நிரல் எழுதாமல் ஒரு திறந்த மூல திட்டத்துக்கு பங்களிக்க 10 வழிகள்
சமீபத்திய ஒரு opensource.com கட்டுரையில் பின்னூட்டம் அளித்த ஒருவர், தான் திறந்த மூல திட்டங்களுக்கு உதவியளிக்க விரும்புவதாகவும் ஆனால் நிரல் எழுதத் தெரியவில்லையே என்றும் அங்கலாய்த்தார். உண்மையில், நிரல் எழுதுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும், வரவேற்கிறோம். ஆனால் திறந்த மூல திட்டங்களுக்கு பங்களிக்க மற்ற பல வழிகளும் உள்ளன.
முதலில் திறந்த மூல திட்டங்கள் பற்றி நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய குறிப்புகள் இரண்டு உள்ளன:
- திறந்த மூலம் என்பது ஆலோசனை எதுவுமின்றி நிரலை மட்டும் எழுதித் தூக்கிப்போடுவதல்ல. அது நமக்கு உதவிய திட்டத்துக்கு நாம் திரும்ப ஈடுபாட்டுடன் பங்களிப்பது பற்றியது. என் திறந்த மூல வேலைவாழ்க்கை தொடங்கிய போது INN போன்ற மென்பொருள் எனக்கு மிகவும் பயனுள்ளதாய் இருந்தது. பின்னர் அதில் என்னுடைய மாற்றங்கள் மற்றும் சேர்க்கைகளைத் திரும்பிக் கொடுத்தது இயற்கையாகவே நடந்தது.
- தகுதி அடிப்படையில்தான் திறந்த மூலத் திட்டங்களில் பொறுப்பு கிடைக்கும். நீங்கள் முதல் முறையாக ஒரு திட்டத்தில் வேலை தொடங்கும்போது உங்கள் திறமை என்ன என்பது ஒருவருக்கும் தெரிய வழியில்லை. ஆகவே தகவல் பரிமாறுவது மிக முக்கியம். நீங்கள் வேலை தொடங்குவதற்கு அல்லது பிரச்சினை சரி செய்வதற்கு என்ன தேவையோ அதைக் கேட்டு வாங்குங்கள். இல்லையெனில், உங்களை அலட்சியப்படுத்த வாய்ப்பு உண்டு. நீங்கள் முன்பு வேறு திறந்த மூல திட்டத்தில் பங்களித்திருந்தால், நிரல்கள் மற்றும் விக்கி ஆவணங்களை அணுக அனுமதிகள் விரைவாகக் கிடைக்கலாம். ஏனெனில் நீங்கள் புதிய அம்சத்தை செயல்படுத்த வாய்ப்பு அதிகம் என்று குழுவினருக்கு நம்பிக்கை ஏற்படும்.
ஒரு திறந்த மூலத் திட்டத்தில் உதவத் தொடங்குவதற்கு அதைச் சுற்றி உள்ள சமூகத்தில் நுழையும் போது, நீங்கள் “வெளியே” ஆரம்பித்து “உள்ளே” சென்று முடியும் ஒரு பாதையில் செல்லத் துவங்குகிறீர்கள். இது எந்த சமூகத்துக்கும் பொதுவானதுதான். ஆனால் ஒரு திறந்த மூல சமூகத்துக்கு மிகவும் பொருந்தும். உங்கள் முதல் தொடர்பு முயற்சிக்கு பலன் எதுவும் இல்லையென்றால் உடன் ஏமாற்றமடைய வேண்டாம். தொடர்ந்து பங்களியுங்கள், பகிருங்கள் மற்றும் மரியாதையுடன் தொடர்பு கொள்ளுங்கள். நீங்கள் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்.
ஒரு திறந்த மூல சமூகத்துக்கு நிரல் எழுதாமல் பங்களிக்க 10 வழிகள்
- பின்னூட்டம் அளித்தல் மற்றும் வழு அறிக்கை தயாரித்தல்: உங்களுக்குப் எது பிடித்தது எது பிடிக்கவில்லை என்று பின்னூட்டம் அளியுங்கள். நீங்கள் அந்த மென்பொருளைப் பயன்படுத்தும்போது வழு எதுவும் வந்தால் அதற்கான வழு சீட்டு பூர்த்தி செய்யுங்கள். தேவைப்பட்டால் அதற்குரிய நபர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள். பயனர்களுக்கு இத்திட்டம் எப்படி உதவியது மற்றும் நீங்கள் எவ்வாறு அமைத்து பயன்படுத்துகிறீர்கள் போன்ற விவரங்கள் கேட்க அவர்கள் விரும்புவார்கள்.
