந்த அண்ட கூட்டங்கள் நிறைந்திருக்கும் பகுதியில் தான் எங்களுடைய கிரகம் இருக்கிறது(Laniakea super cluster). உண்மையை சொல்லப் போனால், நீங்கள் இருக்கும் அண்ட கூட்டத்திலிருந்து (Hercules super cluster), நாங்கள் சுமார் 500 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கிறோம்.”

இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும்போதே, இந்த மர்ம நபரை கண்டுபிடிக்க கரோட்ரோ கிரகத்தின், வல்லரசு தேசமான வரோயிய குடியரசின் அதிபர், அதிரடி உத்தரவை பிறப்பித்தார். அவருடைய தேசத்தின் அதிவிரைவு படைகள், மர்ம நபர் தங்கி இருக்கும் இடத்தை கண்டறிந்து, வினாடிப் பொழுதில் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டது.

“ஹா ஹா முட்டாள்களா! உங்களை விடவும் மூன்று பில்லியன் வருடங்களுக்கு முன்பே, இந்த ஏவுகணைகள் எல்லாம் நாங்கள் கண்டுபிடித்து விட்டோம். என சொல்லிக்கொண்டே, வீடு போல அமைக்கப்பட்டு இருந்த தன்னுடைய விண்கலத்திலிருந்து, ஒளி வேகத்தில் சிட்டெனப் பறந்தான் அந்த மர்ம மனிதன்.”

ஏவுகணையோ காலி மனையை தாக்க, வான பெருவெளி எங்கும் வினாடி பொழுது மின்னலாய் ஒளி கீற்றுகள் பிறந்தது.

ஏவுகணையின் ஓரத்தில் பொருத்தப்பட்டிருந்த டைமர் கடிகாரத்தின் குவாட்ர்ஸ் கற்கள் சிதறி, பக்கத்து மனை காரரின் சோலார் பேனல் மீது பட்டுத்தெரித்தது.

விண்கலத்திற்குள் LED விளக்கை எரிய விட்டபடி, அடுத்த அண்ட பெருவெளியை நோக்கி மர்ம மனிதன் பயணத்தை தொடர்ந்தான்.

                                  – ஸ்ரீ காளீஸ்வரர்.செ

                                                  ——முற்றும்

              

___________________________________________

இந்த எளிய மாணவனுக்கு, எளிய தமிழில் எலக்ட்ரானிக்ஸை கற்றுத் தர வாய்ப்பு அளித்த கணியத்திற்கும் வாசகர்களுக்கும் நன்றி.

விரைவில்….. புதிய நெடுந்தொடரில் சந்திப்போம்………..

தங்கள் மேலான கருத்துக்களுக்கு மின்மடலை தொடர்பு கொள்ளுங்கள்.

கட்டுரையாளர்:-

ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
(தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி, நாகர்கோவில் – 02)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின்மடல் : srikaleeswarar@myyahoo.com
இணையம்: ssktamil.wordpress.com