மருத்துவத்துறை
முன்பெல்லாம் மருத்துவர் ஸ்டெதஸ்கோப்பை பயன்படுத்தி இதயத்துடிப்பை பரிசோதிப்பார். அக்கால மருத்துவர்கள் கையில் கட்டி இருக்கும் கடிகாரத்தின் ஒவ்வொரு வினாடி நகர்வையும் கவனமாக கவனித்துக் கொண்டே, இதயத்துடிப்பையும் எண்ணிக்கொண்டிருப்பார்கள். இதயத்துடிப்பில் திடீரென ஏற்படும் மாற்றங்களை இவ்வாறு தான் அவர்கள் கண்டறிய வேண்டிய நிலை இருந்தது.
தொடர்ந்து இசிஜி போன்ற தொழில்நுட்பங்களின் வருகைக்குப் பிறகு, சிக்கலான இதய கோளாறுகளையும் எளிமையாக கண்டறியும் நுட்பம் வளரத் தொடங்கியது. இருந்த போதிலும் கூட, அவசர சிகிச்சை வழங்கக்கூடிய மருத்துவமனைகளில் மட்டுமே இது போன்ற கருவிகள் இருந்தன. இன்றளவும் கூட பல்வேறு கிராமப்புற சிறிய மருத்துவ சிகிச்சை நிலையங்களில் இது போன்ற உயர் நவீன தொழில்நுட்ப கருவிகளை நாம் எதிர்பார்க்க முடியாது.
சிக்கலான இதய கோளாறுகளை சந்தித்து இருப்பவர்களின் இதயத்துடிப்புகளை சரியாக பார்ப்பதற்கு, தற்காலத்தில் விரல்களிலேயே அணிந்து பார்க்கக்கூடிய ஹார்ட் ரேட் சென்ஸார்(heart rate sensor )மற்றும் பல்ஸ் ஆக்சிமிட்டர்கள்(pulse oximeter)வந்துவிட்டன.
ஸ்மார்ட் கை கடிகாரங்கள்
ஆனால், சமீப ஆண்டுகளாக 500 ரூபாய் முதல் கிடைக்கக்கூடிய ஸ்மார்ட் கைகடிகாரங்களில் கூட இதயத்துடிப்பை பார்த்துக் கொள்ளும் வசதி இருப்பதாக விளம்பரம் செய்யப்படுகிறது. சிலர் இதெல்லாம் பொய்; வாய்க்கு வந்த இதயத்துடிப்பு மதிப்பை அடித்து விடுகிறது என்று கருதவும் செய்கிறார்கள். ஆனால், இதற்குப் பின்னால் இருக்கக்கூடிய அறிவியல் தான் என்ன? உண்மையிலேயே கையில் கட்டி இருக்கும் கைகடிகாரத்தால் உங்களுடைய இதயத்துடிப்பை கணிக்க முடியுமா?
உண்மையிலேயே உங்களுடைய கை கடிகாரத்தின் மூலம் இதயத்துடிப்பை கண்டறிய முடியும். உங்களுடைய பொதுவான கைக்கடிகாரங்களை திருப்பி பார்க்கும்போது அதிலிருந்து பச்சை நிற ஒளி(green light usually ranging between 550nm) வெளிப்படுவதை பார்க்க முடியும். அதற்காக சும்மா திருப்பி பார்த்தேன் ஒன்றும் தெரியவில்லை என்று சொல்லிவிடாதீர்கள்.உங்கள் கைகளில் அணிந்து கொண்டு இதயத்துடிப்பை அளப்பதற்கான அமைப்பில் சென்று பார்வையிடுங்கள்.அதிலிருந்து ஒரு பச்சை நிற ஒளி வெளியேறும். எதற்காக பச்சை நிற led விளக்கு கொடுத்திருக்கிறார்கள் என்று யோசிக்கிறீர்களா?