- அம்சம் கோரிக்கைகளை உருவாக்குதல்: உங்கள் பயன்பாட்டு முறையை விளக்கி அம்சம் கோரிக்கைகளை உருவாக்குங்கள். உங்களுக்கு இது எப்படி பயனுள்ளதாக இருக்கும் மற்றும் மற்றவர்கள் எப்படி நன்மை அடைய முடியும் என்பதைத் தெளிவாக விவரியுங்கள். நிரல் பங்களிப்புகள் இல்லாமல் அதைச் செயலாக்குவது நிச்சயமாகக் கடினம்தான். இருப்பினும் இந்த அம்சம் எப்படிப் பயனுள்ளதாக இருக்கும் என்பதைத் தெளிவாக விளக்கினால் மற்றவர்களுக்கும் அதே பிரச்சினை இருப்பது தெரிய வரலாம். இறுதியில் எவராவது ஒருவர் இந்த புதிய அம்சத்தை செயல்படுத்த முன் வரலாம்.
- சோதித்தல்: நிரல் எழுதப்பட்டு வரும் போதே சோதித்துப் பாருங்கள். எத்தனை தானியக்க சோதனைகள் இருந்தாலும் உண்மையில் திட்டம் ஒரு குறிப்பிட்ட வன்பொருள் மற்றும் மென்பொருள் இணைந்த சுற்றுச்சூழலில் ஓடுகிறது. அந்த சுற்றுச்சூழலிலும் பல காரணிகள் திட்டக் குழுவினால் சோதனை செய்யப்படாமலே இருக்கும். இவை அனைத்தையும் நடைமுறையில் சோதனை செய்யவும் இயலாது. எனவே தினந்தோறும் அல்லது வாரந்தோறும் தயாராகும் நிரலை நிறுவி சோதித்துப் பார்த்து பின்னூட்டம் மற்றும் கருத்துகளை கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மற்றும் வரவேற்கப்படும். நான் வேலை செய்யும் ஒரு திட்டத்தில் சில வரைபடங்களில் மாற்றங்கள் செய்தோம். ஒரு சமூக உறுப்பினர் சமீபத்திய நிரலைப்பற்றிய தனது பின்னூட்டத்தை அனேகமாக தினசரி கொடுத்து வந்தது திருத்தங்கள் மற்றும் மேம்பாடுகள் செய்ய மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
- ஆவணங்கள் எழுதுதல்: பல திட்டப் பங்களிப்பாளர்கள் நல்ல நிரலாளர்கள் ஆனால் நல்ல ஆவணம் எழுதுபவர்கள் அல்ல. சில ஆவணங்களைப் படிப்பதே கடினம். இலக்கணம், எழுத்துப் பிழை மற்றும் வாக்கிய அமைப்புகளை சரிபார்த்தல் தேவை. ஒட்டுமொத்த திட்டம் செயல்படுத்தவும் பரிணாம வளர்ச்சிக்கும் இது உதவுகிறது. சில ஆவணங்களில் தொழில்நுட்ப நுணுக்கங்கள் இருக்கும் ஆனால் ஆரம்ப பயிற்சியாளர்களுக்கு எந்த விவரங்களும் இருக்காது. மேலும் அரிதான பயன்பாட்டு முறைகள், தற்காலிகத் தீர்வுகள் மற்றும் சிறந்த நடைமுறைகள் எழுதி சேர்க்கப்பட வேண்டும். மீண்டும் மீண்டும் அதே கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படுகிறது என்றால், நீங்கள் ஒரு அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ) ஆவணம் எழுதலாம் அல்லது புதுப்பிக்கலாம். பிற்காலத்தில் இந்த பதில்கள் எளிதான குறிப்புதவியாக இருக்கும்.
- பயனர் இடைமுகம் மற்றும் ஆவணங்களை மொழிபெயர்த்தல்: பல பயனர்களுக்கு ஆங்கிலம் நன்றாகப் புரியும். எனினும் பலர் தங்கள் தாய் மொழியில் எழுதப்பட்ட ஆவணங்களை ரசித்துப் படிப்பார்கள் என்பதும் உண்மை தான். முதல் ஜேபாஸ் (JBoss AS) ஜெர்மன் புத்தகம் எழுதிய பிறகு என்னைப் பலர் தொடர்பு கொண்டனர். அவர்கள் ஏற்கனவே ஆங்கிலத்தில் கிடைத்த அனைத்து ஆவணங்களையும் படித்த பின்னரும் தங்கள் சொந்த மொழியில் புத்தகம் கிடைத்ததால் பயனடைந்தனர். மற்ற மொழிகளில் படிக்கும்போது மொழி திசை திருப்புவதால் தொழில்நுட்ப விவரங்களில் அதிகமாக கவனம் செலுத்த இயலுவதில்லை.
- அஞ்சல் பட்டியலிலும் மன்றங்களிலும் பயனர் கேள்விகளுக்கு பதில் அளித்தல்: நீங்கள் நினைத்ததைவிட உங்களுக்கு அதிகமாகத் தெரியும் என்பது உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கலாம். மற்றும் கேள்வி கேட்ட பயனர்கள் உங்கள் உதவிக்கு மிகவும் நன்றியுடையவர்களாக இருப்பார்கள். மேலும் நீங்கள் ஒரு கேள்விக்கு பதில் அளிக்க முயலும்போதுதான் உங்களால் அந்த திட்டத்தை நன்கு புரிந்து கொள்ள முடியும். பிழை அறிக்கைகள், அம்சம் கோரிக்கைகள், மற்றும் ஆவணங்களை நன்றாக எழுத இது உங்களுக்கு உதவும். விரைவாக பதில்களைப் பெற்ற பயனர்கள் மேலும் திட்டத்தில் ஈர்க்கப்பட்டு தங்கவும் மற்றும் பங்களிப்பு செய்யவும் வாய்ப்பு அதிகம். ஆகவே மைய திட்ட உறுப்பினர்கள் நிரல் எழுதுவதில் அதிக நேரம் செலவிட முடியும். இவை இரண்டும் சேரந்து முழுத் திட்டத்தையும் வலுப்படுத்தும்.
