சில்லுவின் கதை 15. மதத் தடைகளால் தொழில் புரட்சியையே கோட்டை விட்டோம்

சில்லுவின் கதை – பேராசிரியர் ராஜேஷ் ஜெலே – ஐஐடி பம்பாய் (Chip Story – Prof. Rajesh Zele – IIT Bombay)

வெளிப்புறத்தில் உள்ள பிரச்சினைகளைப் பற்றியே புகார் செய்யாமல் தன்னிலையை ஆய்வு செய்தல்

0:00 பிரபல வானியற்பியல் (astrophysicist) அறிஞர் பேராசிரியர் ஜயந்த் வி. நர்லிகர் (Prof. Jayant V. Narlikar), புரட்சிகரமான பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர். நான் அவரது மின்னஞ்சல் குழுவில் இணைந்திருக்கிறேன். நான் “சில்லுவின் கதை” -யில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, “இந்தியா வளமான அறிவியல் வரலாற்றைக் கொண்டிருந்தும், ஏன் இங்கு தொழிற்புரட்சி ஏற்படவில்லை என்பது குறித்த ஆய்வு” என்ற தலைப்பில் அவரது மின்னஞ்சல் வந்தது. இந்தியா தொழிற்புரட்சியை ஏன் கோட்டை விட்டது என்பதை அவர் ஆராய்ந்திருக்கிறார். அவர் குறைக்கடத்திகள் பற்றி அல்ல, முற்றிலும் மாறுபட்ட ஒன்றைப் பற்றிப் பேசுகிறார். பலரின் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் அவர் ஒரு பகுப்பாய்வைத் தொகுத்தளித்திருக்கிறார். 

நீங்கள் ஒரு பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அது உள்நோக்கிப் பார்ப்பது. அதாவது உங்களை நீங்களே பகுப்பாய்வு செய்வது. வெளிப்புறத்தில் உள்ள அனைத்தையும் பற்றியே புகார் செய்யாதீர்கள். இந்த சங்கதியில் நாம் நம் நாட்டையும் உள்நோக்கிப் பார்க்கிறோம். நாம் ஆத்மபரிசோதனை செய்ய வேண்டும். நீங்கள் எதிர்காலத்தில் எப்படிப்பட்டவராக இருக்கப் போகிறீர்கள் என்பதை உருவாக்க உங்களுக்கு உதவும் என்று நான் நினைக்கும் ஆத்மபரிசோதனை இது. இது மிகவும் முக்கியமானது.

மதக் கட்டுப்பாடுகள் வெளிநாட்டுப் பயணத்தைத் தடை செய்தன

1:50 அவர் சொல்வது என்னவென்றால், கி.பி. 5-ஆம் நூற்றாண்டுக்கும் 12-ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், இந்தியாவில் அறிவியல் துறையில் மிகவும் அற்புதமான சங்கதிகள் நடந்தன. ஆர்யபட்டர் (கி.பி. 5-ஆம் நூற்றாண்டு) மற்றும் இரண்டாம் பாஸ்கரர் (கி.பி. 12-ஆம் நூற்றாண்டு) ஆகியோர் அக்காலத்தில் இந்திய அறிவியல் புரட்சியின் மகா மேதைகள். அதன் பிறகு திடீரென்று… ஒன்றுமே இல்லாமல் போய்விட்டது. எனவே, இது ஏன் நடந்தது என்பது குறித்து ஒரு தன்னாய்வு (introspection) தேவை. மேற்கத்திய நாடுகளில், வாழ்க்கை நிலைமைகள் கடினமாக இருந்தன. அவர்களுக்குக் குடியேற்ற ஆதிக்கம் (colonize) செலுத்துவதற்கான ஊக்கம் இருந்தது. அறிவியலும் தொழில்நுட்பமும் உலகப் பயணத்தையும் சிறந்த வாழ்க்கை நிலைமைகளையும் சாத்தியமாக்கின. இது தொழில் புரட்சியை ஊக்குவித்தது. மறுபுறம், கிழக்கில், குறிப்பாக இமயமலையைத் தவிர, வானிலை மிதமானது மற்றும் உயிர்வாழ்வது எளிது. பயணம் அவ்வளவு கவர்ச்சிகரமானதாக இல்லை. மதக் கட்டுப்பாடுகள் வெளிநாட்டுப் பயணத்தைத் தடை செய்தன. இருப்பினும், உலகம் முழுவதிலுமிருந்து அறிஞர்கள் இந்தியாவுக்கு வருகை தந்தனர். இது தூய அறிவியலில் நமது வளர்ச்சியைத் தேக்கிவிட்டது. இந்தியாவில் பின்பற்றப்பட்ட மதங்கள் சகிப்புத்தன்மை கொண்டவை. எளிமை மற்றும் குறைந்தபட்ச வாழ்க்கை சமூக ரீதியாகப் பாராட்டப்பட்டது. இதனால் தொழில் புரட்சிப் பேருந்து இந்தியாவைக் கடந்து சென்றுவிட்டது.

