பள்ளியில்,கணினி அறிவியல் படித்த மாணவர்களுக்கு நிச்சயமாக தெரிந்திருக்கும்.முதன் முதலில் “புரோகிராமிங் “என்கிற பெயரில் ஹலோ வேர்ல்ட்(hello world) எனும் வார்த்தையை, கணினி திரையில் வெளியீடாக(display ) கொண்டு வர சொல்லுவார்கள்.
செய்முறை தேர்வுகளுக்கு கூட, இந்த கேள்விகள் கேட்கப்பட்டு இருப்பதாக, என்னுடைய நண்பர்கள் சொல்லி கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆனால் அதற்கு கூட, நண்பர்கள் பலமுறை திணறிக் கொண்டிருப்பதை நான் கவனிக்க தர வரவில்லை.
எதற்காக include போடுகிறோம்? எதற்காக # போடுகிறோம்? Main() என்றால் என்ன? Return எதற்கு எழுத வேண்டும்? என அடிப்படைகளை புரிந்து கொள்ளாமலேயே, கடமைக்காக ப்ரோக்ராம் எழுதிவிட்டு வெளியே வருவதால் தான், பின் நாட்களில் திணற வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது
பாருங்கள்! இன்றைக்கு ஹலோ வேர்ல்டு வேண்டாம்! ஹேப்பி பொங்கலோடு நமது முதலாவது சி நிரலாக்கத்தை தொடங்குவோம்.
லினக்ஸ் போன்ற இயங்குதளங்களில் இருக்கும் கட்டளை அமைப்பில்(command line),உங்களால் சி ப்ரோக்ராம்களை செயல்படுத்தி பார்க்க முடியும்.
இருந்த போதிலும், இந்தக் கட்டுரையில் அனைவருக்கும் புரிய வேண்டும் என்பதற்காக இணையத்தில் இருக்கும் நிரலாக்க செயல்படுத்தி(website based compiler)ஒன்றை பயன்படுத்துகிறேன்.
வரக்கூடிய கட்டுரையில் ,லினக்ஸ் போன்ற இயங்குதளங்களில், எவ்வாறு சி ப்ரோக்ராம்களை செயல்படுத்துவது என்று பார்க்கலாம்.
சரி! சமையல் செய்யப் போகிறோம்! அதற்கு என்னவெல்லாம் தேவை ?
அரிசி,காய்கறிகள்,நீர்,காய்கறி வெட்ட கத்தி,எண்ணெய்,மசாலா போதும் போதும், லிஸ்ட் பெருசா போகுது போல, இதோட ஸ்டாப் பண்ணி விடுவோம்.
இத்தனை பொருட்களையும் சேர்த்தால் தான்,ஏதாவது ஒரு சமையலை செய்ய முடியும். அதுபோல சி மொழியில் நிரலாக்கம் எழுதுவதற்கு, சில அடிப்படையான தகவல்கள் உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்.
#include இந்த வார்த்தையை பயன்படுத்துவதன் மூலமாக, குறிப்பிட்ட இடத்தில் இருக்கும் பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்பதை கணினி உணர்ந்து கொள்கிறது.
#include<மளிகை கடை.h> என எழுதினால் மளிகை கடையில் இருக்கும் பொருட்களை நாம் பயன்படுத்த வேண்டும் என்று அர்த்தம். அதற்காக நான் எழுதியது போல மளிகை கடை என்று எழுதி விடாதீர்கள்.
இத்தகைய செயல்பாடு(function library) இன்னும் சி மொழிக்கு வரவில்லை, ஒருவேளை வருங்காலத்தில் வந்தால், மளிகை கடையைப் பயன்படுத்தி கூட உங்களால் ப்ரோக்ராம் எழுத முடியும்.
#include<stdio.h> என்பது பொதுவாக C மொழியில் பயன்படுத்தப்படும் தலையாய தலைப்பு சொல்(header file) ஆகும். Standard input/output இதன் முழு விளக்கமாகும்.
