வணக்கம்.
அவலோகிதம் இயற்றப்பட்டு கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆயினும், அம்மென்பொருள் பலகாலமாக மேம்படுத்தப்படாமல் இருந்தது. உதாரணமாக, கையடக்கப்பேசிக்கு உகந்ததாக இல்லை. இதை தீர்க்கும் பொருட்டு பல புதிய வசதிகளுடன் தற்காலத்திற்கு ஏற்றார்ப்போல் அவலோகிதம் மாற்றப்பட்டுள்ளது.
வழக்கம் போல, செய்யுளை உள்ளிட்டால் பாவகையை கண்டுகொள்ள முயன்று அதனுடன் யாப்புறுப்புக்களை காட்டும். ஆனால், இப்போது நீங்கள் எழுத எழுத தானாக உடனடியாக பகுப்பாய்வினை காட்டிவிடும். எந்த பொத்தானையும் அழுத்தத் தேவையில்லை. அதைவிட, எந்தப்பா பொருந்துகிறது என்று மட்டுமில்லாமல் ஏன் பொருந்துகிறது என்பதையும் அவலோகிதம் காட்டும். இது ஒரு முக்கியமான மேம்பாடு.
அதே போல, ஒரு குறிப்பிட்ட பாவகையினை தேர்வு செய்து விதிகள் பொருந்துகின்றனவா இல்லையா என்பதையும் சரிபார்துக்கொள்ளலாம்.
சிறப்பாக வெண்பாவின் விதிகளுடன் பொருத்தும் போது, பொருந்தாத இடங்களையும் அடிக்கோடிட்டுக்காட்டும்.
இப்போது எந்தப்பாவகையும் பொருந்தவில்லை என்று முகத்தாற் அறைந்தது போல் சொல்லாது, நெருங்கி வரக்கூடிய பாவகைகளையும் காட்டும்.
அனைத்து பாவகைகளுக்கான உதாரணங்களையும் அதற்கான விதிகளையும் இங்கு பார்க்கலாம்: www. avalokitam.com/types
நீங்கள், அவலோகிதத்திலே பா இயற்ற முற்பட்டால், நீங்கள் பா எழுதிமுடிக்கும் முன்னரே அது பாவகையை கண்டறிய முற்படுவது தொந்தரவாக இருக்கலாம். எனவே, அவலோகிதம் பாவகை கண்டறிவதை நிறுத்த “யாப்புறுப்புக்களை மட்டும் வெளியிடவும்” என்ற தேர்வை தேர்வு செய்தல் வேண்டும்.
இதை தவிர்த்து, தளை, சீர் ஆகியவை தெளிவாக தெரியும் வண்ணம் மாற்றப்பட்டுள்ளது.
தொடையில், உயிரெதுகை, இனவெதுகை, நெடிலெதுகை, ஆசிடை எதுகை, இடையிட்டெதுகை, இன மோனை, நெடில் மோனை, முதலியவற்றையும் கண்டுகொள்ளும் திறனும் சேர்க்கப்பட்டுள்ளது.
அசை, சீர், தளை, அடி ஆகியவற்றை ஒரேடியாக பார்க்கும் வசதியும் உள்ளது.
அலகிடும் போது சில எழுத்துக்களை வேறுவிதமாக அலகிடவும் வசதிகள் உள்ளன.
அடுத்து சில அடிப்படை யாப்பிலக்கணத்தை கற்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
வழக்கம் போலவே, சொல் தேடலையும் நீங்கள் செய்யலாம்.
ஏற்கனவே கூறினாற்போல், நீங்கள் கைப்பேசியில் அவலோகிதத்தை பயன்படுத்தினாலும் அதற்கேற்றாற்போல தன்னை உருமாற்றிக்கொள்ளும்.
புதிய அவலோகிதத்தை பயன்படுத்தி தங்களது கருத்துக்களையும் பின்னூட்டங்களையும் பகிர்ந்தால் நன்றியுடைவனாக இருப்பேன்.
மூலநிரல் – github.com/virtualvinodh/avalokitam