நல்ல ஒரு எதிர்காலத்தைக் கட்டமைக்க நம்மை நாமே விமர்சனம் செய்தாகவேண்டும்

5:13 மேலே குறிப்பிட்டதை மனதில் ஒரு ஓரமாக வைத்துக்கொள்ளுங்கள். நாம் எங்கே செல்கிறோம் என்று சொல்வதற்கு இது ஒரு முன்னுரை மாதிரி. ஆகவே, இன்று நான் சொல்லப்போகும் ‘சில்லுவின் கதை’ நம்மை நாமே குறை சொல்லிக் கொள்வதற்கல்ல. நடந்ததை நடந்த மாதிரி பார்க்கத்தான். இது நான் வெகு நாட்களாகச் செய்துகொண்டிருக்கும் ஒரு ஆராய்ச்சியின் முடிவு. நான் நாட்டுப்பற்று உள்ளவன் என்பதால், எனக்குள் ஒருதலைச்சார்பு (built-in bias) உள்ளது. நாம் நம் தாயைப் பற்றிக் கெட்டதாக எதுவும் சொல்ல முடியாது. அதேபோல நம் நாட்டைப் பற்றியும் கெட்டதாகச் சொல்ல முடியாது. ஆனால், நல்ல ஒரு எதிர்காலத்தைக் கட்டமைக்க வேண்டுமென்றால், நாம் ஓரளவு நம்மை நாமே விமர்சனம் செய்தாகவேண்டும். ஆகவே நான் இனி சொல்லப்போவதைப் பொறுமையாகக் கேளுங்கள்.