பச்சை நிறக் காரணம்
அடிப்படையில் நம்முடைய ரத்தத்தில் இருக்கும் ஹீமோகுளோபின் ஆனது, பச்சை நிற ஒளியை பிரதிபலிக்கக் கூடியது. அதாவது,ஹீமோகுளோபின் மீது பச்சை நிற ஒளிபடும்போது அவற்றை சற்றே உள்வாங்கிக் கொண்டு உடனடியாக வெளிவிட்டு(absorb and releases)விடும். அது ஏன் பச்சை நிற ஒளியை மட்டும் தான் வழங்க வேண்டுமா?? வண்ண வண்ண கலர் களில் லைட் அடித்தால் ஹீமோகுளோபினுக்கு பிடிக்காத என்று கேட்டு விடாதீர்கள். உண்மையை சொல்லப் போனால், சிவப்பு நிற ஒளி மற்றும் நீல நிற ஒளியானது ஹீமோகுளோபினுக்கு மிகவும் பிடிக்கும். இதன் காரணமாக அந்த நிற ஒளிக் கற்றைகளை ஹீமோகுளோபின் ஆனது தனக்குள்ளாக ஈர்த்துக் கொள்ளும்.(அடிப்படையில், ஹீமோகுளோபின் என அறியப்படும் ரத்த சிவப்பு அணுக்களானது சிவப்பு மற்றும் நீல நிறத்தை தன்னகத்தே ஈர்த்துக் கொள்ளும். மேலும் இந்த நிறங்கள் அதிகமாக சிதறடிக்கப்படுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.)
அதேநேரம், பச்சை நிற ஒளியை பொருத்தமட்டில் ஹீமோகுளோபின் வெளிவிட்டு விடும். ஒருவேளை பச்சை நிற ஒளிக்கு பதிலாக சிவப்பு நிற ஒளியை நாம் வழங்கினால் நம்மால் சரியாக இதயத்துடிப்பை அளவிட முடியாது என்பதுதான் நிதர்சனம். சரி பச்சை நிற ஒளி வெளிப்படுகிறது அதற்குப்பின் என்ன நடக்கும் என்று கேட்கிறீர்களா? அந்த பச்சை நிற ஒளி கற்றைகள் நம்முடைய தோலை துளைத்துக் கொண்டு , நரம்பின் வழியாக சென்று கொண்டிருக்கும் ரத்த செல்களை அடையும். அங்கு இருக்கும் ஹீமோகுளோபின் ஆனது இந்த பச்சை நிற ஒளியை உள்வாங்கும், உள்வாங்கிய உடனேயே வெளிவிட்டு விடும். இத்தகைய வெளிவிடப்படும் ஒளியானது கைக்கடிகாரத்தில் இருக்கும் உணர்வியின்(sensor)மூலம் பெற்றுக் கொள்ளப்படும். இவ்வாறு பெற்றுக்கொள்ளப்பட்ட ஒளியை பரிசோதித்துப் பார்க்கும் கைக்கடிகாரத்தின் உள்ளார்ந்த மின் சுற்று பகுதியானது(IC), எந்த வேகத்தில் ரத்தம் பாய்கிறது? எந்தெந்த இடங்களில் அதிர்வெண் மாற்றம்(frequency change)தெரிகிறது போன்றவற்றை கண்டறியும். எத்தனை வினாடிகளுக்கு ஒருமுறை அதிர்வெண் மாற்றம் தெரிகிறதோ! அதை அடிப்படையாகக் கொண்டு இதயத்துடிப்பானது கணக்கிடப்படும். உதாரணமாக ஆரோக்கியமான மனித இதயத்துடிப்பு 70 முதல் 80 வரை இருக்கும் என்று சொல்வார்கள்.
