எரிவாயு உருளையைப் போல் மின்கலத்தையே மாற்றீடு செய்தல் (swapping)
ஒரு உருளையில் எரிவாயு தீர்ந்துவிட்டால் நாம் என்ன செய்கிறோம்? அதே உருளையிலேயே எரிவாயுவை மீண்டும் நிரப்புவதில்லை. அந்த உருளையைக் கொடுத்துவிட்டு வேறொரு நிரப்பிய உருளையை பதிலுக்கு வாங்கிக் கொள்கிறோம் அல்லவா? மின்கலத்தையே மாற்றீடு செய்தல் என்பது இதேபோல வடிந்த மின்கலத்தைக் கொடுத்துவிட்டு முழுமையாக மின்னேற்றிய வேறொரு மின்கலத்துக்கு மாற்றீடு செய்வதுதான். இது ஒரு விற்பனை நிலையத்தில் பெட்ரோல், டீசல் நிரப்புவதற்கு ஒப்பாக விரைவானது. உங்கள் ஊர்தியில் மின்னேற்றுவதற்காக மணிக்கணக்கில் காத்திருக்காமல் ஒருசில நிமிடங்களிலேயே வேலையை முடித்துவிட்டுத் தொடர்ந்து பயணம் செய்யலாம்.
இந்த சேவைக்குக் குறைந்த அளவு இடமே தேவைப்படும்
மின்னேற்ற சேவைக்கு அதிக இடம் தேவைப்படும். பல வண்டிகளைப் பல மணி நேரத்துக்கு நிறுத்திவைக்க வேண்டும். நகரங்களில் இடம் கிடைப்பது கடினம். அப்படிக் கிடைத்தாலும் அதிக செலவு ஆகும். மின்கலத்தை மாற்றும் சேவைக்கு அவ்வளவு இடம் தேவைப்படாது. ஒரு வண்டியை நிறுத்தி மின்கலத்தை மாற்ற ஒரு சில நிமிடங்களே ஆகும். இவை தனித்த நிறுவனங்களாக இருக்க வேண்டுமென்ற தேவைகூட இல்லை. இருக்கும் பலசரக்குக் கடைகளிலேயே மின்னேற்றும் நிலையத்தை வைத்து இந்தச் சேவையை அளிக்க முடியும்.
அதிவேக மின்னேற்றம் செய்யவேண்டியதில்லை
மின்கலத்தை மாற்றீடு செய்வதில் வேறுசில பயன்களும் உள்ளன. அதிவேக மின்னேற்றம் செய்ய வேண்டியதில்லை. இது செலவையும் குறைக்கும், மின்கலத்தின் ஆயுளையும் நீட்டிக்கும்.
ஒரு சேவையாக மின்கலம் (Battery as a Service)
மின்னூர்தியின் விலையில் 30 முதல் 40 விழுக்காடு மின்கலத்துக்கே ஆகிறது. ஆகவே சில இருசக்கர மின்னூர்தித் தயாரிப்பாளர்கள் ஊர்தியை மின்கலம் இல்லாமல் குறைந்த விலையில் விற்பனை செய்கிறார்கள். இத்துடன் சேர்த்து மின்கலத்தை ஒரு சேவையாக வழங்குகிறார்கள். இந்த சேவைக்கு மாத சந்தாக் கட்டணம் உண்டு. தவிரவும் ஒவ்வொரு முறை நீங்கள் வடிந்த மின்கலத்தைக் கொடுத்துவிட்டு மின்னேற்றிய மின்கலத்துக்கு மாற்றும்போதும் ஒரு கட்டணம் உண்டு. சீனாவில் ஒருசில கார் கம்பெனிகளும் இந்த முறையில் விற்பனை செய்கிறார்கள். காரில் எந்திரன் மூலம் மின்கலத்தை மாற்றும் சேவை நிலையங்கள் பல வைத்துள்ளார்கள்.
மின்னூர்தித் தொகுதிகள் (fleets)
தொழிற்சாலைகள், அலுவலகங்கள், மின்வணிக நிறுவனங்கள் ஆகியவை பல ஊர்திகளைக் கொண்ட மின்னூர்தித் தொகுதிகளைப் பயன்படுத்துகிறார்கள். இவர்களுக்கும் மின்கலத்தை மாற்றீடு செய்தல் தோதானது. ஏனெனில் மின்கலத்தைத் துரிதமாக மாற்றி ஊர்திகளைத் தொடர்ந்து பயன்படுத்த இயலும்.
சரக்கு சேமித்தனுப்பல் (logistics), நுகர்வோருக்குக் கொண்டு சேர்த்தல் (last-mile delivery) போன்ற வேலைகளில் ஈடுபட்டிருக்கும் ஊர்திகளை இடையில் நிறுத்தி சில மணி நேரங்கள் மின்னேற்றம் செய்தால் வேலை தடைப்படும். இம்மாதிரித் தேவைகளுக்கு மின்கலத்தை மாற்றீடு செய்தல் இன்றியமையாதது.
நன்றி
இத்தொடரில் அடுத்த கட்டுரை: பழைய மின்கலம் மறுசுழற்சி
மறுசுழற்சிக்கு முன் மறுபயன்பாடு. புதிய மூலப்பொருட்களின் தேவையைக் குறைக்கிறது. சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தவிர்க்கிறது. முறைசாராத் தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக விளங்குகிறது.