தைவானைப் போலவே இந்தியாவிலும் குறைக்கடத்தி உற்பத்தி 1984-ல் தொடங்கியது

6:10 தைவானைப் போலவே, இந்தியாவிலும் குறைக்கடத்தி உற்பத்தி 1984-ல் தொடங்கியது. சண்டிகர் அருகில் மொஹாலியில் குறைக்கடத்தி ஆய்வகத்தை (SCL – Semi-Conductor Laboratory) நிறுவினோம். ஆரம்பத்தில் அது 5 மைக்ரான் CMOS தொழில்நுட்பம். அமெரிக்கன் மைக்ரோ சிஸ்டம்ஸ் (American Micro Systems), ராக்வெல் (Rockwell) மற்றும் ஹிட்டாச்சியிடமிருந்து (Hitachi) தொழில்நுட்பத்தைப் பெற்றோம். இது தைவானில் நடந்ததைப் போலவே இருக்கிறது. பின்னர் 0.8 மைக்ரான் CMOS-க்கு முன்னேறினோம். அப்போது நாம் அதிநவீன தொழில்நுட்பத்திற்குப் பின்னால் ஒரு சில ஆண்டுகள் அல்லது ஒரு சில தலைமுறைகள் மட்டுமே பின்தங்கியிருந்தோம். உண்மையில் 1989-ல் IIT இறுதி ஆண்டு B.Tech படிக்கும் போது நான் ஆய்வகத்தில் 5 மைக்ரான் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினேன். பின்னர் 1989-ல் ஏற்பட்ட ஒரு தீ விபத்தில் SCL-ன் முழு வசதியும் அழிந்தது. SCL-ஐ மீண்டும் கட்டியமைத்து 1997-ல் மறுதொடக்கம் செய்ய கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆனது. மூரின் விதிப்படி உலகின் பிற பகுதிகளில் அதிவேக முன்னேற்றம் ஏற்பட்டுக்கொண்டிருந்தது என்பது நமக்குத் தெரியும். ஆனால், நாம் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் எதுவும் நடக்காமல் சிக்கிக்கொண்டோம். SCL அரசாங்கத்தின் தேவைகளுக்காக அரசாங்கத்தால் நடத்தப்படுகிறது. அப்போது அது விண்வெளித் துறையின் ஒரு பகுதியாக இருந்தது. இப்போது அது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (MeitY) ஒரு பகுதியாகும். SCL நமது செயற்கைக்கோள்கள் மற்றும் ராணுவப் பயன்பாடுகளுக்கான சில்லுகளை உருவாக்குகிறது. இதன் விளைவாக அதிக அளவில் உற்பத்தி செய்யப்படவில்லை. மறுபுறம், தைவானில் TSMC மற்றும் பிற நிறுவனங்கள் அதிக அளவில் உற்பத்தி செய்தன. இதனால் உற்பத்தி செயல்முறையின் ஒவ்வொரு பகுதியையும் அவர்கள் தீவிரமாக மேம்படுத்தினர். மேலும் குறைக்கடத்தி உற்பத்திக்கு தொழில்நுட்ப மேம்பாடுகளைத் தொடர்ந்து மேற்கொள்ளத் தொடர்ந்து மிகப் பெரிய முதலீடு தேவைப்படுகிறது. SCL-ல் மேம்பட்ட குறைக்கடத்தி உற்பத்தி உபகரணங்களில் ஓரளவு முதலீடு மட்டுமே செய்யப்பட்டது. இதன் விளைவாக, தற்போது நாம் 180 nm CMOS உற்பத்தியில் மட்டுமே உள்ளோம். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் IIT-யில் சேர்ந்தபோது 180 nm தொழில்நுட்பத்தில் இருந்தோம். இன்றும் அதே 180 nm தொழில்நுட்பத்தில்தான் இருக்கிறோம். ஆனால் இது ராணுவம் மற்றும் விண்வெளிப் பயன்பாடுகளுக்கான நமது தேவைகளைப் பூர்த்தி செய்கிறது. SCL-ல் நாம் செய்வது இதுதான்.

BEL, SCL ஒவ்வொன்றும் தமக்கென ஒரு எல்லையை வகுத்துக்கொண்டு போட்டியைத் தவிர்த்தன

10:00 இரண்டாவதாக வருகிற நிறுவனம் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL – Bharat Electronics Limited). நம் நாட்டின் ரானுவப் பயன்பாடுகளுக்காக 1960களில் ஜெர்மானியம் (Germanium) டிரான்சிஸ்டரில் இருந்து தொடங்கினார்கள். ஒரு கட்டத்தில் அவர்கள் வருடத்திற்கு 2 கோடி டிரான்சிஸ்டர்களை உற்பத்தி செய்து கொண்டிருந்தார்கள். சூரிய மின்சார பலகங்களுக்கான சிலிக்கான் வில்லைகளை உற்பத்தி செய்ய மெட்கெம் சிலிக்கானை அமைக்கவும் அவர்கள் தொழில்நுட்பத்தைப் பெற்றார்கள். 1997 முதல் அவர்கள் தொகுப்பு (packaging) மற்றும் மிகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லு வடிவமைப்புகளில் மட்டுமே (strategic applications) கவனம் செலுத்தினர். BEL மற்றும் SCL இடையே எப்போதும் இந்தப் போட்டி இருந்தது. ஒவ்வொன்றும் தனக்கென ஒரு எல்லையை வகுத்துக்கொண்டு போட்டியைத் தவிர்த்தன. ஆனால், உலகளவில் இந்தத் துறையில் தொழில்நுட்பம் போட்டி மூலம்தான் வளர்ச்சியடைந்தது. உதாரணமாக, இன்டெலுக்குள்ளேயே இரண்டு குழுக்களுக்கு இடையே போட்டி இருந்தது. அப்படித்தான் பென்டியம் நுண்செயலி (Pentium microprocessor) உருவாக்கப்பட்டது.