அப்படியானால், பத்து வினாடியில் சுமார் 12 முதல் 13 தடவை அதிர்வெண் மாற்றம் தெரிந்திருக்க வேண்டும். இதை அடிப்படையாகக் கொண்டுதான் மனித இதயத்துடிப்பானது கணக்கிடப்படுகிறது. ஆனால், இதில் பல்வேறு விதமான சிக்கல்கள் இருக்கிறது. உங்களுடைய தோலின் நிறத்தை அடிப்படையாகக் கொண்டும் மற்றும் உங்களுடைய தோலின் தடிமன் போன்றவற்றாலும் கூட, இந்த இதயத்துடிப்பு அமைப்பானது சரியாக செயல்படாமல் போகலாம். காரணம் இந்த ஒளிக் கற்றைகள் உங்களுடைய தோலுக்குள் ஊரூருவை செல்ல வேண்டும். ஒருவேளை சரியாக ஊடுருவி செல்லவில்லை என்றால், சரியான இதயத்துடிப்பை அறிந்து கொள்ள முடியாது.
மேலும் கைக்கடிகாரத்தை உங்களுடைய கைக்கு ஏற்றார் போல அணிந்து கொள்ள வேண்டும். மிகவும் இறுக்கமாகவோ அல்லது எப்போது வேண்டுமானாலும் கழன்று விழுவது போலவோ அணிந்து கொண்டிருந்தால் சரியான இதயத்துடிப்பை கண்டறியவே முடியாது. மேலும், வெளிப்புற சூழல்களும் கூட இதயத்துடிப்பை தீர்மானிப்பதில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
கைக்கடிகாரம் கட்டி இருக்கும் பகுதியில் அதிகப்படியான வியர்வை துளிகள் இருந்தால் கூட,அதன் மீது ஒளிக்கற்றைகள் பட்டு தாறுமாறாக சிதறடிக்கப்பட்டால், சரியான இதயத்துடிப்பை காண முடியாது(ஆனால், அதற்கான வாய்ப்பு குறைவுதான்). மேலும், இதயத்துடிப்பை பார்க்கிறேன் என்கிற பெயரில் அங்குமிங்கும் ஓடி குதித்துக் கொண்டு இதயத்துடிப்பை பார்த்தாலும் பெருவாரியான மாற்றம் தெரியும்.
குறைகள்
இதன் காரணமாகவே, பெரும்பாலான ஸ்மார்ட் கைக்கடிகார நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட மதிப்பிற்கு கீழ் அல்லது ஒரு குறிப்பிட்ட மதிப்பிற்கு மேல் இதயத்துடிப்பு பதிவு செய்யப்பட்டால், அதை “தவறான மதிப்பு” என காட்டுகிறது. உதாரணமாக, இதயத்துடிப்பு 50 க்கு கீழ் அல்லது 100க்கு மேல் இருந்தால் பெரும்பாலான ஸ்மார்ட் கை கடிகாரங்கள் தவறான இதயத்துடிப்பு என காட்டுவதோடு கைக்கடிகாரத்தை ஒழுங்காக அணியுமாறு அறிவுறுத்துகிறது.
மேலும் தரம் குறைந்த,விலை மலிவான ஸ்மார்ட் கை கடிகாரங்களில் வழங்கப்பட்டிருக்கும் உணர்வியானது, அந்த அளவிற்கு சிறப்பாக செயல்படாது. எனவே, இதனால் கூட இதயத்துடிப்பு மதிப்புகளில் மாற்றம் தெரியலாம்.
சில போலியான ஸ்மார்ட் கை கடிகாரங்களில், உண்மையான இதயத்துடிப்பு அளக்கும் அமைப்புகள் வழங்கப்பட்டு இருப்பதில்லை. இதன் காரணமாக, தனக்கு தோன்றும் ஒரு மதிப்பை கைக்கடிகாரம் காட்டிக் கொண்டே இருக்கும். நீங்கள் கைகடிகாரத்தை கழற்றி, கத்திரிக்காயின் மீது வைத்தால் கூட கத்திரிக்காய்க்கும் இதயம் இருக்கிறது என்று நிரூபித்து விடும் இந்த கடிகாரம்.
இந்த அடிப்படையிலேயே இரத்த அழுத்தம் மற்றும் இரத்த ஆக்சிஜன் அளவு போன்றவை கூட கணக்கிடப்படுகிறது. ஆனால், இந்த இடத்தில் நாம் முக்கியமாக ஒன்றை கவனிக்க வேண்டும். இதுபோன்ற ஸ்மார்ட் கை கடிகாரங்கள் மருத்துவ உபகரணங்கள் அல்ல.