- பயனர் இடைமுகம், இலச்சினை, மற்றும் வலைத்தளத்தை வடிவமைக்க உதவுதல்: பல நிரலாளர்கள் அவர்கள் போக்கில் மிகவும் தொழில்நுட்பமான பயனர் இடைமுகங்களை உருவாக்குகின்றனர். ஆனால் அவை நேர்த்தியாக இல்லாததால் புதிய பயனர்களை ஈர்ப்பதில்லை. பயனர்கள் என்ன பணி முடிக்க விழைகிறார்களோ அதை, ஆவணங்களைப் படித்தால்தான் ஆகும் என்றில்லாமல், உள்ளுணர்வுடன் செய்து முடிக்க இயல வேண்டும். இவ்வாறு பயன்படுத்த எளிதான இடைமுகங்களால் கூடுதல் செயல்பாடுகளை செய்ய முடியாது என்பது உண்மைதான். ஆனால் பயனர் அனுபவத்தை மிகவும் மேம்படுத்த முடியும். இது வலைத்தளத்துக்கும் இலச்சினைகளுக்கும் கூடப் பொருந்தும். ஆகவே திட்டத்தின் வெளித் தோற்றத்தை மேம்படுத்துவதால் புதிய பயனர்களை ஈர்க்க முடியும் மற்றும் ஆதரவு வேலைப்பளு குறைக்கவும் வழி செய்யும்.
- திட்டத்தை பரப்புதல்: உங்கள் உள்ளூர் பயனர் குழுவில் திட்டத்தைப் பற்றி பேசுவது, வலைப்பதிவில் எழுதுவது மற்றும் சமூக ஊடகம் வழியாக பரப்புவதன் மூலம் திட்டத்தை ஊக்குவிக்கலாம். மற்றவர்கள் திட்டத்தைப் பற்றிக் கேட்டிருப்பார்கள் என்று நினைக்கவேண்டாம். திட்டத்தைப் பற்றியோ, நிரலையோ இணையத்தில் பார்ப்பதைவிட தங்கள் சொந்த அனுபவத்தை ஒருவர் பேசக் கேட்டால் ஒரு வித்தியாசமான வலுவான வழியில் அவர்களை ஈடுபடுத்தும்.
- வன்பொருள் வழங்குதல்: நிரல் எழுதித் தொகுக்கவோ அல்லது சோதனை செய்யவோ வழங்கிகள் தேவைப்பட்டால் நன்கொடையளிக்கலாம். அல்லது உங்களுடைய தரவுமையத்தில் வழங்கிகள் இருந்தால் நிரலாளர்களுக்கு தொடர்ச்சியான ஒருங்கிணைப்பு செய்ய உதவியாக அணுகலை வழங்கலாம். அல்லது நீங்களே உங்கள் வழங்கியில் திட்ட மென்பொருளை நிறுவி சோதனை செய்து முடிவுகளை மீண்டும் திட்டத்துக்கு வழங்கலாம்.
- நன்றி தெரிவித்தல்: நீங்கள் எந்த இலக்குகளை நோக்கி வேலை செய்கிறீர்களோ அதற்கு உதவியாக இருக்கும் திறந்த மூல சமூகத்துக்கும் அவர்களின் பங்களிப்புக்கும் நன்றி கூறுங்கள்.
நிரல் எழுதாமல் ஒரு திறந்த மூல திட்டத்துக்கு உதவத் தொடங்குவதற்கு இவை எல்லாமே சிறந்த வழிகள்தான்.
மூலக்கட்டுரை எழுத்தாளர் பற்றி: ஹைக்கோ ரப் (Heiko W. Rupp) நீண்ட நாட்களாக திறந்த மூல திட்டங்களில் நேரடியாக மூல நிரலை மாற்றும் உரிமை பெற்றவர். அவர் தற்போது ரெட் ஹேட் (Red Hat) நிறுவனத்தில் வழங்கி மற்றும் மென்பொருள் அமைப்புகள் கண்காணிப்பு மற்றும் மேலாண்மைத் துறையில் வேலை செய்கிறார். அவர் ஜெர்மனியில் கார்ல்ஸ்ரூஹே (Karlsruhe) பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் முதுகலை பட்டம் பெற்றவர். ஜேபாஸ் (JBoss AS) மற்றும் என்டர்பிரைஸ் ஜாவா பீன்ஸ் (Enterprise Java Beans) ஆக இரண்டு புத்தகங்களையும் எழுதியுள்ளார்.
மூலம்: opensource.com தமிழாக்கம் மற்றும் தொகுப்பு: இரா. அசோகன்