முன்னேற்றத்துக்கு முயலாமல் எளிதில் சமரசம் செய்து கொள்ளும் (चलता है) நம் நாட்டின் அணுகுமுறை

11:28 இந்தியாவில் குறைக்கடத்தி உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான முன்பிருந்த அணுகுமுறை, அரசாங்கத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அரசாங்கத்தாலேயே மேற்கொள்ளப்பட்டது. இதன் விளைவாக, பெரிய அளவிலான மற்றும் தொடர்ச்சியான மூலதனத்தை முதலீடு செய்வதற்கான பெரிய ஊக்குவிப்பு எதுவும் இல்லை. இத்தகைய திட்டங்களுக்கு, குறிப்பாக அந்நியச் செலாவணிக்கு, நிதி கிடைப்பதும் மிகவும் குறைவாகவே இருந்தது. இதன் விளைவாக, காலாவதியான தொழில்நுட்பத்தில் நாம் சிக்கிக்கொண்டோம். மேலும் நாம் போட்டியிடத் தகுதியற்றவர்களாக இருந்தோம். முன்னேற்றத்துக்கு முயலாமல் எளிதில் சமரசம் செய்து கொள்ளும் நம் நாட்டின் “சல்தா ஹை” (விடு, போகட்டும்) அணுகுமுறை இதற்கு ஒரு முக்கியக் காரணம். கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட முடிவுகளைக் குறை கூறுவது இப்போது எளிது. ஆனால் அந்த நேரத்தில் அந்நியச் செலாவணி கிடைப்பது ஒரு பெரிய தடையாக இருந்தது. காலாவதியான தொழில்நுட்பத்தின் காரணமாக, SCL மற்றும் BEL நிறுவனங்கள் சர்வதேச அளவில் போட்டியிட முடியவில்லை.

அரசாங்கத்தின் வரி மற்றும் கொள்கை வெளி முதலீடுகளுக்குப் பிரச்சினையாக இருந்தது

13:04 வோடபோன் (Vodafone) வழக்கில், இந்திய அரசாங்கம் முன்தேதியிட்டு வரி விதித்தது. இம்மாதிரி நிச்சயமற்ற வரி மற்றும் கொள்கைச் சூழல் காரணமாக வெளிநாட்டு முதலீட்டாளர்களை அச்சுறுத்தியது. பொதுவாகச் சட்டங்கள் இயற்றப்படும்போது, சட்டம் நடைமுறைக்கு வரும் நேரத்திலிருந்துதான் வரி விதிக்கப்படும். ஆனால் இந்த வழக்கில், கடந்த கால தேதியிலிருந்து வரி விதிப்பு செல்லுபடியாகும் என்றனர். இறுதியில் இந்த வழக்கு சுகமாகத் தீர்க்கப்பட்டாலும், வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பாக இது நமக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இது வணிகத்திற்குப் பாதகமான சூழலுக்கு ஒரு எடுத்துக்காட்டு. மேலும், எடுத்துக்காட்டாக, நான் இறக்குமதி செய்த துணைக்கருவிகள் சுங்கச்சாவடியில் ஆறு மாதங்கள் சிக்கிக் கொண்டால், நான் நொடித்துப் போய்விடுவேன், ஏனென்றால் தொழில்நுட்பம் மிக வேகமாக மாறுகிறது. இதன் விளைவாக, 1997-ல் இந்தியாவில் ஒரு புனைவு ஆலை (fab) அமைப்பதற்கான திட்டங்களை மீண்டும் புதுப்பிக்க முயன்றபோது, அது வெளிநாட்டு முதலீட்டாளர்களின் ஆர்வத்தை இழந்தது.

17:1 தொடரும்…

தமிழாக்கம்: இரா. அசோகன்