முதலில் Dark Pattern என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள். நாம் எல்லோருமே இணையத்தில் பல தளங்களைப் பயன்படுத்துகிறோம். அலைபேசியில் பல செயலிகளைப் பயன்படுத்துகிறோம்.
இந்தத் தளங்கள், செயலிகள் – நமக்குத் தெரியாமலே நம்மை ஏதாவது ஒரு செயலில் ஈடுபடுத்துவது தான் Dark Pattern என்பது! அதென்ன நமக்குத் தெரியாமலே நம்மை ஏதாவது ஈடுபடுத்துவது என்பது?
அமேசான் முதலிய இணைய வணிகத்தளங்களில் பொருட்கள் வாங்க முயன்றால், பல நேரங்களில் இந்தப் பொருளோடு இன்னொரு பொருளையும் சேர்த்து விலையைக் காட்டுவது (அலைபேசி வாங்க முனைந்தால், செவிப்பொறி(earphone)யையும் சேர்த்து விலை காட்டுவது) ஒரு வகை Dark Pattern தான்.
இணையத்தளத்தில் ஒரு பொருளின் விலையை மிகக் குறைவாக முதலில் காட்டுவார்கள். விலை குறைவாக இருக்கிறதே என்று நாமும் வாங்க முயல்வோம். கடைசிப் பக்கத்திற்குப் போய்ப் பணம் கட்டப் போனால் தான் தெரியும் – அனுப்பு கட்டணம்(delivery charge), வரி என்று கூட்டி, விலையை ஏற்றி விடுவார்கள். பல நேரங்களில் நாமும் அதைக் கவனிக்காமலே பணத்தைச் செலுத்தி விடுவோம். இப்படி நமக்குத் தெரியாமல் நம்மை விற்பனையில் ஈடுபடுத்துவது Dark Pattern தான்.
முகநூலின் கருப்புப் படிவம்:
முகநூல் முதலிய இணையத்தளங்களுக்குப் போய்ப் பாருங்கள். யாராலும் மிக எளிதாக முகநூல் கணக்கு உருவாக்கி விட முடியும். ஆனால் உருவாக்கிய கணக்கை அழிப்பது என்பது குதிரைக்கொம்பான செயலாக இருக்கும். அவ்வளவு எளிதாக வெளியேறிவிட முடியாது. இப்படிப் பயனரைப் பாடாய்ப் படுத்தியாவது அவருடைய தகவல்களைத் திரட்டிப் பணம் சம்பாதித்து விட வேண்டும் என்னும் வெறி தான்! ‘யோக்கியனுக்கு இருட்டில் என்ன வேலை?’ என்பது போல, இந்தச் செயலுக்கு இருட்டு(Dark) என்னும் பெயர் தானே பொருத்தமாக இருக்கும்!
தினமலரின் கருப்புப் படிவம்:
ஒரு செய்தி இணைப்பைக் காட்டுவது, அந்தச் செய்தி உண்மை என்று நம்பிச் செய்தித்தாளை வாங்கினால், பொய்யான இன்னொரு செய்தியைக் காட்டுவது. இதற்கு ஓர் எடுத்துக்காட்டு சொல்கிறேன்
இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் இன்றைய நாள் வரை, தமிழ்நாட்டில் ஊரடங்கு நீக்கப்படவில்லை என்பது உங்கள் எல்லோருக்குமே தெரியும். ஆனால் கீழ் உள்ள, தினமலர் செய்தித்தாளின் தலைப்பைப் பாருங்கள் – “ஊரடங்கு ரத்து – முதல்வர் அதிரடி” என்று செய்தி வெளியாகியிருக்கிறது. (செய்தி வெளியான தேதியையும் பாருங்கள்).
பொய்யான செய்தியை ஏன் இப்படித் தலைப்பாகக் கொடுத்தார்கள்? செய்தித்தாள் வாங்கியவர்களுக்கு மட்டும் தான் தெரியும் – அந்த ஊரடங்கு ரத்து – இங்கில்லை – கர்நாடகத்தில் என்று! இதே போலத் தான் அதற்கடுத்த செய்தியான “முதல்வர் உதவியாளரிடம் சி.பி.ஐ., கிடுக்கிப்பிடி” செய்தியும்! தமிழக முதல்வரின் உதவியாளர் என்று பலர் நினைத்திருப்பார்கள்.
இந்தச் செய்திகளைத் தெரிந்து கொள்ள ஆர்வத்துடன் தினமலரைப் பலரும் அன்று வாங்கியிருப்பார்கள் அல்லவா! அந்தச் சில்லரைக் காசுக்குத் தான் இந்தச் சேட்டை எல்லாம்! இதுவும் ஒருவகை Dark Pattern தான்!
இப்படிக் காசுக்காகக் கண்டபடியும் மாறும் நிறுவனங்களின் கருப்பான வேலைகளுக்குத் தான் Dark Pattern என்று பெயர். இதைப் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ள darkpatterns.org/ தளத்திற்குப் போகலாம்.