சில்லுவின் கதை – பேராசிரியர் ராஜேஷ் ஜெலே – ஐஐடி பம்பாய் (Chip Story – Prof. Rajesh Zele – IIT Bombay)
சில்லுகளைப் பயன்படுத்தி பயனுள்ள பொருட்கள் தயாரிப்பதில் ஜப்பான் முன்னிலை
0:00 சுருக்கமாகச் சொன்னால், அமெரிக்கா இந்தக் குறைக்கடத்தி வில்லைகளையும் (wafer) சில்லுகளையும் (chip) உருவாக்குவதில் மிகவும் சிறந்து விளங்கியது. ஜப்பான் அவற்றைப் பயன்படுத்தி நுகர்வோருக்கான பயனுள்ள பொருட்கள் தயாரிப்பதில் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டது.
நுணுக்கமான கம்பிப் பிணைப்புக் (wire bonding) கைவேலைக்கு ஆசியப் பெண்கள்
1:00 ஃபேர்சைல்ட் செமிகண்டக்டர்ஸில் சேர்ந்த சார்லி ஸ்போர்க் (Charlie Sporck), வில்லைகளைத் தயாரித்த பிறகு தொகுத்தல், சோதனை போன்ற உற்பத்தி செயல்முறைகள் மிகவும் கைவேலை மிகுந்ததாக இருப்பதைக் கவனித்தார். கம்பிப் பிணைப்புக்கு இந்தச் சிக்கலான வேலையைக் கையால் செய்யக்கூடிய திறமையான தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் தேவைப்பட்டனர். முதலில் அவர்கள் கலிபோர்னியாவில் ஆசியப் பெண்களை வேலைக்கு அமர்த்தினார்கள். பின்னர், ஆட்கூலி மிகவும் குறைவாக இருந்த ஆசியாவிற்கு இந்த உழைப்பு மிகுந்த வேலையை அனுப்பி வைத்தனர். புறத்தயாரிப்புத் தொகுத்தலும், சோதனையும் (Outsourced Assembly and Testing – OSAT) இப்படித்தான் பிறந்தது.
வெடிபொருட்களில் மின்னணு கட்டுப்பாடுகளுக்கு ஒரு பயிற்சிக்கூடமானது வியட்நாம் போர்
3:00 வியட்நாம் போரில் அமெரிக்கர்கள் 1000 குண்டுகளை வீசிய பின்னும் தான் ஹோவா (Than Hoa) பாலத்தைத் தகர்க்க இயலவில்லை. TI இன் வெல்டன் வேர்டு (Weldon Word), பேவுவே (Paveway) என்ற சீரொளி (laser) வழிகாட்டும் குண்டைப் பற்றிய யோசனையைக் கொண்டு வந்தார். இந்த உத்தியைப் பயன்படுத்திய முதல் வெடிகுண்டு அந்தப் பாலத்தைத் தாக்கி அழிக்க முடிந்தது.
4:40 கம்யூனிசத்தின் பரவலைக் கட்டுப்படுத்த முயன்ற வியட்நாம் போரில் அமெரிக்கா தோல்வியடைந்தது. ஆனால் இந்த வியட்நாம் போர் வெடிபொருட்களில் மின்னணுக் கட்டுப்பாடுகளை முயற்சிப்பதற்கான ஒரு பயிற்சிக்கூடமாக செயல்பட்டது.
5:40 வியட்நாமில் இருந்து அமெரிக்கா பின்வாங்குவதால், ஆசியாவின் கம்யூனிச எதிர்ப்பு நாடுகளான தைவான், தென் கொரியா, மலேசியா, சிங்கப்பூர் அனைத்தும் கவலையடைந்தன. அமெரிக்க வணிக நிறுவனங்கள் தங்கள் நாடுகளில் முதலீடு செய்ய வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். ஏனெனில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் அவர்களுக்கு அமெரிக்கா பாதுகாப்பு அளிக்கும்.
7:15 ஏவுகணைகள் போன்ற அமெரிக்க ராணுவ திட்டங்கள் 60 களில் சிலிக்கான் பள்ளத்தாக்கை உருவாக்கியது. சிலிக்கான் பள்ளத்தாக்கு 70 களில் மேற்கண்டவாறு தென்கிழக்கு ஆசியாவில் அமைதியைக் கொண்டு வந்தது.
மின்தேக்கிகளை நினைவகமாகப் பயன்படுத்தல் கண்டுபிடிப்பு
7:45 நினைவகம் முன்காலத்தில் மின்காந்த அடிப்படையில் செயல்படுத்தப்பட்டது. இவை அளவில் மிகவும் பெரியதாக இருந்தன. IBM நிறுவனத்தின் ராபர்ட் டெனார்ட் (Robert Dennard) ஒரு வித்தியாசமான மேதை என்று அறியப்பட்டவர். உலோக ஆக்சைடு குறைக்கடத்தி (Metal-Oxide-Semiconductor – MOS) சாதனங்களைப் பயன்படுத்தி மின்தேக்கிகளை 1 அல்லது 0 க்கு மின்னேற்றம் செய்து சில்லுகளில் பயன்படுத்துவதற்கான யோசனையை அவர் கொண்டு வந்தார். ஆனால் மின்தேக்கிகளில் மின்சாரம் மெல்ல மெல்லக் கசியும். ஆகவே இதை அவ்வப்போது மீள்மின்னேற்றம் செய்வதன் மூலம் சரிசெய்ய வேண்டும். இப்படித்தான் DRAM (Dynamic Random Access Memory) எனப்படும் இயங்குநிலை நினைவகம் பிறந்தது.
பேரளவு உற்பத்தி மூலம் விலையை வீழ்த்துவதில் இன்டெல் முன்னிடம்
9:30 1968 இல் பாப் நொய்ஸ் மற்றும் கோர்டன் மூர் ஒருங்கிணைந்த எலக்ட்ரானிக்ஸ் (Integrated Electronics) என்ற புதிய நிறுவனத்தை நிறுவினர், இது இன்டெல் (Intel) என்று பின்னர் அழைக்கப்பட்டது. ஆண்டி குரோவ் விரைவில் இன்டெல்லில் சேர்ந்தார். அவர்களின் முதல் தயாரிப்பு DRAM ஆகும். பேரளவு உற்பத்தி செய்வதன் மூலம் உற்பத்தியின் செலவைக் குறைத்து விலையை வீழ்த்துவதில் இன்டெல் நிறுவனம் சிறந்து விளங்கியது.
இத்தொடரில் அடுத்த கட்டுரை: நம் நாட்டின் ஜுகாட் மனநிலையை மாற்ற வேண்டும்
ஜப்பானிய சில்லுகள் அமெரிக்க சில்லுகளைவிளைவிட 10 மடங்கு நம்பகமானவை. சோவியத் ரஷ்யாவால் மீள்நோக்குப் பொறியியல் (reverse engineering) மூலம் சில்லுகளை நகலெடுக்க இயலவில்லை. ஜப்பானியத் தயாரிப்பு என்றாலே உயர் தரம் என்று நாட்டின் பெருமையையே அகியோ மொரிட்டா உயர்த்தினார். நம் நாட்டின் ஜுகாடு (जुगाड़) மனநிலையை மாற்ற வேண்டும். ஜப்பான் தொழில்நுட்ப ரீதியாக அமெரிக்காவை முந்தத் தொடங்கியது. குறைக்கடத்திகள் கச்சா எண்ணெய் போன்றவை.
தமிழாக்கம்: இரா. அசோகன்