இதன் மூலம் சி மொழியின் நூலகத்தில் இருக்கும், குறிப்பிட்ட சில செயல்பாடுகளை நம்மால் பயன்படுத்திக் கொள்ள முடியும்!
இதை பயன்படுத்துவதன் மூலம், அதற்கான அனுமதியை நாம் இங்கு பெற்றுக்கொள்ள முடிகிறது.
•h என்பது இது தலைப்பு கோப்பு என்பது எடுத்துக்காட்டுகிறது. இந்த தலைப்பிற்குள் இருக்கக்கூடிய செயல்பாடுகளை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதற்காகவே .h ஐ பயன்படுத்துகிறோம்
Int main() என்பதில், int நாம் எழுதப் போகிற நிரலாக்கத்திற்கு, திருப்புதல் மதிப்பு(return value) இருப்பதை எடுத்துக்காட்டுகிறது.மேலும், இதுதான் நம்முடைய முதன்மையான நிரலாக்க செயல்பாடு(main function)என்பதை main () என்பதன் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.
அதற்குப் பிறகு வளைந்த அடைப்புக்குறிகளைக் ( { ) கொண்டு, நிரலாக்க உள்ளடக்கங்களை எழுதத்(body of the program)தொடங்க வேண்டும்.
Printf எனும் குறிச்சொல் ஆனது, நாம் கொடுத்திருக்கும் தகவலை கணினி திரையில் வெளிப்படுத்த வேண்டும் எனும் கட்டளையை பிறப்பிக்கிறது.
Printf(“happy pongal”) என எழுதும்போது, கணினித்திரையில் happy pongal எனும் வாசகம் வெளியாகும்.
இறுதியாக, return 0 என எழுத வேண்டும்.இந்த இடத்தோடு இனிதே நமது நிரலாக்கம் நிறைவடைகிறது! என்று கணினிக்கு தெரியப்படுத்துவதற்கு தான் return 0 என எழுதுகிறோம்.
#include <stdio.h>
int main() {
printf(“happy, pongal!”);
return 0;
}
அதேநேரம், நாம் எழுதும் ஒவ்வொரு நிரலாக்க வரி நிறைவடையும்போதும் ” ; ” ( அரை நிறுத்த புள்ளி) இட வேண்டும்.
இறுதியாக, எப்படி தொடங்கினோமோ அதுபோலையே வளைந்த அடைப்பு குறிகளைக் கொண்டு நிரலாக்கத்தை நிறைவு செய்துவிட வேண்டும்.
ஏதோ கேட்பதற்கு பெரிய காரியம் போல் இருந்தாலும் ! வெறும் நான்கு வரிகளுக்குள் பொங்கல் வாழ்த்த்தை எழுதிவிட முடியும்.
சரி பொங்கல் வாழ்த்து எழுத படித்துக் கொண்டோம் இதை எங்கு எழுத வேண்டும் என்று தெரிய வேண்டாமா? எங்கெங்கெல்லாம் சி நிரலாக்கத்தை எழுதலாம்? எங்கெங்கெல்லாம் பயிற்சி செய்யலாம்? என்பது தொடர்பாக அடுத்து வரும் கட்டுரையில் விரிவாக விளக்குகிறேன்.
மேற்படி, இந்த கட்டுரை குறித்து உங்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் இருப்பின் தயங்காமல் என்னுடைய மின்மடல் முகவரிக்கு மடல் இயற்றவும்.
இந்த கட்டுரை குறித்த சில தகவல்களை பெறுவதற்கு geeks for geeks இணையதளத்தை பயன்படுத்தி இருக்கிறேன்.
கட்டுரையாளர்:-
ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
(தென் திருவிதாங்கூர் இந்து கல்லூரி, நாகர்கோவில் – 02)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின்மடல் முகவரி : srikaleeswarar@myyahoo.com
இணையம் : ssktamil.wordpress.com