உதாரணமாக, இசிஜி பார்க்கக்கூடிய இயந்திரமானது உடல் முழுவதிலும் இருக்கக்கூடிய முக்கிய நரம்புகளில் மின்காந்த மாற்றங்களை கண்டறியும் வகையிலான அமைப்புகளை வைத்து, நொடிக்கு நொடி துல்லியமாக இதயத்துடிப்பை கண்டறியும். அப்படி கண்டுபிடிக்க கூடிய மருத்துவ உபகரணங்களில் கூட சிறிதளவு பிழைகள் இருக்கலாம் என்று அறிந்து கொள்ள முடிகிறது. ஆனால், அந்த பிழைகள் பெரும்பாலும் மருத்துவ சிகிச்சையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை.
ஆனால், சாதாரண ஒரு கைக்கடிகாரத்தில் காட்டும் இதயத்துடிப்பை மட்டும் வைத்துக்கொண்டு, மருத்துவ சிகிச்சையை வழங்கி விட முடியாது. அதில் துல்லியத்தன்மை சார்ந்த பல்வேறு பிரச்சனைகள் இருக்கும். இருந்த போதிலும் கூட, ஒரு சில விலகி உயர்ந்த ஸ்மார்ட் கை கடிகாரங்கள் இதய கோளாறுகளை கண்டறிந்து மருத்துவர்களுக்கு பெரிதும் உதவி இருப்பதாக அறிந்து கொள்ள முடிந்தது. இதில் உணர்வி அமைப்பாக வழங்கப்பட்டிருப்பது சோலார் பேனல்களில் பயன்படுத்தும் அடிப்படையிலான ஒளி மின் டையோடு தொழில்நுட்பம் தான் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது. எனவே, ஒருபோதும் மருத்துவ உபகரணங்களோடு கை கடிகாரத்தில் இருக்கும் இதயத்துடிப்புமானிகளை ஒப்பிட்டு பார்ப்பது சரியாக அமையாது.
மேலும், இதயத்துடிப்பு மானிகளையும் கடந்து,தரம் குறைந்த மற்றும் முறையாக உற்பத்தி செய்யப்படாத ஸ்மார்ட் கைக்கடிகாரங்களை அணியும்போது, அதில் இருக்கும் லித்தியம் பேட்டரிகள் வெடிப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது. பிரபலமான நிறுவன தயாரிப்பை போலவே போலியாக தயாரிக்கப்படும் இந்த ஸ்மார்ட் கை கடிகாரங்கள் ,முறையான பாதுகாப்பு விதிமுறைகளை(safety standards)பின்பற்றி இருக்கிறதா? என்று உறுதி செய்வது கடினம்.
எனவே, ஸ்மார்ட் கைக்கடிகாரங்களை வாங்கும் போது முறைப்படியான நிறுவன முத்திரை கொண்ட கடிகாரங்களை வாங்குவது பரிந்துரைக்கப்படுகிறது. மேலும், விளையாட்டாக இதயத்துடிப்பை பார்த்துக் கொள்ள மட்டும் இதன் இதயத்துடிப்பு மானியை பயன்படுத்துங்கள். ஆனால், நிச்சயம் வருங்காலத்தில் வரக்கூடிய கைக்கடிகார இதயத்துடிப்பமானிகள் தற்கால மருத்துவ உபகரணங்களுக்கு சவால் விடும் என்பதில் துளிஅளவு சந்தேகமில்லை.
வளரட்டும் எலக்ட்ரானிக்ஸ்! வளரட்டும் தொழில்நுட்பம் ! .
மீண்டும் ஒரு எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியில் சந்திக்கலாம்.
கட்டுரையாளர்:-
ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
(தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி, நாகர்கோவில் – 02)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின்மடல் : srikaleeswarar@myyahoo.com
இணையம்: ssktamil.wordpress.com