“ஒரு மனிதன் தனக்காக மட்டும் உழைத்தால், அவன் ஒரு புகழ்பெற்ற விஞ்ஞானியாகவோ, மாபெரும் ஞானியாகவோ, தலைசிறந்த கவிஞனாகவோ ஆகக் கூடும், ஆனால் அவனால் என்றுமே உண்மையிலேயே நிறைவான, மகத்தான மனிதனாக ஆக முடியாது.”
கணியம் சார்பாக, திங்கள்(15-05-2020) காலை “பயிலகம் மாணவர்களுடன்” உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. பைத்தான்(Python) தொழில்நுட்பத்தைப் பயின்று அடுத்து என்ன செய்தால், நல்ல மென்பொருள் வல்லுநராக முடியும் என்ற கேள்வியுடன் தொடங்கியது அந்த உரையாடல்…
முன் தினம், சீனிவாசன் அவர்கள் “கட்டற்ற மென்பொருள், பைதான், நிரலாக்கம் பற்றிய ஒரு உரை” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
Mentoring Payilagam students on “How to be a successfull programmer”
ஒரு சிலந்தி ஒரு நெசவாளியை ஒத்த செயல்பாடுகளில் ஈடுபடுகிறது, தனது கூட்டைக் கட்டும் தேனீ பல கட்டிடக்கலைஞர்களை வெட்கப்படும்படி செய்கிறது. ஆனால், மிகத்திறமையற்ற கட்டிடக் கலைஞனுக்கும், மிகச் சிறந்த தேனீக்கும் இடையில் உள்ள வேறுபாடு, கட்டிடக்கலைஞன் கட்டிடத்தை உண்மையாகக் கட்டுமுன்னரே கற்பனையில் கட்டிவிடுகிறான் என்பதாகும்.
கற்பனைத்திறனே மனித இனத்தின் அசைக்கமுடியாத மாபெரும் சக்தி… பிரபஞ்சம் குறித்தும், உயிர்களின் தோற்றங்கள்பற்றிய அறிவியல் ஆய்வுகளுக்கு முன்னரே, மனித இனம் இதுகுறித்தான கற்பனைகளை உருவாக்கியிருந்தது. இந்தக் கற்பனை கதைகள் வெவ்வேறு காலக்கட்டங்களில் வளர்சியடைந்துள்ளதையும் நம்மால் காண முடியும்.
இறக்கை கொண்டு பறவைபோலப் பறக்க நினைத்தான். வானத்தில் சொர்க உலகை உருவாக்கினான். இருட்டில் பாதாள உலகை படைத்துச் சாத்தானை உருவாக்கினான். மனித உருவம் கொண்ட கடவுளர்களையும் உருவாக்கி அவைகளை வழிபடவும் செய்தான். இதே கற்பனை வளம் ஒரு சிங்கத்துக்கு இருந்தால், அது தன் கடவுளைச் சிங்க வடிவில்தான் உருவாக்கியிருக்கும். இப்படி எல்லாவற்றையும் குறித்த கற்பனை கதைகள் மனிதனிடத்தில் உண்டு. அக்கற்பனை கதைகள் யாவும், தனது சந்ததியினருக்கு வழக்கப்பட்டு, அது அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லப்படுவதையும் உறுதி செய்தான்…
லாபம், கூடுதலான லாபம், இன்னும் கூடுதலான லாபம்… என்று லாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட இன்றைய அமைப்பு முறையில், அறிவையும் கற்பனைவளத்தையும் உருவாக்கித் தரவேண்டிய கல்வியானது சந்தையாகியுள்ளது கசப்பான உண்மை. அதன் காரணமாகவே, வலரிளம் பருவத்தில், முதுகில் மூட்டைச் சுமந்து நடக்க ஆரம்பிக்கும் ஒரு குழந்தை, சமூகத்தில் கெளரவமான ஒரு உத்தியோகத்தை அடையும் வரை நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கவேண்டுமென்று நிர்பந்திக்கடுகிறது.
அந்த வகையில் ஓடி வேலைகிடைக்காமல் அல்லது கிடைத்த வேலையில் தன்னிறைவை எட்டாமல் தவிக்கும் பலரை காணலாம்.
அவர்களைச் சரியான பாதையில் வழிநடத்த ஒரு கை உதவினால், அந்த மனிதன் தன் வாழ்நாள் முழுவதும் இந்தச் சமூகத்திற்கு ஏதேனும் ஒரு வகையில் பயனுள்ள வாழ்க்கையை வாழ்ந்து நிறைவான மனிதனாக வாழ்ந்து முடிப்பான்…