சில்லுவின் கதை 8. பல தனிப்பயன் சில்லுகளுக்குப் பதில் ஒரு நிரல்படு சில்லு

சில்லுவின் கதை – பேராசிரியர் ராஜேஷ் ஜெலே – ஐஐடி பம்பாய் (Chip Story – Prof. Rajesh Zele – IIT Bombay)

கைவினைஞர் வேலை போலவே அக்காலத்தில் சில்லு வடிவமைப்பும் கையால் செய்யப்பட்டது

0:00 பல்வேறு வகையான தனிப்பயன் வடிவமைப்பு சில்லுகளுக்குப் பதிலாக, தனிப்பயனாக்கக்கூடிய மென்பொருளுடன் கூடிய நிரல்படுத்தக்கூடிய சில்லு என்ற கருத்தை டெட் ஹாஃப் (Ted Hoff) முன்வைத்ததற்காகப் பாராட்டப்படுகிறார். இதைத்தான் நுண்செயலி (microprocessor) என்று சொல்கிறோம். இன்டெல் 4004 தான் முதல் வணிக நுண்செயலி. ஃபெடரிகோ ஃபாகின் (Federico Faggin) இந்தச் சில்லுவவின் முதன்மை வடிவமைப்பாளர். அந்தக் காலத்தில் வடிவமைப்பு கையால் செய்யப்பட்டதால், அதை முடிக்க ஆறு மாதங்கள் ஆனது. நான் IIT பம்பாயில் எனது B.Tech. திட்ட வேலைக்காக இதுபோன்ற ஒரு வடிவமைப்பைச் செய்தேன். எனவே, ரூபிலித் (rubylith) ஒளிமறைப்புப் படலத்தைக் (masking film) கையால் குறியிட்டு வெட்டுவது எவ்வளவு கடினம் என்பது எனக்குத் தெரியும்.

டிரான்சிஸ்டரின் அளவு சிறுத்தால் செலவு ஏறும் மேலும் எளிதில் சேதமாகும் என்ற பரவலான கருத்தை எதிர்த்தார்

2:30 கால்டெக்கில் (Caltech) பணிபுரிந்த கார்வர் மீட் (Carver Mead) ஒரு சாதன நிபுணர். காலியம் ஆர்சனைடு (Gallium Arsenide) மின்னணுச் சுற்றுகள், MOSFETகள் போன்றவற்றில் அவர் பணியாற்றியுள்ளார். அக்காலத்தில், டிரான்சிஸ்டரின் அளவு சிறியதாகும்போது, அதைத் தயாரிக்க செலவு கூடும், மேலும் எளிதில் சேதமாகும் என்பது பொதுவான கருத்தாக இருந்தது. இதற்கு அவர் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தார். மனித மூளையின் செயல்பாடுகளை மின்னணுச் சுற்றுகளில் மாதிரியாக உருவாக்குவதிலும் அவர் பணியாற்றினார்.

கணினி கட்டமைப்பில் பல அடிப்படைக் கருத்துகளை உருவாக்கினார் 

5:30 லின் கான்வே (Lynn Conway) கட்டளைகளை வரிசையை மாற்றி (Out Of Order – OOO) செயல்படுத்தல் கருத்தாக்கத்தை முன்வைத்தார். இதுவே பின்காலத்தில் மீத்திறன் கணினிகள் (supercomputers) உருவாக வழிவகுத்தது. 1965 ஆம் ஆண்டில், கணினி கட்டமைப்பில் இயங்குநிலைக் கட்டளை நிர்ணயிப்பு (Dynamic Instruction Scheduling – DIS) என்ற கருத்தையும் அவர் முன்வைத்தார். இவை இன்று எல்லா இடங்களிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. 1973 ஆம் ஆண்டில், Xerox PARC இல் பணிபுரிந்தார். இந்த ஆராய்ச்சி மையம்தான் தனிநபர் கணினி (PC) சுட்டியையும், வரைகலை பயனர் இடைமுகங்களில் “நீங்கள் காண்பது நீங்கள் பெறுவது (What You See Is What You Get – WYSIWYG)” என்ற கருத்தாக்கத்தையும் உருவாக்கியது. மிக முக்கியமாக, சில்லு வடிவமைப்பை நாம் தரப்படுத்த வேண்டும் என்றும், கணினி சில்லுவை வடிவமைக்கக் கணினி நிரலைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார். இவர் திருநங்கை எனபதால் வேலை இழப்பு முதலான பல பிரச்சினைகளைச் சந்திக்க நேர்ந்தது.

சில்லு வடிவமைப்பைப் பலரும் அணுகக்கூடியதாக மாற்றுவதற்கு உழைத்தனர்

10:02 ஒரே வில்லை உற்பத்தியைப் பல வடிவமைப்பாளர்களிடையே பகிர்ந்து கொள்ளும் கருத்தை அவர் உருவாக்கினார், இதனால் வில்லை தயாரிக்கும் பெரும் செலவைப் பகிர்ந்து கொள்ள முடியும். இது MOSIS (Metal Oxide Semiconductor Implementation Service) என்ற பெயரில் ஒரு சேவையாக செயல்படுகிறது. எனது PhD ஆய்வறிக்கைக்காக நான் வடிவமைத்த சில்லுவை உற்பத்தி செய்ய இந்த MOSIS சேவையைப் பயன்படுத்தினேன். இந்த வழியில் சில்லு வடிவமைப்பு முறையை மேம்படுத்துவதற்கு அவர் பெரிய அளவில் பங்களித்தார். கார்வர் மீட் மற்றும் லின் கான்வே இணைந்து “Introduction to VLSI Systems” என்ற நூலை எழுதினர். அவர்களின் நோக்கம் மிகவும் எளிமையானது – IC வடிவமைப்பை எவ்வாறு தரப்படுத்துவது மற்றும் அதை எவ்வாறு அதிகமான மக்களுக்கு அணுகக்கூடியதாக ஆக்குவது.

தமிழாக்கம்: இரா. அசோகன்

%d bloggers like this: