அமிழ்து > தமிழ் ஆனது….. அமிழ்து எனச் சொல்ல சொல்ல உச்சரிப்பில் தமிழ் என வரும். தேனினும் இனிய தமிழ் மொழியை உலகில் தோன்றிய முதல் மொழி என்று பெருமை பாடுகின்றனர் அறிஞர் பெருமக்கள். ஆனால் பெருமை மிக்க தமிழ்மொழி அழியும் மொழிகளின் பட்டியலில் (8-வது இடத்தில்) உள்ளது என்ற யுனெஸ்கோவின் ஆய்வு அதிர்ச்சியளிக்கின்றது.
உலகில் 163 நாடுகளில் தமிழர்கள் வாழ்வதாக ஒரு ஆய்வு கூறுகிறது. மலேசியா, சிங்கப்பூர் போன்ற பல நாடுகள் தமிழை ஆட்சி மொழியாகவும், பள்ளிப்புத்தகங்களில் ஒரு பாடமாகவும் பயிற்றுவிக்கின்றனர். இவ்வளவு பெருமைமிக்க தமிழ் மொழி அழியும் பட்டியலில் வருவதற்கான காரணத்தை ஆராய்ந்தால்; ஒரு மொழி, பேச்சு மொழியாக இல்லாமல், பயன்பாட்டு மொழியாக அமைந்தால் தான் நிலைத்து நிற்கும்.
தமிழ்மொழி வளர்ந்துள்ளது என்றாலும் பயன்பாட்டு மொழியாக மற்ற மொழிகளில் ஏற்பட்ட வளர்ச்சி நம்மொழியில் இல்லை. வேளாண்மை, வணிகம், கலை, தொழில்நுட்பம், மருத்துவம், அறிவியல், கணினி, கணிதம், நீதி, வங்கித் துறை என அனைத்து துறைகளின் பயன்பாட்டு மொழியாக தமிழ் வர முயற்சிக்கவேண்டும். இந்த மாற்றத்திற்கான துவக்கமாகவே விக்கிப்பீடியாவின் பங்களிப்பு அமைந்து வருகிறது.
இணையமும் விக்கிப்பீடியாவும்:
இன்று இணையம் உலகம் முழுவதையும் இணைக்கும் பெரிய வலைப்பின்னல் அமைப்பாக செயல்படுகிறது. இந்த இணையத்தின் பயன்பாடு அனைத்து மக்களையும் ஆட்கொண்டுள்ளது. இன்று சிறு குழந்தை கூட செல்போன் பயன்படுத்தும் அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது.
இத்தகைய இணையத்தை ஒவ்வொரு மொழியின் வளர்ச்சிக்கும் பயன்படுத்தினால் எதிர்காலத்திலாவது மொழி, பயன்பாடு அடிப்படையில் அமையும் என்றே பல நாடுகள் தங்களின் தாய்மொழியை பாதுகாக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். அதற்கான தொடக்கமாக இணையத்தில் 2001-ஆம் ஆண்டு ஜனவரி 15-ஆம் தேதி விக்கிப்பீடியா இணையதள கலைக்களஞ்சியம் தொடங்கப்பட்டது.
jimmy wales மற்றும் Larry Sanger என்ற அமெரிக்கர்கள் இணைந்து நுபீடியா என்ற இணைய கலைக்களஞ்சியத்தைத் தொடங்கினர். இதில் உள்ள பக்கங்கள் வல்லுநர்களை கொண்டு எழுதப்பட்டன. இதுவே விக்கிப்பீடியாவின் முன்னோடியாக இருந்தது. பின்னர் வாசகர்களே திருத்தங்கள் செய்யும்படியான விக்கிப்பீடியாவை www.wikipedia.org என்ற முகவரியை தொடங்கினர்.
இதில் எவரும் புதிய பக்கங்களை தொடங்கலாம். ஏற்கனவே உள்ள பக்கங்களில் மாறுதல்களை ஏற்படுத்தலாம். அனைத்து பக்கங்களுக்கும் நிலையான பக்க வடிவமைப்பு உள்ளது. இத்தகைய வரையறைகளுடன் கூடிய விக்கிப்பீடியாவினுள் பல மொழிகள் பயன்பாட்டு மொழிகளாக மாற்ற முயற்சிகள் நடைபெறுகின்றன. அவற்றில் தமிழ் மொழியும் ஒன்றாகும். இந்த தமிழ் மொழிக்கான பங்களிப்பில் பல்வேறு தன்னார்வலர்கள், பேராசிரியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் என பலரும் ஈடுபடுட்டுள்ளனர்.
தமிழ் சார்ந்த இணைய கலைக்களஞ்சியங்கள்:
தமிழ் சார்ந்த இலவச இணைய கலைக்களஞ்சியமாக திகழ்வது விக்கிப்பீடியாவாகும். தமிழ் விக்கிப்பீடியா செப்டம்பர் 2003-ல் தொடங்கப்பட்டது. பெருங்கடலாகத் திகழும் தமிழ் இலக்கியங்களை தொழில்நுட்ப முறையில் மேம்படுத்தவும், பாதுகாக்கவும் விக்கிப்பீடியா பல துணைத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.
• விக்கிசனரி (ஒரு விக்கிசார் திறந்த உள்ளடக்க அகரமுதலி)
• விக்கிசெய்திகள் (கட்டற்ற செய்திசேவை)
• விக்கிப்பீடியா (கட்டற்ற மூல ஆவணங்கள்)
• விக்கிநூல்கள் (கட்டற்ற பாடநூல்களும் கையேடுகளும்)
• விக்கியினங்கள் (உயிரினங்களின் கோவை)
• விக்கிமேற்கோள் (மேற்கோள்களின் தொகுப்பு)
• பொதுவகம் (பகிரப்பட்ட ஊடகக்கிடங்கு)
• மேல்-விக்கி (விக்கிமீடியா திட்ட ஒருங்கிணைப்பு)
• விக்கிபல்கலைக்கழகம் (கட்டற்ற கல்வி நூல்கள்)
மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு திட்டமும் தமிழ் வளர்ச்சிக்கும், பழமையை பாதுகாக்கவும் பல வகையில் பங்காற்றி வருகின்றது. இத்தகைய பலதரப்பட்ட திட்டங்கள் நடைமுறையில் இருப்பினும் இதற்கான பங்களிப்பில் ஈடுபடும் பயனர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. இதற்கான விழிப்புணர்வும், ஆதரவும், பங்களிப்பும் பெருமளவில் தேவைப்படுகிறது. இத்தகைய கலைக்களஞ்சியத்தில் நானும் ஒரு பயனராக பங்காற்றுவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
எனது அனுபவம்:
தமிழ் இலக்கியம் என்னும் பெருங்கடலில் எல்லாவற்றையும் பயன்பாட்டிற்கு மாற்றுவது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஆனால் முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை. அந்த முயற்சிக்கு ஊக்கமும், பயிற்சியுமே அவசியமானது. ஒரு இலக்கியத்துறை மாணவியாக, தேவைப்படும் தமிழ் பற்றிய தகவல்களை பெரும் இடமாக மட்டுமே இணையத்தினைப் பயன்படுத்தினேன். ஆனால் அத்தவல்களை பெறும் தளங்கள் பற்றியும், அத்தளங்களில் ஒரு தகவலைப் பதிக்க பயன்படும் தொழில்நுட்பம் பற்றியும், வல்லுநர்கள் பற்றியும் ஒருபோதும் ஆராய்ந்ததில்லை. இதற்கான காரணம் இணையத்தளத்தில் தமிழ் சார்ந்த வளர்ச்சி திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் இல்லாததே எனலாம்.
ஆனால் எனக்கான முதல் அறிமுகமாகவும், அனுபவமாகவும் அமைந்தது விக்கிமூல நூல்களின் மெய்ப்புப்பணியே! நந்தனம் அரசு ஆடவற் கலைக்கல்லூரியில் நடைபெற்ற சங்க இலக்கிய செயலி அறிமுக விழாவில், தமிழ் மொழி பற்றிய ஆய்வுகள் உலகம் முழுவதும் எவ்வாறு நடைபெற்றுவருகின்றது என்ற அறிமுகமே என்னை மிகவும் கவர்ந்து இத்தளத்தினுள் பயணிக்க ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தியது. நான் முதன் முதலில் பங்காற்றியதும், தற்போது பங்காற்றி வருவதும் விக்கிமூல நூல்களின் மெய்ப்பணியின் தான். குறுகிய காலமே பணியாற்றி வந்த இத்திட்டத்தில், எனக்கான அடுத்த நிலையினை நோக்கி முன்னேற்றும் வாய்ப்பாக சேலம் விக்கிமூலப் பயிற்சி பட்டறை 2019 அமைந்தது.
சேலம் பயிற்சி பட்டறைக்கு முன்பு வரை மெய்ப்பணி ஒன்றைத் தவிர வேறொன்றை அறிந்ததில்லை. ஆனால் அப்பயிற்சி பட்டறையில் ஒரு நூல் மெய்ப்புப்பணிக்கு எடுத்துவர எவ்வளவு நிலைகள் உள்ளன என்பது அன்றுதான் அறிந்துக்கொண்டேன். அனைவராலும் அனைத்து நூல்களையும் தன் வாழ்நாளில் படிக்கவும், பார்க்கவும், அறிந்திடவும் இயலாது. ஆனால் இத்திட்டத்தின் மூலம் எந்தவிதக் கட்டணமின்றி இலவசமாக எதிர்கால சந்ததியினருக்கும் ஏற்ற வகையில் இணையத்தில் ஒரு நூலைப் படித்திடவும், தேவைக்கேற்ப தரவிறக்கம் செய்து கொள்ளவும் வழிச்செய்தது தமிழ் மொழி வளர்ச்சிக்கு பெரும் வெற்றி எனலாம். இத்திட்டத்திலும் மற்ற விக்கிப்பீடியாத் திட்டங்களிலும் பணியாற்றும் பல தன்னார்வலர்கள், பேராசிரியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்களின் அறிமுகம் இப்பயிற்சி பட்டறையில் கிடைக்கப்பெற்றது. இத்தளங்களில் பங்களி்க்கும் அனைவரது உழைப்பும், ஆர்வமும் எனக்கு முன்மாதிரியாக அமைந்தது. விக்கிப்பீடியாவின் செயல்களும், விக்கிப்பீடியாவின் திட்டங்கள் பற்றிய அறிமுகமும் இப்பயிற்சிப்பட்டறையின் வாயிலாக அறிந்துகொண்டேன்.
தமிழ் என்னும் பெருவெள்ளத்தில் ஒவ்வொரு நாளும் புதிய புதிய நூல்களும், ஆசிரியர்களும் புற்றீசல்கள் போல முளைக்கின்றன. நாம் பழைமையை பாதுகாப்பதும், புதுமையைப் போற்றுவதுமே தமிழ் எதிர்காலத்திலும் நிலைத்து நிற்க பேருதவியாக அமையும். மேலும் இப்பணிகளுக்கான விழிப்புணர்வினைப் பரப்புவதன் மூலம் பல தன்னார்வலர்கள் இத்திட்டத்தில் இணைய வாய்ப்புள்ளது. தமிழ்! தமிழ்! என்று வெறும் போற்றுதலும், விவாதங்களும் மட்டும் தமிழை வளர்க்காது. நடைமுறையில் களத்தில் இறங்கி பங்காற்றுவதே தமிழ் நிலைத்து நிற்க ஒரே வழி எனலாம்.
—
திவ்யா குணசேகரன்